சர்வஜன வாக்குரிமை

சர்வசனவாக்குரிமை டொனமூர் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட முக்கியமான ஒரு சிபாரிசாகும்.இதன்படி 21 வயதை அடைந்த இலங்கை மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை ழங்கப்பட்டது.குறிப்பாக ஆண், பெண் அனைவருக்கும் இனம், மதம், மொழி வேறுபாடின்றி வாக்குரிமை வழங்கப்பட்டது.

சர்வசன வாக்குரிமை பிரித்தானிய குடியேற்ற நாடுகளில் இலங்கைக்கே
முதன்முதலில் வழங்கப்பட்டது.சர்வசன வாக்குரிமை வழங்குவதனை பல அரசியல் தலைவர்கள் எதிர்த்த போதும் கூட டொனமூர் குழு அனைவருக்கும் வழங்கியது ஒரு சிறப்பான செயலாகும்.

இவ் விதப்புரைக்கு அடிப்படையாக அமைந்த காரணிகள்

  • கல்வித் தகைமையை அடிப்படையாகக் கொண்டு கற்றவர்களுக்கு மட்டும்
  • வழங்கப்படும் வாக்குரிமை முறை தவறானது.
  • மக்கள் அனைவரும் பொறுப்புணர்சியுடன் ஆட்சியில் பங்கெடுப்பதன் மூலம்
  • அவர்கள் மத்தியில் அரசியல் அறிவும் அக்கறையும் வளர்ச்சியடையும்.
  • வறுமை நிலையில் பின்தங்கியிருக்கும் மக்கள் குழுவை அரசியல் ரீதியாகப்
  • பலப்படுத்தி அவர்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுத்தல்.
  • கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான சமமற்ற அபிவிருத்திகளை இல்லாது ஒழித்தல்.
  • அதாவது இலங்கையில் பொது நிர்வாகம் சமமற்ற முறைகளில் காணப்பட்டது.
  • நகரங்களில் காணப்பட்ட வளர்ச்சியை கிராமங்களில் காண முடியவில்லை.
  • இம்முரண்பாட்டை இல்லாமல் செய்யவே வாக்குரிமை வழங்கப்பட்டது.
  • வரையறுக்கப்பட்ட வாக்குரிமையின் கீழ் இடம்பெற்ற உயர்குழாம் வகுப்பினரின் சில்லோராட்சி அரசியல் உரிமைகளை இல்லாது ஒழித்தல்.
  • இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம் இலங்கையிலும் காணப்பட்டது.
  • இலங்கை மக்கள் அப்போராட்டத்தில் ஈடுபடுவதனை தவிர்ப்பதற்காக அரசியலில் அவர்களை உள்வாங்க வேண்டியிருந்தது.
  • இக்காலத்தில் பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சியில் இருந்ததனால் அது சர்வசன வாக்குரிமையை ஆதரவாக பார்த்தது.
  • இலங்கை அரசியலில் சமத்துவம் முற்றாக உணரப்படாததன்  காரணமாக மக்களின் பெரும்பகுதியினருக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டிய பொறுப்பு காணப்பட்டது.

சர்வஜன வாக்குரிமை எதிர்த்தமைக்கான காரணங்கள் 

  • வாக்குரிமை விரிவடைந்து செல்லும் போது இலஞ்சம், ஊழல் என்பன அதிகரிக்கும். 
  • சொத்துடையவர்களே நாட்டுப்பற்றுடையவர்களாக இருப்பார்கள் எனவே அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும். 
  • கல்வியறிவு அற்றவர்களுக்கு வாக்குரிமை வழங்கினால் அவர்கள் அதனை தவறான வழிகளில் பயன்படுத்த முயற்சிப்பார். எனவேதான் கல்வியறிவு படைத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும். 
  • பெண்கள் அரசியலில் ஈடுபாடு அற்றவர்கள் எனவே அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடாது.
  • வாக்குரிமை 25 வயதுக்கு மேற்பட்டடோருக்கே வழங்கப்பட வேண்டும். 
மேற்கூறிய காரணங்கள் நிராகரிக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்குமான 
நியாயங்களை டொனமூர் குழு முன்வைத்தது. 

  • பிரித்தானிய அரசியல் வரலாற்றில் வாக்குரிமை விஸ்தரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஊழல் குறைந்து வந்து அருகிப்போனது. மேலும் வாக்குரிமையை உபயோகிப்பதன் மூலம் அரசியல் அறிவு மக்களிடையே வளரும். 
  • சொத்துக்கள் உடையோர் நாட்டுப்பற்றுடையோர் எனக் கூற முடியாது  சொத்துக்கள் அற்றவர்களும் நாட்டுப்பற்றுடையவர்களாக உள்ளனர். 
  • கல்வியறிவு அற்றவர்களில் புத்திக்கூர்மையானவர்களும் உள்ளனர். அவர்கள் வாக்குரிமையை தவறாக பயன்படுத்துவார் எனக் கூறமுடியாது.
  • கல்வியறிவு பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் போனது அவர்களது பிழையல்ல அது அரசாங்கத்தின் பிழை வாக்குரிமை விரிவடையும் போது கல்வியிலும் அபிவருத்தி ஏற்படும். 
  • பெண்களுக்கென தனியான பிரச்சினைகள் உள்ளன. ஆண் பெண் சமத்துவத்துக்கு அப்பால் இப்பிரச்சினைகளின் தாக்கம் முக்கியமானவையாகும். குழந்தைகள் 
  • இறப்புவீதம், குழந்தைகள் நலன், பெண்களுக்கான மருத்துவம், கற்பிணிகளுக்கான உதவி போன்றவற்றில் அரசின் கவனம் செல்ல வேண்டும். 
  • 21 வயதையடைந்த ஒருவர் முதிர்ச்சியடைந்து வாழ்க்கைக் கடமைகளை ஏற்றுக்கொள்ள தகுதியுடையவராக இருப்பார் என்று உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 21 வயதைடைந்தவர்கள் ஏற்கனவே வாக்குரிமை பெற்றிருந்தனர்.

நிராகரித்து மேலும் இரண்டு காரணங்களை சுட்டிக்காட்டினர். 
  • இலங்கையில் சாதியால் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் வாழ்க்கைச் சூழல் மிக மோசமானதாகவும் துன்பகரமானதாகவும் காணப்படுகிறது. இவர்கள் தங்கள் துன்பங்களிலிருந்து நீங்கி குடிமக்களோடு சேர்ந்து வாழ வேண்டுமாயின் அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். 
  • மன்னரின் அரசாங்கம் இலங்கையிலுள்ள உயர்குழாம் வகுப்பினருக்கு மட்டுமில்லை இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. எனவே பொறுப்பாட்சியை ஒப்படைக்கும் போது வாக்குரிமை பெற்ற 4 வீதமான உயர்குழாம் வகுப்பினரிடையே ஒப்படைக்க முடியாது இதை மாற்ற இருக்கும் ஒரே ஒரு வழி சர்வசன வாக்குரிமையாகும். 
மேற்கூறிய நியாயங்களைக் கூறி இலங்கை மக்களுக்கு சர்வசன வாக்குரிமையை டொனமூர் குழு சிபாரிசு செய்த போதும் இந்திய வம்சவழிகளுக்கு வாக்குரிமை வழங்குவதில் சிங்கள உயர் குழாமினருக்கிடையே முக்கிய பிரச்சினைகள் தோன்றியது. இதனால் டொனமூர் அரசியல் திட்டத்தை இலங்கை மக்கள் ஏற்காமல் போவார்கள் என்ற பயத்தினால் டொனமூர் குழு சில முக்கிய விட்டுக்கொடுப்பை செய்தது. 

இதனால்,  இலங்கையில் வாக்குரிமை பெறுவோர் 5 வருடங்கள் தொடர்ச்சியாக இலங்கையிலே வசித்தவராக இருத்தல் வேண்டும் என விதித்தது. 

சர்வசன வாக்குரிமையின் விளைவுகள்
  • சர்வசன வாக்குரிமையால் பிரதிநிதித்துவ ஜனநாயகத்துக்கு மக்கள் பழக்கப்பட்டனர். 
  • இதனால் தேர்தல் மூலம் தங்களது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கவும் மாற்றியமைக்கவும் இலங்கை மக்கள் பழகிக் கொண்டனர்.
  • அரசியல் அதிகாரத்தை பிரயோகிப்பவர்கள் மக்களுக்குப் பொறுப்புக் கூற கடமைப்பட்டனர். அரசியல்வாதி தாம் அளித்த வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றாவிடின் மக்களின் ஒத்துழைப்பு தமக்கு கிடைக்காது என்ற விடயத்தை அடிப்படையாகக் கொண்டு பொறுப்புடன் கூடிய அரசாங்கத்துக்கு பழகிக் கொண்டனர். 
  • டொனமூர் அரசியல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசியல் கட்சிகள் தேவைப்பட வில்லை இவ்வரசியல் திட்டம் கட்சிகளின் தோற்றத்தை ஊக்குவிக்கவும் இல்லை. ஆனால் சர்வசன வாக்குரிமையை மையமாகக் கொண்டு வாக்காளர்களை ஒழுங்குபடுத்துவதற்கான தேவையை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றன. உதாரணமாக, லங்கா சமசாமாஜ கட்சி ( 1935), இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (1943) 
  • சர்வசன வாக்குரிமை மூலம் மக்கள் வலுப்பெற்றனர்.

1. மக்கள் நலன்பேண் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 
2. இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
3. தாய்மொழி போதனா மொழியாக ஆக்கப்பட்டது.
4. இலவச மருத்துவம்
5. விவசாய மானியம் வழங்கப்பட்டது. 
6. உணவு மானியம் வழங்கப்பட்டது. 
7. விவசாய குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. 
9. தொழிலாளர் நலன்பேண் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டன. 
உதாரணமாக, 
தொழிலாளர் நட்டயீட்டு கட்டளைச் சட்டம் (1934), சம்பள கட்டளைச் சட்டம்( 1941 )

சாதாரண மக்களின் அரசியல் அறிவு வளர்ச்சியடைந்தமை:
அதாவது சர்வசன வாக்குரிமை மூலம் அரசியலில் பங்குபெற வாய்ப்பு ஏற்பட்டது. வேட்பாளர்கள் மக்களிடையே மேற்கொள்ளும் பிரச்சாரம் மூலம் மக்கள் வேட்பாளர்களை நோக்கி கேள்விகளை கேட்கத் தொடங்கினர். இத்தகைய செயற்பாட்டால் மக்கள் இயல்பாகவே அரசியல் அறிவைப் பெற்றனர்.

சாதாரண மக்களும் அவர்களின் பிரச்சினைகளும் அரசியல் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டன. அந்த வகையில் பிரதிநிதிகளுக்கு சாதாராண மக்களின் தேவைகள் காணப்பட்டதனால் அரசியல் அரங்கிற்கு மக்களின் பிரச்சினைகளைக் கொண்டுவந்தனர். அரசாங்க சபை, நிர்வாகக்குழு, மந்திரிசபை போன்றவற்றில் சாதாரண மக்களின் பிரச்சினைகள் பேசப்பட்டன.

தொழிற் சங்கங்கள் வளர்ச்சியடைந்தமை
சர்வசன வாக்குரிமையைத் தொடர்ந்து 
தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக தொழிலாளர் நலன்பேண் பல சட்டங்கள் இயற்றப்பட்டன. இவ்வகையில் தொழிற்சங்கங்களை தொழிலாளர்கள் அமைத்துக்கொள்ள சட்டரீதியான உரிமை வழங்கப்பட்டது. 
உதாரணமாக, இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கம் ( பிற்காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாற்றப்பட்டது.)

பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு மக்கள் பழக்கப்படுதல். சர்வசன வாக்குரிமை மூலம் மக்கள் ஆட்சியாளர்களைத் தெரிவு செய்யவும் நீக்குவதற்கும் பழக்கப்பட்டனர். 

தமக்காக பணியாற்றக்கூடிய பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்தனர். தெரிவு செய்த 
பின்னர் மக்களுக்காக பணியாற்றாதரவர்களை பிரதிநிதித்துவத்திலிருந்து அகற்றினர்.

சமூகமாற்றம் துரிதமடைதல் 
பின்தங்கிய மக்கள் பிரிவினர் சர்வசன வாக்குரிமை மூலம் அரசியல் பலத்தைப்
பெற்றனர். இப்பலம் அவர்களை மேல்நிலையில் கொண்டுவருதவற்கு உதவியது. மரபுரீதியான ஒடுக்கு முறைகள், சாதி முறைகள் என்பன ஒழிக்கப்பட்டன.

சர்வஜன வாக்குரிமை மூலம் பாதகமான விளைவுகளும் ஏற்பட்டன. 

பொருளாதாரத்தில் சமத்துவம் இல்லாமல் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் 
இது சாதாரண மக்களை விட பொருளாதார பலம் படைத்தவர்களுக்கே சாதகமாக அமைந்தது. சாதாரண மக்களால் அரசியல் உரிமைகளை அனுபவிக்க முடியாத நிலை 
காணப்பட்டது. 

சர்வசன வாக்குரிமை அரசியல் அதிகாரத்தின் இருப்பிடத்தில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை. மாறான அதிகாரம் சொத்து உடையவர்களின் கைகளிலேயே 
காணப்பட்டது. 

சர்வசன வாக்குரிமையானது சிறுபான்மை மக்களை பொறுத்தவரையில் பாதகமாக 
அமைந்தது. அதிகாரம் தொடர்ந்து பெரும்பான்மையோரது கைகளிலேயே தங்கியிருந்தது. இதனால் சிறுபான்மை இனங்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது.


தொகுப்பு :

Sivam vithurshan, 
Special in political science, 
University of Peradeniya. 

Comments

Popular posts from this blog

கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910).

மனித உரிமையின் வரலாற்று வளர்ச்சி ஒரு தொகுப்பு

மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம்:1924-1931