இலங்கையில் இளைஞர் அரசியல்: அடிப்படைப் பின்னணி மற்றும் தாக்கங்கள் : விவரணப் பகுப்பாய்வு. (Youth Politics in Sri Lanka: Background and Implications: A Narrative Analysis)
அறிமுகம்
இலங்கைச் சூழலில் இளைஞர்கள் என்ற வரையறை சற்று தெளிவற்றதாகவே உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 15 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் இளைஞர்களாக வரையறுக்கப்படுகிறார்கள். மேலும் உலக சுகாதார அமைப்பு 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களை இளைஞர்கள் மற்றும் 10-19 வயதுக்குட்பட்டவர்களை இளம் பருவத்தினராக அங்கீகரிக்கிறது. இலங்கையின் மக்கள்தொகை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 15 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இளைஞர் சனத்தொகை என வரையறுக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர்களுக்கான இந்த 15 முதல் 29 என்ற வரையறையை ஏற்றுக் கொண்டுள்ளது.
இலங்கை போன்ற வளரும் நாடுகளின் மக்கள்தொகை அமைப்பைக் கருத்தில் கொண்டு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியைப் பேணுவதில் இளைஞர்கள் உறுதியான பங்கை வகிக்கின்றனர். உதாரணமாக இளைஞர் பாராளுமன்றம் ஊடாக பேணுகின்றனர். இலங்கையின் இளைஞர் சனத்தொகையின் வீதம் தற்சமயம் வீழ்ச்சியடைந்து வருகின்ற போக்கு காணப்படுகிறது. காரணம் அதிகமான தற்கொலை, காணாமல் போதல், போதை பாவனை என்பனவாகும்.
1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 15 முதல் 29 வயதிற்குட்பட்டவர்களின் சதவீதம் 27.96 சதவீதமாக இருந்தது. 1981 இல் 29.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, இந்த வயதுப் பிரிவினர் 23 வீதம் மற்றும் இலங்கையில் ஏறக்குறைய நான்கில் ஒருவர் இளைஞர் என வரையறுக்கப்பட்டுள்ளனர்.
1991 மற்றும் 2017 க்கு இடையில், இலங்கையில் 15 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 65 சதவீதமாக இருந்தது. அதே சமயம் 15 வயதுக்குட்பட்ட மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட சார்புடையவர்களின் எண்ணிக்கை தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக கூறப்படுகிறது. சீனா, இந்தியா, வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் தங்கள் பொருளாதார மற்றும் மனித வள மேம்பாட்டுக்காக வளர்ச்சியை பயன்படுத்தியுள்ளன. இதனால் அரசியல், பொருளாதார, சமூக ரீதியான சவால்களுக்கு இளைஞர்கள் முகம்கொடுத்து செயற்பட கூடியதாக உள்ளதாக கூறப்படுகிறது.
இளைஞர்கள் வரைவிலக்கணம்
இளைஞர் என்பது ஒருவர் இளமையாக இருக்கும் காலமாகும். அதாவது குழந்தை பருவத்திற்கும் முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட காலமாகும். ( https://www.merriam-webster.com/dictionary/youth). இளைஞர் அரசியல் என்பது இளைஞர்களின் அரசியல் பிரவேசமும், அதுசார்ந்த செயற்பாடுகளுமாகும். இந்த செயல்பாட்டில் இளைஞர்கள் பங்கேற்கும் போது இளைஞர் அரசியல் பங்கேற்பாக மாறுகின்றன. இளைஞர்கள் பெரும்பாலும் அரசியலில் அக்கறையற்றவர்களாகவும் ஆர்வமற்றவர்களாகவும் இன்று காணப்படுகிறார்கள்.
குறிப்பாக இலங்கையில் இளைஞர்கள் பாராளுமன்றத்தில் 4% குறைவாக உள்ளார்கள். பெண்கள் இல்லவே இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர்களின் அரசியல் பங்கேற்பு படிப்படியாக குறைந்து வந்தாலும், இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கும், தங்கள் குரலை ஒலிக்கச் செய்வதற்கும் இன்னும் வழிகள் உள்ளன. ஆனாலும் அவர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்பதே விமர்சனமாகும்.
இதன்படி இளைஞர் அரசியல் பங்கேற்பு என்பது இளைஞர்கள் அரசியல் மற்றும் பொதுக் கொள்கையில் தங்கள் செல்வாக்கை செலுத்தும் திறன் ஆகும். இது இலங்கையை பொறுத்தவரை மிகவும் குறைவாக காணப்படுகிறது. ஆரம்பத்தில் இலங்கையில் இளைஞர் அரசியல் காணப்பட்டாலும், அது இலங்கையில் வன்முறை கலாசாரத்தை உருவாக்கியது என்ற காரணத்தால் நிறைய அமைப்புகள் இலங்கை அரசு தடை செய்தது. உதாரணமாக இடதுசாரி சிந்தனையுள்ள கட்சிகளை குறிப்பிட முடியும்.
இலங்கையில் சிங்கள இளைஞர்கள் அரசியல் பிரவேசமும், காரணங்களும்
1956 இல் ஆட்சிக்கு வந்த மஹாஜன எக்சத் பெரமுன (MEP) எனும் இடதுசாரி கட்சி இலங்கை இளைஞர்களின் அரசியல் செயற்பாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறித்து நின்றது. முன்னர் ஆங்கில மொழிக்கு மட்டுப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகக் கல்வியை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு, இரண்டு புதிய பல்கலைக்கழகங்களைத் திறப்பது மற்றும் சர்வஜன வாக்குரிமையின் வயது எல்லையை 21 இலிருந்து 18 ஆகக் குறைத்தது(Elections Amendment Act No, 11 of 1959.) இது இளைஞர்களின் பரந்த அரசியல் பங்கேற்புக்கு பங்களித்தது.
இடதுசாரி அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் கட்சிகளுடன் இணைந்த மாணவர் அமைப்புகளை பல்கலைக்கழகங்களுக்குள் உருவாக்கத் தொடங்கின. முதலாவது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக கருதப்படும் ஜாதிக சிஷ்ய சங்கமயத்தை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நிறுவியது (1943).
மகாஜன எக்சத் பெரமுனவின் மாணவர் ஒன்றியமும் மாணவர் ஒன்றியத்தில் அதிகாரத்தைப் பெற முடிந்தது. மாணவர்கள் மார்க்சியம், ஸ்ராலினிசம், ட்ரொட்ஸ்கிசம் மற்றும் மாவோயிசம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட காலகட்டமாக இது காணப்படுகிறது. அவர்களின் அரசியல் செயல்பாடு பல்கலைக்கழகங்களின் உள் விவகாரங்கள் தொடர்பான போராட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. 1965 க்குப் பிறகு, இளைஞர் அரசியல் என்பது சித்தாந்தத்தை தாண்டி நடைமுறை சிக்கல்களால் வரையறுக்கப்பட்டது
அதேநேரம் மிகவும் தீவிரமான வடிவங்களில் வெளிப்பட்டது. பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் புரட்சிகர அரசியலில் ஈடுபட்டுள்ளனர். வரலாற்று ரீதியாக, பிரித்தானிய காலனித்துவ சகாப்தத்தின் இறுதியில், மேற்கத்திய நாடுகளில் கல்வியைத் தொடர்ந்த, வெளிநாட்டிலிருந்து திரும்பிய படித்த இலங்கை இளைஞர்கள், இலங்கையில் ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கத்தினர் தலைமையிலான அரசியலமைப்பு சீர்திருத்த இயக்கத்தில் இணைந்தனர். உதாரணமாக மனிங், டொனமூர் சீர்திருத்த மற்றும் யாப்பு காலப்பகுதியில் காணலாம்.
தேசிய சுதந்திரம் மற்றும் சோசலிசத்தின் மாற்று நோக்கங்களை அவர்கள் அறிமுகப்படுத்தினர். மேலும் தேசிய சுதந்திரம் மற்றும் சோசலிசத்தை நிறுவ லங்கா சமசமாஜ கட்சி 1935 இல் உருவாக்கப்பட்டது. இந்த செயல்முறையின் முன்னோடிகளில் பிலிப் குணவர்தன, கலாநிதி என்.எம். பெரேரா, கொல்வின் ஆர். டி சில்வா மற்றும் கலாநிதி எஸ்.ஏ.விக்ரமசிங்க ஆகியோர் அடங்குவர்.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக இலங்கையில் சட்டமன்றத்தில் மட்டுமன்றி வெளியிலும் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்தக் காலப்பகுதியில் யாழ் இளைஞர் சங்கம் வட மாகாணத்தில் சர்வஜன வாக்குரிமையின் கீழ் நடைபெறவிருந்த முதலாவது அரச சபைக்கான தேர்தலைப் புறக்கணித்ததுடன் டொனமூர் அரசியலமைப்பை நிராகரித்தது.
1971 இல், ஜனதா விமுக்தி பெரமுனா(JVP) ஆயுதமேந்திய எழுச்சியைத் தொடங்கி அரச அதிகாரத்திற்கு சவால் விடுத்தது. இந்த "வன்முறை அரசியல் உந்துதல்" எழுச்சியானது, இலங்கையில் நிலவிய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புமுறைக்கு எதிராக, முக்கியமாக சிங்கள பௌத்தர்களாக இருந்த, படித்த கிராமப்புற இளைஞர்களின் எதிர்த்தார்கள். ஜே.வி.பி தனது இரண்டாவது ஆயுதப் போராட்டத்தை 1987-89 இலிருந்து மிகவும் வன்முறை வடிவில் ஆரம்பித்தது. இதன் வன்முறை மிகவும் பரவலாக இருந்தது.
1970களின் முற்பகுதியில் இருந்து, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் இளைஞர்கள் நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்புக்கு எதிராக வன்முறையில் போராடினர். பாராளுமன்ற எல்லைக்கு வெளியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களின் போராட்டம் இறுதியில் நீடித்த கொரில்லா போராகவும் பயங்கரவாதமாகவும் மாறியது. உதாரணமாக 30 ஆண்டு போர் இதன் விளைவாகும்.
சிங்கள இளைஞர் அரசியலுக்கான சமூக, பொருளாதார அடிப்படைகள்.
வேலையில்லாத் திண்டாட்டம், குறிப்பாக, படித்த கிராமப்புற இளைஞர்களிடையே, கிராமப்புற வறுமை மற்றும் பின்தங்கிய நிலை, பரவலான நிலமின்மை போன்றவற்றையே இளைஞர் அரசியலுக்கான அடிப்படையை வழங்கியது. ஜனதா விமுக்தி பெரமுனாவின் (ஜேவிபி) இரண்டு கிளர்ச்சிகளுக்கு முக்கிய காரணம் சமூக அநீதி மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிர்ப்பு என்பனவாகும்.
சமூக நீதி இருந்திருந்தால், இடதுசாரி தலைவர்களுக்கு இளைஞர்களை ஈர்ப்பது மிகவும் கடினமாக இருந்திருக்கும். ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சிக்குப் பின்னர், அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச, கிளர்ச்சிக்கான காரணங்களை ஆராய்வதற்காக ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். தகுதியானவர்களுக்கு உரிய பதவிகளை வழங்க வேண்டும் என்பது ஆணையகத்தின் பரிந்துரைகளில் ஒன்றாகவும் காணப்பட்டது. இதன் அடிப்படையில் இளைஞர் அரசியலுக்கான காரணத்தை அறிய முடிந்தது.
1971 இல் இலங்கையில் வேலையின்மை விகிதம் 20% ஆக இருந்தது. அதற்கு மேல் கிராமப்புற இளைஞர்கள் கேவலமாக நடத்தப்பட்டனர். அந்தச் சூழல் ஜே.வி.பி காரர்களுக்கு நல்ல வளத்தை உருவாக்கியது. நாட்டில் 1945 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறையும் பின்னர் 1960 களில் அறிமுகப்படுத்தப்பட்ட தாய்மொழியில் பள்ளிக் கல்வி (ஸ்வபாஷா) கொள்கையும் குறிப்பாக கிராமப்புறங்களில் சிங்களவர்களின் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது.
மஹா வித்தியாலயா மற்றும் மத்திய மகா வித்தியால போன்ற பள்ளிகளின் எண்ணிக்கை கிராமப்புறங்களிலும் சிறிய நகரங்களிலும் அதிகரித்தது. இதனால், கிராமப்புறங்களில் இருந்து வரும் குழந்தைகள் தங்கள் சொந்த மொழியில் கல்வி கற்று, அவர்களில் சிலருக்கு பல்கலைக் கழகங்களில் சேர வாய்ப்பு கிடைத்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவற்றில் விஞ்ஞான ஆய்வகங்களோ அல்லது விஞ்ஞான மற்றும் கணிதப் பாடங்களுக்கான கல்வி வசதிகளோ இல்லை. இதனால் பெரும்பாலான கிராமப்புறக் குழந்தைகள் சமூக விஞ்ஞான பாடப்பிரிவில் மட்டுமே தங்கள் படிப்பைப் பின்பற்ற வழிவகுத்தது.
எனவே பல்கலைக்கழகங்களில் உயர்தரப் படிப்பையோ அல்லது பட்டப்படிப்பையோ முடித்த பின்னர் அவர்கள் வேலையில்லாத படித்த இளைஞர்களாக மாறி நாட்டின் ஆளும் வர்க்கத்தை வெறுக்க வழிவகுத்தது.
1. இலங்கையில் மக்கள்தொகையின் விரைவான வளர்ச்சி.
1981 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள் தொகை மொத்த மக்கள்தொகையில் 21.5 சதவீதமாக உள்ளது. அன்று 75 சதவீதத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் கிராமப்புற துறையில் வாழ்ந்தனர். இலங்கை இருபதாம் நூற்றாண்டு முழுவதும் நகரமயமாக்கலின் மெதுவான தாக்கத்தை அனுபவித்தது.
இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் இலங்கையின் மக்கள்தொகையில் இளைஞர்களின் அதிக சதவீதமானது மற்றொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆகும். 1946 ஆம் ஆண்டில், 15 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களுக்கான புள்ளிவிவரங்கள் 1.3 மில்லியனாக இருந்தன. ஆனால் 1971 முதல் 2.6 மில்லியனாக இருமடங்காக உயர்ந்தது. இதனால் இளைஞர் முக்கிய வகிபங்கினை அரசியலில் ஏற்படுத்த காரணமானது.
2. கல்வி மற்றும் கல்வி சீர்திருத்தங்களின் விரைவான விரிவாக்கம்.
கல்வியின் விரைவான விரிவாக்கம் சமூக அணிதிரட்டலின் மற்றொரு அம்சமாகும். 1945இல் ஆரம்ப பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1951 இல் உள்ளூர் மொழிகளின் பயன்பாடு மற்றும் 1960 இல் கல்வியில் அரசின் கட்டுப்பாடு ஆகியவை பாடசாலை சேர்க்கை விரிவாக்கத்திற்கு ஓரளவு காரணமாக இருந்தன.
1945 மற்றும் 1970 க்கு இடைப்பட்ட காலத்தில் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலை சேர்க்கைகள் சுமார் 867,000 இலிருந்து 2,716,000 ஆக அதிகரித்தன. ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியின் விரிவாக்கத்தைத் தொடர்ந்து, 1959 ஆம் ஆண்டு முதல் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கற்பித்தல் தேவைப்படும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகக் கல்வி திறக்கப்பட்டபோது, பல்கலைக்கழகங்களில் நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
மேலும், 1942 இல் இருந்து பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1975 இல் ஐந்து மற்றும் 1983 இல் எட்டு காணப்பட்டது. தற்போது, திறந்த பல்கலைக்கழகம் உட்பட நாட்டில் 17(வவுனியா உட்பட) பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதன் விளைவாக, 1948 இல் 1,612 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 1970 இல் 14,000 ஆக உயர்ந்தது. 1978 இல் இது 17,449 ஆகவும், 1989/90 இல் 22,480 ஆகவும் மதிப்பிடப்பட்டது. கல்வி சீர்திருத்தங்கள் கிராமப்புறங்களில் இருந்து ஒரு பெரிய மாணவர் மக்களை உருவாக்கியது.
எனவே, வேலை வாய்ப்புகள் குறைந்து கல்வியை முடித்த இளைஞர்கள் முன்பு நிறைவேற்றப்பட்ட அதிக எதிர்பார்ப்புகளை இன்னும் கொண்டிருந்தனர். அதிக சமூக அணிதிரட்டலின் விளைவாக, இளைஞர்களிடையே அபிலாஷை வேகமாக அதிகரித்தது. எனவே, இந்த உயர்ந்த அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய உயர் மட்ட பொருளாதார வளர்ச்சி அவசியம். இலங்கையில் அது காணப்படவில்லை. இதனால் இலங்கை அரசியலுக்கு எதிராக செயற்பட்டனர்.
3. வறுமை.
உலக வங்கியின் அறிக்கையின்படி, 1970களின் இறுதியில் இலங்கையானது உலகின் மிக ஏழ்மையான முப்பத்தாறு நாடுகளில் குறைந்த வருமானம் கொண்ட நாடாக இருந்தது. சீரழிந்துவரும் மற்றும் சில சமயங்களில் தேக்கமடைந்த பொருளாதாரம் புதிய தலைமுறையினருக்கு அவர்களின் கல்விப் பின்னணிக்கு ஏற்ப அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை இழந்தது.
4. வேலையின்மை:
குறிப்பாக கிராமப்புறங்களில் 1959 முதல் 1960 வரை உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி மொத்தம் 340,000 பேர் வேலையில்லாதவர்கள், அவர்களில் 80 சதவீதம் பேர் கிராமப்புறங்களிலும், 20 சதவீதம் பேர் நகர்ப்புறங்களிலும் இருந்தனர். 250,000 ஆண்களும் 90,000 பெண்களும் இருந்தனர். நாட்டின் பிரச்சினைகளால் முன்வைக்கப்படும் சவால்களை எதிர்கொள்ள பொருளாதார வளர்ச்சியின் போதாமை, முக்கியமாக படித்த இளைஞர்களிடையே விரக்தி உணர்வை உருவாக்கி வளர்த்தது.
5. அரசியல் கட்சிகள் உயர்குழாம் நோக்குநிலையைக் கொண்டவை.
1931 இல் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டமை, 1948 இல் பிரித்தானிய அரசிடமிருந்து சுதந்திரம் பெற்றமை, வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரி பாராளுமன்ற முறையின் தழுவயமை, ஆகியவை சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்த அரசியல் கட்சிகளை உருவாக்கியது.
மத்திய-வலது ஐக்கிய தேசயக் கட்சி (UNP) மற்றும் மத்திய-இடது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆகியவை நாட்டில் உள்ள இரண்டு பெரிய அரசாங்கக் கட்சிகளாகும். 1948 முதல் 1956 வரையிலும், 1965 முதல் 1970 வரையிலும் ஐ.தே.க ஆட்சியில் இருந்தது, ஸ்ரீ.ல.சு.க 1956 முதல் 1960, 1960 முதல் 1965 மற்றும் 1970 முதல் 1977 வரை ஆட்சியில் இருந்தது. 1977 முதல் 1977 வரை ஐ.தே.க ஆட்சியில் இருந்தது. 1970க்கு முற்பட்ட தசாப்தத்தில் அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்ட வளர்ச்சி, புதிய வர்க்கங்களை அந்நியப்படுத்துவதற்கும், ஜே.வி.பி, எல்.ரீ.ரீ.ஈ போன்ற அமைப்புகளை உருவாக்குவதற்கும் பெரும் பங்காற்றியது.
முக்கிய அரசியல் கட்சிகள் உயர்குழாம் பின்னணியில் இருந்து வந்த மூத்த அரசியல்வாதிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன. கிராமப்புற இளைஞர்கள் தங்கள் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை சிறிதும் இல்லாமல் விட்டுவிட்டனர். அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்றத்தில் முடிவெடுக்கும் பதவிகள் இளைய வயதினருக்கு அணுக முடியாததாக இருந்தது. இந்த தலைமுறை இடைவெளி அரசியலின் முக்கிய துறைகளில் பிரதிபலித்தது. இதனால் அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் செயற்பாடுகளில் 1971, 1988 காலப்பகுதியில் சிங்கள இளைஞர்கள் மேற்கொண்டனர்.
தமிழ் இளைஞர்கள் அரசியல்
அன்றைய வயது வந்தவர்களின் அரசியல் நடவடிக்கைகள் இந்த இலங்கை அரசாங்கத்தின் அரசியல் ஓட்டத்திற்கு ஒப்பானதாக இல்லை என்று அன்றைய இளைஞர்கள் தீர்மானித்ததன் காரணமாகத்தான் 1980களுக்குப் பின் பாரிய போராட்டங்கள் இடம்பெற்றன.
எழுபதுகளின் முற்பகுதியில் தமிழ் அரசியல் அரங்கில் தமிழ் இளைஞர்களின் அரசியல் வன்முறை, பின்பு காலப்போக்கில் ஒழுங்கமைவான எதிர்ப்பு இயக்கமாக வடிவெடுத்தது. தீவிரவாத இளைஞர்களின் இந்த அரசியல் வன்முறையானது பழமைபேண் தமிழ்த் தலைமைக்கும் சரி சிங்கள ஒடுக்குமுறை ஆட்சியாளருக்கும் சரி சிம்ம சொப்பன அரசியல் யதார்த்தமாகத் தோற்றம் எடுத்தது.
மாறி மாறி ஆட்சிபீடம் அமர்ந்த சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறைக் கொள்கைகளுக்கு நேரடியாகப் பலிக்கடாவாக ஆக்கப்பட்ட காரணத்தாலேயே தமிழ் இளைஞர்களிடையே தீவிரவாதக் கடும் போக்கும், வளைந்து கொடாத எதிர்ப்புணர்வும், வன்முறையும் தலைதூக்கின. படித்த தமிழ் இளைஞர்களிடையே நிலவிய வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நிரந்தரமான விரக்தியையும், வழி தெரியாத எதிர்காலத்தையும் அவர்கள் எதிர்கொண்டு நின்றார்கள்.
அரசாங்கம் வகுத்த பாகுபாடான “தரப்படுத்தல்” திட்டமும் தனிச் சிங்களச் சட்டமும் தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் உயர்கல்விக்கான வாயில்களையும் நிரந்தரமாகவே மூடிவிட்டன.
ஒருபுறம் வேலைவாய்ப்பின்மையால் ஏற்பட்ட விரக்தி, மறுபுறம் உயர்கல்வி வாய்ப்பின்மையால் ஏற்பட்ட அங்கலாய்ப்பு, இன்னொரு புறம் அந்நிய மொழித் திணிப்பால் ஏற்பட்ட ஆத்திரம் ஆகியன தமிழ் இளம் சமூகத்திற்கு ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இது இளைஞர்களின் தீவிர அரசியலுக்கான அடித்தளத்தையும் இட்டு இருந்தது. இந்தப் பழைமையான நிலையிலிருந்து விடுபட்டு தமது வாழ்க்கையை முற்றாக மாற்றியமைக்கக்கூடிய ஒரு புரட்சிகரமான அரசியல் நடைமுறையை தாம் தழுவ வேண்டுமென தமிழ் இளைஞர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
அரச ஒடுக்குமுறை தீவிரமடைந்து வந்த அந்நெருக்கடியான காலகட்டத்தில் ஆயுதப் போராட்டம் வாயிலாக தமிழ்த் தேசத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்பதே தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த ஒரே வழியென அவர்கள் புரிந்து கொண்டார்கள். எனவே, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர் தாயகம் பிரிந்து சென்று தனி அரசை நிறுவவேண்டும் என்ற கோரிக்கையை தமிழர் ஐக்கிய முன்னணித் தலைவர்கள் முன்வைக்க வேண்டுமென அவர்களுக்கு அழுத்தம் கொடுத்த புரட்சிகரத் தமிழ் இளைஞர்கள், தமது தீவிரவாதப் போராட்ட உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அரசியல் வன்முறையில் குதித்தார்கள்.
எழுபதுகளின் முற்பகுதியில் வெளிப்பாடு கண்ட தமிழ் இளைஞரின் அரசியல் வன்முறையை அரச ஒடுக்குமுறைப் பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிரவாதக் கிளர்ச்சியாகவும், தமிழரின் அரசியல் போராட்ட வடிவங்களில் ஒன்றாகவும் பார்க்க வேண்டும் என்று வாதிட்டார்கள். தமிழ் இளம் சமூகத்தினரிடையே வளர்ச்சி கண்ட தீவிரவாதமும், பொறுமையிழந்த ஆவேசமும், கிளர்ச்சிப் போக்குமே எல். ரி. ரி. ஈ. அரசியல் சுதந்திரம் என்ற இலட்சியப் பயணத்தை துரிதப்படுத்த காரணமானது. இதற்கு சில காரணிகள் தாக்கம் செலுத்தியது. அவையாவன,
தமிழர்களின் சமஷ்டி கோரிக்கையும், அரசாங்க எதிர்ப்பும்
சுதந்திரத்திற்கு முன்னர் சிங்களவர்களே சமஷ்டி கோரிக்கை முன்வைத்தார்கள். ஆனாலும் சுதந்திரத்திற்கு பின்னர் வந்த ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுப்பதற்கோ, சுயாட்சியை வழங்குவதற்கோ மனப்பூர்வமாக விரும்பவில்லை. தமிழர்கள் அதற்கான கோரிக்கையை முன்வைத்த போதெல்லாம் அதனை அரசியல் இலாபத்திற்காக அல்லது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழியாகவே அதனை பயன்படுத்தினர். எனினும் முரண்பாட்டுத் தீர்வினை பெற்றுத்தர பலவித முயற்சிகள் செய்தாலும், அவை வெறும் கண் துடைப்பாகவே இருந்தது.
பண்டா- செல்வா ஒப்பந்தம் கொண்டு வந்த போது ஐக்கிய தேசியக் கட்சி கிழித்து எறிந்தது. லட்லி- செல்வா ஒப்பந்தமும் வீண் போனது( Yusoff et al., 2016). இதன் பின்னணியில் தமிழர்களின் இன போராட்டம் நசுக்கப்பட்டது. இதன்படி இணக்கத்தை உருவாக்க 1987 இல் இந்திய - இலங்கை உடன்பாடு ஏற்பட்டது. ஆனாலும் அதற்கு எதிர்ப்பு உருவாகின.
இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. இன ரீதியான அழிவும், அடக்குமுறைகளும் அதிகரித்தது. இதனால் அரசு மற்றும் விடுதலைப்புலிகளின் போராட்டம் நடைபெற்ற வேளையில் 2009 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது. இந்த முப்பதாண்டு போருக்கு காரணமாக அமைந்தது இனத்துவம் என்ற விடயமே. அந்த வகையில் இலங்கையின் அரசியல் செயன்முறையில் இனத்துவமானது ஒரு பிளவுபடுத்தும் காரணியாக இருந்தது என்பதே உண்மையாகும். அதுவே இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்திற்கு மூல காரணமாகும்.
தொழில், கல்வியில் பாகுபாடு
ஆட்சி பீடம் ஏறிய ஆட்சியாளர்கள் சிங்கள மக்களை கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அதிகரிக்க தமிழர்கள் தடையாக இருப்பதை உணர்ந்தார்கள். இதனால் அரசியல்வாதிகள் எல்லாவற்றிலும் இனத்துவத்தை மையமாகக் கொண்டு சிறுபான்மை இனத்தை ஒதுக்கினார்கள். தாய் மொழி கல்வியின் அறிமுகத்தை தொடர்ந்து சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்களே அதிகளவில் பல்கலைக்கழக சந்தர்ப்பத்தை பெற்றனர். பொறியியல் மற்றும் வைத்திய துறையில் 50 சதவீதத்திற்கும் மேல் தமிழ் மாணவர்களே பல்கலைக்கழகங்களில் நிரப்பினர்.
ஆனாலும் சிங்களம் மட்டும் கொள்கையில் வேரூன்றிய சிங்கள தேசியவாதிகள் தமிழர்களின் உயர்ந்த கல்வியை சகித்துக் கொள்ளாமல் கிளர்ந்தெழுந்தனர். அவர்களை திருப்திப்படுத்த அரசாங்கம் பல்கலைக்கழக தரப்படுத்தல் கொள்கையை அறிமுகம் செய்தது. இதனால் தமிழ் மாணவர்களுக்கான பல்கலைக்கழக புகு வீதம் குறைந்தது (De silva 2003, p283).
இதனால் தமிழ் இளைஞர்கள் ஆயுத போராட்டத்தில் அரசுக்கு எதிராக செயற்பட்டது (நடேசன், 2000, பக் 120). இங்கு அரசு தங்கள் இனத்துவத்தை தக்க வைக்க அரசியல் அதிகாரத்தினை பயன்படுத்தி சிறுபான்மை மக்களை கட்டுப்படுத்த முயன்றனர். இங்கு இனத்துவம் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையே பிரிவினை காரணியாக மாறி இருப்பதை காணலாம்.
இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
ஒப்பீட்டளவில் சிங்கள மாணவர்களை விட அதிக தமிழ் மாணவர்கள் உயர் கல்வி கற்றனர். இதை சீரற்ற ஒரு நிலையாக கருதிய சிங்களப் பெரும்பான்மை அரசுகள் தமிழர் வாய்ப்புக்களை சிங்கள மாணவர்களுக்கு கைமாற்ற கல்வி தரப்படுத்தல் சட்டங்களை கொண்டு வந்தார்கள். இந்த சட்டங்கள் 1967, 1971, 1979 ஆண்டுகளில் மாற்றப்பட்டன.
இலங்கையில் கொண்டு வரப்பட்ட கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் இலங்கையில் இனப்பிரச்சினை தோன்ற முக்கிய காரணங்களில் ஒன்று. இந்த சட்டம் உயர் கல்வி வாய்ப்புக்களை சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் தொகை அடிப்படையில் பிரித்தது. அதாவது அதிக புள்ளிகள் பெற்ற, திறமை வாய்ந்த தமிழ் மாணவர்கள் வாய்ப்புக்களை இழக்க, புள்ளிகள் குறைந்த சிங்கள மாணவர்கள் அந்த வாய்ப்புக்களை பெற்றனர்.
1970களின் பிற்பகுதியில் பொருளாதாரம் திறந்துவிடப்பட்டதிலிருந்து தொடங்கிய பொருளாதார நெருக்கடிக் குமிழி, மேற்கத்திய மூலதனத்தின் வரவால் உந்தப்பட்டு, 1982ல் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலையத் தொடங்கியது. 1983 ஜூலையில் நடந்த கொடூரமான இனப் படுகொலை, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப ஜெயவர்த்தனா ஆட்சியின் முயற்சியாகும். இந்த படுகொலை பின்னர் தமிழர்கள் பல சொத்துக்களை இழந்து பொருளாதார பின்னடைவை சந்தித்தனர்.
தீவிர இளைஞர் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறல்
1971, 1987- 88 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் தென்பகுதியில் தீவரமான ஆயுதப் புரட்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி, பின்னர் 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக அரசியலில் ஈடுபட்டது. 1994 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஜே.வி.பி. போட்டியிட்டு, இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றது.
சந்திாிக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய பொஜன ஐக்கிய முன்னணிக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியது. நிஹால் கலபதி ஜே.வி.பியின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யபட்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளராக பதவி வகித்த விமல் வீரவன்ச, ஜே.வி.பியில் இருந்து விலகி தேசிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தார். அதன் பின்னா் 2010 ஆம் ஆண்டு. ஜே.வி.பியில் இருந்து மற்றுமொரு குழுவினர் வெளியேறி குணரட்னம் தலைமையில் முன்னிலை சோசலிசக் கட்சியை உருவாக்கினர்.அதேவேளை, 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பிரச்சாரங்களில் ஜே.வி.பி. ஈடுபட்டது.
முள்ளிவாய்க்கால் வரை இடம்பெற்ற இறுதிப் போருக்கான முழு ஒத்துழைப்பையும் ஜே.வி.பி வழங்கியிருந்தது.அனுரகுமார திஸாநாயக்கா தலைமையிலான தற்போதைய ஜே.வி.பி. ஈழத் தமிழர் விவகாரத்தில் நிர்வாக மட்டத்தில் அதிகாரங்களை பரவலாக்கம் செய்தால் போதும் என்றே கூறி வருகின்றது. அத்துடன் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் ஜே.வி.பி. நியாயப்படுத்தி வருகின்றது.
மேற்குறிப்பிட்டவாறு தொகுத்து பார்க்கும் போது இலங்கையின் இளைஞர் அரசியல் 1970 முதல் 1990 வரையான காலப்பகுதியில் அதிகமாக இருந்ததுடன், ஆரம்ப கால இளைஞர் அரசியல் தீவிரத் தன்மை கொண்டதாக இருந்தாலும், தற்போது இளைஞர் அரசியல் பங்கேற்பு மிகவும் குறைந்து செல்வதை ஆய்வின் மூலமாக அறிய முடிகிறது.
தொகுப்பு :
S. Vithurshan,
BA(Hons), MA in Special in Political science,
Assistent lecturer,
Departement of Political science and Public policy,
University of colombo.

.jpeg)

.png)
.jpg)




Comments
Post a Comment