இலங்கையில் பெண்களின் அரசியல் பங்குபற்றலும், அதற்கான தேவைப்பாடும்
இலங்கையில் பெண்களின் அரசியல் பங்குபற்றலும், அதற்கான தேவைப்பாடும்
அறிமுகம்
தற்கால உலகில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கருத்தாடல்களில் ஒன்றாக பெண்களைப் வலுப்படுத்தல் என்ற அம்சம் உள்ளது. இன்றைய சமூதாயத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அந்த பிரச்சினைகள் இல்லாமல் செய்யப்படும் போது மாத்திரமே பெண்களுக்கான பூரண சுதந்திரம், உரிமை என்பன கிடைக்கப்பெறும். இன்று அதிகமாக பல துறைகளிலும் பெண்கள் வலுப்படுத்தப்பட வேண்டியவர்கள். பெண்கள் அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் மாற்றங்களுடன் வலுப்படுத்தப்பட வேண்டும்.
பெண்கள்சார் பிரச்சினைகள் அதிகமாக இருப்பதனால் அவர்களைப் வலுப்படுத்துவதன் மூலமாகவே அவர்கள்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இதனால் பெண்களைப் வலுப்படுத்த சமூக செயற்பாட்டாளர்களை அடையாளம் காண வேண்டும். அப்பொழுதுதான் பெண்கள்சார் பிரச்சினையை தீர்க்க முடியும். பெண்களைப் வலுப்படுத்தலில் மிக்க முக்கியம் பெறுவது அரசியல் ரீதியான வலுப்படுத்தல் ஆகும். இந்த அரசியல் ரீதியான வலுப்படுத்தலில் பெண்களை ஊக்குவிக்கும் போதே அவர்களுக்கு உரிய பிரச்சினைகள் பற்றி பேசப்படும் நிலை உருவாகும். அவர்கள்சார் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
பெண்களிடம் மறைந்து இருக்கும் பிரச்சினைகளை பொது மேடைக்கு கொண்டு வரும் போதே வலுப்படுத்தலில் உள்ள தடைகளை இனங்காண முடியும். பெண்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்த அவர்களின் அரசியல் பங்குபற்றலை அதிகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் நிலையில் அபிவிருத்தியை உருவாக்க முடியும். ஆனால் இன்று பெண்களின் அரசியல் பங்குபற்றல் குறைந்து கொண்டே செல்கின்றது. காரணம் அவர்களை வலுப்படுத்த போதியளவு வாய்ப்புக்கள் உருவாகவில்லை. இதனால் பல்வேறுபட்ட அமைப்புக்கள் பெண்களை வலுப்படுத்துவதில் பாரிய முயற்சிகள் இலங்கை முழுவதும் இடம்பெற்றன. மேலும் பல பெண்கள் அமைப்புக்கள் பல்வேறு கலந்துரையாடல், கருத்தரங்குகள் மற்றும் சந்திப்புக்கள் தொடர்பில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தெளிவுபடுத்தி, பெண்களின் பிரதிநிதித்துவ அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி வேண்டுகோள் முன்வைக்கப்பட்டன.
அதன் பிரதிபலனே 2018 இல் 25 சதவீதம் பெண்களுக்கான ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டன. இது கடந்த உள்ளுராட்சி தேர்தல் முறைமையில் பரவலாக பேசப்பட்டாலும் பெண்களின் அரசியல் பங்குபற்றல் வீதம் ஓரளவு அதிகரித்துள்ளது. இலங்கையில் மொத்தமாக 52.01% பெண்கள் உள்ளனர். அதில் 5.3%பாராளுமன்றத்திலும், 4.5% மாகாண சபையிலும், 1.9% உள்ளுராட்சி சபையிலும் பெண்களின் பங்கேற்பு கடந்த காலத்தில் இருந்ததை காணலாம். இன்று உள்ளுராட்சி சபையிலும், மாகாண சபையிலும் கடந்த காலங்களில் செய்த திருத்தம் காரணமாக சபைகளில் 25% இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எனினும் கடந்த தேர்தலில் அது முழுவதுமாய் வெற்றி அளிக்கவில்லை. எனினும் கடந்த காலத்தினை விட அதிகரித்துள்ளதை ஒப்பிட்டு அறிந்து கொள்ள கூடியதாக உள்ளது. குறிப்பாக கடந்த தேர்தலில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 22.2%, பெண்களளுக்கான பிரதிநிதித்துவம் கிடைத்தது. இது கடந்த காலத்தை விட பாரிய மாற்றம் என்றே குறிப்பிட வேண்டும்.
இலங்கையில் அரசியலில் பிரவேசித்த சொற்பளவிலான பெண்களின் அரசியல் பிரவேசம் திடீரென உருவானது ஆகும்.இந்த நாட்டில் தலைவிகளாக வந்த பெண்கள் கணவன் அல்லது தந்தை அரசியலில் சிறந்து விளங்கியதனூடாக வந்தவர்கள்தான். ஆட்சியில் இருந்த சிறிமாவோ அம்மையார், சந்திரிக்கா அம்மையார் போன்றோர் அவ்வாறானதொரு பின்னணியில் இருந்துதான் வந்தார்கள். பெண்கள் அதிகம் அரசியலில் பங்கேற்காமல் இருப்பதற்கு இலங்கையில் காணப்படும் சமூக இறுக்கமே காரணமாகும். அந்த இறுக்கம் பெண்களை அதிகளவு அரசியலில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பதில்லை.
ஏனென்றால் பெண்களுக்கென்று அவர்கள் ஒரு சிறிய கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். கடந்த காலத்தில் பெண்கள் ஆசிரியத் தொழில், தாதித் தொழில் போன்ற ஒரு வரையறை சார்ந்த துறைக்குள்ளே நுழைவதற்குத்தான் அனுமதிக்கப்பட்டார்கள், அவர்கள் பழக்கப்பட்டார்கள். இதனால் அவர்கள் அரசியலில் முன்னுக்கு வரவுமில்லை. ஈடுபாடு காட்டமில்லை. அத்தோடு நமது நாட்டில் 30 வருடங்களாக காணப்பட்ட ஆயுதக் கலாசாரமும், கலவர சூழ்நிலைகளும் பெண்கள் அரசியலில் பங்கேற்காமைக்கு காரணங்களாக அமைந்திருக்கின்றன. இலங்கையில் ஆரம்பத்தில் குறுகிய எண்ணிக்கையான பெண்கள் மாத்திரமே பங்குபற்றினர். இதனை பின்வரும் அட்டவணையில் இணங் காண முடியும்.
இலங்கையில் பெண்களின் அரசியல் பங்குபற்றலின் வளர்ச்சி
இலங்கையை பொறுத்தவரை பெண்களின் சனத்தொகையானது 52.01வீதம் காணப்படுகின்றது.(Gender statistics-2020). 2015இல் தெரிவான பெண் பாராளுமன்றப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையானது 2010 இல் தெரிவான 13 என்ற எண்ணிக்கையினையே பிரதிபலிக்கின்றதே தவிர இவற்றில் அதிகரிப்பு ஏற்படவில்லை. 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் கடந்த ஆட்சியில் 13 பெண் உறுப்பினர்களே உள்ளமை இலங்கையில் பெண் அரசியல் பங்குபற்றலின் ஆர்வமின்மையை எடுத்துக்காட்டுகிறது. (Hand book of Parliament-2017). இதனடிப்படையில் பார்க்கும் போது மொத்த பிரதிநிதிகளின் விகிதாசார அடிப்படையில் பெண் பிரதிநிதிகளின் விகிதாசாரமானது பாராளுமன்றத்தில் 6 சதவீதத்திலும் குறைவாகவே காணப்படுகின்றது. 2020 தேர்தலில் சுமார் 5.38% சதவீதம் பெண்கள் மாத்திரமே பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டனர்.
பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் 1931ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதலாவது நாடாக இலங்கை காணப்படுகின்றது.
ஆனால் அதனை பின்பற்றிய நாடுகளில் காணப்படும் முன்னேற்றம் இலங்கையில் இல்லை. குறிப்பாக சார்க் நாடுகளில் அதிகரித்து காணப்படும் பிரதிநிதித்துவம் இலங்கையில் வீழ்ச்சியினை காட்டுகிறது. அதன்படி 2020 இல் வெளியிடப்பட்ட “inter-parliamentary union” கருத்துப்படி இலங்கையில் 5.3% உள்ளது. இந்தியாவில் 14.4% உள்ளது. அதே போல் பாக்கிஸ்தானில் 20.2%ஆனவர்களும், பங்களாதேஷில் 20.9% ஆனவர்களும், மாலைதீவில் 4.6% ஆனவர்களும், நேபாளத்தில் 32.7% ஆனவர்களும், பூட்டானில் 14.9% ஆனவர்களும், ஆப்கனிஸ்தானில் 27% ஆனவர்களும் பாராளுமன்றதிற்கு தெரிவு செய்யப்படுகின்றனர். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் குறைவாகவே பெண்களுக்கு வாய்ப்பு உள்ளது. இதனை பின்வரும் வரைபடம் மூலம் அவதானிக்கலாம்.
(Source: Women political participation -inter parliamentary union-2020)
அதேபோல் இலங்கையில் 1989 தொடக்கம் 2020 வரையான தேர்தலின்படி பெண்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் அளவு மிகக் குறைவாக உள்ளது. 20 வருட காலத்தில் பெண் பிரதிநிதித்துவம் அதிகரிக்கவில்லை. குறிப்பாக 10 சதவீதத்தை கூட தாண்டவில்லை. 2004 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் பாராளுமன்றத்திற்கு 5.8% ஆனவர்களே தெரிவானார்கள். இது இன்றுவரை மாறாப்பெறுமானமாக இருக்கிறது. அந்தவகையில் 1989ஆம் ஆண்டு 5.8% ஆனவர்களும், 1994ஆம் ஆண்டு 5.3%ஆனவர்களும், 2000ஆம் ஆண்டு 4.0% ஆனவர்களும், 2001ஆம் ஆண்டு 4.4% ஆனவர்களும், 2004ஆம் ஆண்டு 5.8% ஆனவர்களும், 2010 ஆம் ஆண்டு 5.8%ஆனவர்களும், 2015ஆம் ஆண்டு 5.8%ஆனவர்களும், 2020இல் 5.3% பாராளுமன்றத்திற்கு பெண்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதில் 94% ஆனவர்கள் ஆண்களாக தெரிவு செய்துள்ளனர். இதனால் பெண்கள் பங்கேற்பதற்கான தேவை இலங்கையில் அதிகமாக உள்ளதை காணலாம். இதனை பின்வரும் வரைபடம் மூலம் அவதானிக்கலாம்.
பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவ உலக தரவரிவையில் இலங்கை 177ஆவது இடத்தில் அமைந்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்தில் 1.8வீதம் பிரதிநிதித்துவம்தான் இதுவரையில் காணப்படுகின்றது. (Parliamentary union-2016). இந்த நிலமையினை மாற்ற பல தசாப்த காலமாக பெண் செயற்பாட்டாளர்கள், பெண் அமைப்புக்கள் என்பன குரல் கொடுத்து வந்ததற்கு பலனாக 2010ஆம் ஆண்டு 16ஆம் இலக்க சட்டத்தின் மூலம் உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் பெண்களுக்கு 25வீதம் இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டது. (Parliament union-2016). 2018 பெப்ரவரி 10இல் இடம்பெற்ற உள்ளுhராட்சி மன்ற தேர்தலிலே இம்முறை செயற்படுத்தப்பட்டது.
இத்தேர்தலில் 341 உள்ளூராட்சி சபைகளுக்கு 8356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருந்தனர். அதற்காக 56000 அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இலங்கையில் மொத்தமாக 17000 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 2011இல் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் 100க்கும் குறைவானவர்களே உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் இம்முறை தேர்தலில் உள்ளுராட்சி அமர்வில் கட்டாயம் 25வீதம் பெண் பிரதிநிதிகள் அமர்த்தப்பட வேண்டுமெனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதில் பெண்கள் உண்மையிலேயே பிரதிநிதிகளாயினரா?இது நடைமுறைச் சாத்தியமா? என்பது பலரது மனதிலே எழுந்த சந்தேகமாகும். எனினும் தேர்தல் முடிந்த பின்பும் பெண் பிரதிநிதித்துவத்தின் அளவு அதிகரிக்க செய்தாலும் பெண்கள் தெரிவு, நியமனம் தொடர்பில் சிக்கலை உருவாக்கியது.
பெண்களின் அரசியல் பங்குபற்றலிலுள்ள சவால்கள்
பொதுவாக பெண்களின் அரசியல் பங்குபற்றலானது மறைமுக, நேரடி பங்குபெற்றல் என்ற இரண்டு வகைகளில் காணப்படுகின்றன. அதாவது, நேரடி பங்குபற்றலானது, தேர்தலின் போது மட்டும் அரசியல் விடயங்களை வீட்டிலிருந்து கொண்டு குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தல், குடும்பத்தினருடைய சார்பு கட்சிகளுக்கு தனது விருப்பினை வழங்க பழக்கப்படுதல், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தல், தேர்தலின் போது சாதகமான மனப்பாங்கினை ஒரு கட்சியின் மேல் கொண்டிருத்தல், சிறு கூட்டங்கள் நடாத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளல், தனது அயல் வீடுகளில் உள்ளவர்களை ஒன்று திரட்டி கூட்டங்களிற்கு அழைத்தல், வீடுகளில் பெண்களுக்கான கூட்டங்களினை நடாத்த அதற்கு ஏற்ற வசதிகளை தேர்தல் காலங்களில் உதவிகளை கட்சிகளுக்கு வழங்குதல் போன்ற செயற்பாடுகளின் மூலமாக பெண்கள் அரசியலில் மறைமுகமாக பங்களிப்பு செலுத்துகின்றனர் என்று எடுத்துக்காட்டலாம்.அனைத்து சமூகத்தினை சேர்ந்த பெண்களின் மத்தியில் இது போன்ற செயற்பாடானது சாதாரணமாக காணப்படுகின்றதே தவிர மாறாக இவற்றில் எவ்வித நலிவுகளையும் வீழ்ச்சிகளையும் காணமுடியாதுள்ளது.
நேரடியான அரசியல் பங்குபற்றலானது பெண்களை விட ஆண்களிடமே அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. பெண்கள் அதிகளவில் அரசியலில் பங்குபற்றாமைக்கான காரணங்களாக சமூக, பொருளாதார, சமய, உளவியல் விடயங்களினை எடுத்துக்காட்ட முடியும். சில பெண்களுக்கு ஆர்வமிருந்தும் பொருளாதார வசதி இல்லாமையாலும், அரசியல் பின்னணியுடைய பரம்பரை இல்லாமை, தேர்தலில் போட்டியிட நாடியும் செல்வாக்கு இல்லாமலும் வாய்ப்புகள் நழுவ விடப்படுகின்றன. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் பெண்களைத்தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர திறமைக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. இங்ஙனம் பெண்களுக்கு அரசியலில் வெறுப்புணர்வு உதயமாகின்றது. இவ்வாறான விடயங்களிற்கு தீர்வினை காணும்போது அரசியலில் பெண்களின் பங்களிப்பினை மெருகூட்ட இலகுவாக அமையும்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற புதிய சட்ட மூலங்களால் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பெண்களின் கட்டாய பிரதிநிதித்துவத்தினை வலியுறுத்தினாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்களை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான வழிகளை எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது. வெறுமனே சட்டம் கொண்டு வந்தாலும் அதை நிலைநாட்டுவதிலேயே உண்மையான வெற்றி தங்கியுள்ளது. பெண்களுக்கு தேர்தலின் முக்கியத்துவம், பங்குபற்றுவதிலுள்ள அவர்களது உரிமைகளை எடுத்துக்காட்டும் வகையில் விழிப்புணர்வுகளை ஊட்ட வேண்டியுள்ளது. அரசியல் என்பது ஆண்களுக்கு மட்டுமானது என்ற கருத்தினை விட்டு பெண்களுக்கும் சம உரிமையுள்ளது என்று தெளிபடுத்த வேண்டிய தேவையுள்ளது.
குறிப்பாக மதத்தினை பிரதிபலிக்கும் கட்சிகளில் மாத்திரம் வாய்ப்பு வழங்காமல் ஏனைய கட்சிகளிலும் சம வாய்ப்பினை வழங்க வேண்டிய தேவையுள்ளது. இவ்வாறான தேவைகளை நிறைவேற்றும் போது எந்தவொரு பிரதேசத்தினை சேர்ந்த பெண்களது அரசியல் பங்குபற்றலினை மெருகூட்டுவதற்கு வாய்ப்பாக அமையும். எனவே இலங்கையில் பெண்கள் பங்குபற்றல் அதிகரிக்க வேண்டும். அனைவரும் பங்குபற்றுவதற்கான வழி வகைகளையும் உருவாக்க வேண்டும்.இதற்காக இலங்கையில் உள்ள பிரச்சினைகளை அடையாளம் காண வேண்டும். இன்று பெண்கள் என்றாலே ஓரங்கட்டுதல் செயற்பாடு அதிகமாக இடம்பெறுவதை காணலாம். பெண் அரசியலில் வாக்கு வங்கிகளை நிரப்பவே பயன்படுத்தப்பட்டனர். தேர்தல் முடிந்த பிறகு அவர்களை ஒதுக்கி விடுகின்றனர். இதனால் அவர்கள் அரசியலில் பங்குபற்றுதல் என்பது சவால்கள் நிறைந்தவையாக உள்ளது. கிராமிய அபிவிருத்தி சங்கங்களில் பெண்களின் ஈடுபாடு குறைவாக காணப்படுதல் பாரிய சவாலாக உள்ளது.
ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுக்கும் மிக முக்கியமான நிறுவனமாக கிராமிய அபிவிருத்தி சங்கங்கள் உள்ளன. அப்பிரதேச அபிவிருத்தி திட்டத்திற்கான கொள்கை தீர்மானம், பெண்களின் ஈடுபாடு மிகக் குறைவாக உள்ளது. இதனால் பெண்கள்சார் ஈடுபாடு இன்மையால் அவர்கள் அப்பிரதேச அபிவிருத்தி மற்றும் அரசியலில் ஈடுபடுவது என்பது சவாலுக்குரிய விடயமாக மாறுகின்றது. இன்று பெண்கள் அரசியல் ரீதியாக வலுப்படுத்துவதில் காணப்படும் பிரதான சவால்களில் ஒன்றே குடும்ப சுமை மற்றும் அங்கத்தவர்களின் ஆதரவு கிடைக்காமை என்பதாகும். சமகால குடும்ப நிர்வாகம் பெண் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கி வருகின்றன.
எனினும் குடும்பத்தில் உள்ள தேவையை பூர்த்தி செய்யவே நேரம் சரியாக இருக்கின்றன. இதனால் அவர்கள் அரசியலில் ஈடுபட முடியாமல் போகின்றன. பெண்களை அரசியல் ரீதியில் வலுப்படுத்த நினைத்தாலும், குடும்பமும், குடும்ப சுமையும் பாரிய சவாலாக உள்ளன. பெண்களுக்கே பெண்கள் வாக்களிக்காத போக்கு அதிமாக உள்ளது. ஒரு பெண் முன்வந்து நின்றாலும், அப்பெண்ணை எல்லோரும் வரவேற்று, உற்சாகமளித்து, ஆதரவு அளிக்கும் மனநிலையில் பெண்கள் இருக்க வேண்டும். மாறாக அப்பெண்ணிற்கு அவதூறாக பேசுதலும் அவர்களின் அரசியல் பங்கேற்பிற்கு பாரிய சவாலாக உள்ளது. இவ்வாறு முயற்சி செய்யும் பெண்ணை விடுத்து தாய், தந்தை சொல்லும் கட்சிக்கே வாக்களிக்கும் போக்கே காணப்படும். இது அவர்களுக்கு சவாலாக அமைகின்றது. அரசியல் கட்சிகள் அதிகாரத்தை பெறுவதையே நோக்கமாக கொண்டு இருப்பதனால், வெற்றி பெறும் புது ஆண் வேட்பாளருக்கு வாய்ப்புக்களை வழங்குகின்றனர். வேட்பாளராக களம் இறங்குபவர்களாலும் பெண்கள் சவால்களுக்கு உட்படுகின்றனர். சமூக நலன் கருதி வாக்குகளை பெற நினைத்தாலும் கட்சிகள் பெண்களுக்கு சவாலாக அமைகின்றது.
இறுக்கமான கலாசார மற்றும் மரபு செல்வாக்கு காரணமாக பெண்கள் அரசியலில் ஈடுபடுவது என்பது சவால்மிக்கதாக உள்ளதை காணலாம். அவர்களின் மதம், குடும்ப கட்டுப்பாடு, சமூக அவவ்பெயர் போன்ற காரணங்களினால் பெண்களை வலுப்படுத்தல் மிகவும் குறைவாக காணப்படுகிறது. அதேபோல் போதிய பாதுகாப்பு இன்மை, பெண்களுக்கு எதிரான வன்முறை என்பன பெண்கள் எதிர்நோக்கும் பாரிய சவால்களாகும். அதேபோல் அரசியல் மற்றும் தேர்தல் பற்றிய அச்சம் பெண்களிடம் உள்ளது. இதுவே பெண்கள் அரசியலில் பங்குபற்ற பாரிய சவாலாக உள்ளது. அவர்களின் பாதுகாப்பு என்பது சவாலுக்குரியது.
அதேபோல் இன்று சங்கங்கள் பெண்களின் அரசியல் பங்குபற்றலை அதிகரிப்பதற்கு மாறாக வாழ்வாதார நடவடிக்கைக்கு இது முக்கியம் வழங்கி இருக்கின்றன. இதனால் பெண்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்துவதில் பாரிய சவாலாக உள்ளதை காணலாம். அங்கு அரசியல் நிகழ்ச்சி திட்டத்திற்கு வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலமே மக்களும் பெண்களை ஆதரிப்பார்கள். ஆனால் சங்கங்கள் அவ்வாறு செய்வதில்லை. இதனால் இச் சங்கங்கள் அரசியல் ரீதியாக பெண்களை வலுப்படுத்த சவாலாக உள்ளன. அதேபோல் ஆண்களினால் செலுத்தப்படும் ஆதிக்கம் மூலம் பெண்கள் அரசியல் வலுப்படுத்தலுக்கு உட்படுவது பாரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் வாக்குரிமை பெற முடியாத நிலை உருவாகின்றது. ஆண்கள் நிறைந்த சபையில் பெண்கள் விடயம் பற்றி பேச முடியாமல் போவதுடன்இ அவை ஏற்றுக்கொள்ளப்படாத நிலையுமே உருவாகும். இது பெண்களுக்கு சவாலாக மாறுகின்றது. இதனால் அடுத்தடுத்த நடவடிக்கைக்கு பெண்களால் நகர முடியாத சூழ்நிலை உருவாகிறது.
வேட்புமனுக்களை வழங்கும்போது பூரண ஆதரவு வழங்கப்படாமல், வேட்பு மனு தாக்கல் செய்ய உதவுவதாக கூறி இறுதி நேரத்தில் ஏமாற்றிய சம்பவங்கள் பலவும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதனால் வேட்புமனு தாக்கல் செய்வதில் பெண்கள் சவாலுக்கு உட்படுவதால் அரசியலில் பங்குபற்ற முடியாமல் போகிறது. பெண்கள் அனைவரும் விருப்பத்துடன் பங்கு பெறாத போக்கும் உள்ளன. விழிப்புணர்வு மற்றும் தலைமைத்துவ பயிற்சிகளை தொடர்ந்து செய்தாலும் குறைவான பெண்களே பங்குபற்றுகின்றனர். இதனால் சரியான தீர்மானத்தினை எடுக்க இது சவாலாக அமைகின்றது. இதனால் பெண்களை வலுப்படுத்துதல் என்பது கடினமாக உள்ளது.
இன்று பெண்களை வலுப்படுத்துவதில் சவாலாக அமையும் காரணிகள் பலவாகும். அவற்றுள் பெண்களுக்கான குறைந்த அரசியல் அனுபவம், வன்முறை, ஊழல்கள், வேட்பு மனுக்களை வழங்குவதில் உள்ள குறைந்த ஆர்வம், தேர்தல் மோசடிகள், ஆண்களின் அதிகரித்த போட்டித் தன்மை போன்றன அடிப்படையான தடையாகவும், சவாலாகவும் பெண்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்தலில் காணப்படுகின்றன. மேற்குறித்தவாறு பெண்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்தும் போது பாரிய சவால்களை எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் தற்காலத்தில் உருவாகி உள்ளன. இதனால் பெண்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். சவால்களை எதிர்கொண்டு அவற்றைகளையும் போதே பெண்கள்சார் பிரச்சினைகள் யாவும் பேசப்பட்டு அவர்களை அரசியல் ரீதியில் வலுப்படுத்த முடியும்.
பெண்களின் அரசியல் பங்குபற்றலை அதிகரிப்பதற்கான பரிந்துரைகள்
இலங்கையில் ஆரம்பகாலம் முதல் இன்றுவரை பெண்களின் பங்கேற்பு குறைந்து கொண்டு வருவதுடன், அவர்களை வலுப்படுத்தவும் யாரும் முன்வருவதில்லை. இதனால் அவர்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்தவும், பங்குபற்றவும் சில தீர்வுகளையும், பரிந்துரைகளையும் முன்வைக்கப்பட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
கோட்டா முறைமைகளை பெற பிரச்சாரங்களை அதிகரித்து, அதற்கான அமைப்புக்களை ஏற்படுத்துவது அவசியமாகும். அதற்காக அரசாங்கத்திற்கு தெளிவூட்டி, பெண் பிரதிநிதிகளின் அவசியம் குறித்து பேசப்படல் வேண்டும். உள்ளுராட்சி பயிற்சிகளுக்கு வரும் உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யவும், பெண்கள்சார் பிரச்சனை பேசப்படவும் வழிகளை உருவாக்க வேண்டும். இதனால் ஆண்களுக்கு சமனாக பெண்களுக்கும் என ஒதுக்கீடுகளை சகல தேர்தலிலும் ஏற்படுத்த வழிகளை உருவாக்க வேண்டும். இதனை தேசிய கட்சிகளின் ஊடாக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு கொண்டு சென்று அழுத்தங்களை கொடுக்கலாம். இதற்கு அரசசார்பற்ற நிருவனங்கள், பெண்கள் அமைப்புகளினது பங்களிப்பினையும் பெற வேண்டும்.
சமூக கலாசார செயற்பாடுகளை தொடர்ந்து செய்து தலைமைத்துவத்தை வளர்க்க வேண்டும். இதன் மூலம் தொடர்ந்து சேவை புரியவும், வாக்கு வங்கிகளை கட்டியெழுப்பவும், அனுபவத்தை பெற வேண்டும். அதேபோல் திடசங்கற்பத்துடன் செயற்படவும் வழிகளை உருவாக்க வேண்டும். ஒருமுறை வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும் அதிலிருந்து விலகிச் செல்லாமல் தொடர்ந்து முன்னோக்கி செல்லும் தன்மையை வளர்க்க வேண்டும். கட்சி அரசியல் தலைமையுடன் பெண்கள் இறுதிவரை நெருங்கிய தொடர்பினை விருத்தி செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களின் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும். அது தேர்தலின் வெற்றிக்கு நேரடியாக பங்களிக்கும். உதாரணமாக அரசியல் தலைவர்கள் பங்குபற்றும் நிகழ்வில் கலந்து கொள்ளல், பெண் அமைப்புக்களால் ஏற்பாடு செய்கின்ற செயற்பாடுகளுக்கு அரசியல் தலைவர்களை அழைத்தல், கடிதம் மற்றும் தொலைபேசி ஊடாக தொடர்ந்து தகவலை பரிமாறல், அவர்களின் ஆலோசனைகளை பின்பற்றல் போன்றவற்றின் ஊடாக பெண்களுக்கு சாதகமான நிலைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
சிறந்த தேர்தல் பிரச்சாரத்தினை உருவாக்குதல்,அவற்றை நடைமுறைப்படுத்த ஆர்வத்துடன் செயற்படவும் வேண்டும். அவ்வாறு செயற்படும் போதுதான் அதிகமாக பங்குபற்றுவார்கள். வேட்பாளருக்கு ஆதரவும் அளிப்பார்கள். இன்றைய காலத்தில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் பிரச்சார செயற்பாடுகள் கவர்ச்சி குறைந்தவை. மக்களை சந்தித்து அறிந்ததன் பின்புதான் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டும். உதாரணமாக சிறு கூட்டங்களை வைத்தல், வீடு வீடாக செல்லல் என்பவற்றை குறிப்பிடலாம்.
தேர்தல் பிரச்சார செயற்பாடுகளுக்கு நிதியினை திரட்டிக் கொள்ளல் வேண்டும். அநேகமான பெண்கள் தேர்தலில் நிற்க முன்வராமைக்கு காரணம் நிதிப்பற்றாக்குறை ஆகும். இதனால் தேர்தலுக்கு முன்னரே அரசசார்பற்ற நிறுவனம், அமைப்புக்கள் போன்றவற்றின் மூலம் பெற்று சேமிக்க வேண்டும். பெண்ணொருவருக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் தொடர்பான வாக்களர்களைப் தெளிவுபடுத்த வேண்டும். அதன் மூலம் ஒரு கட்சியில் இருந்து பல வேட்பாளர்களை உள்ளுராட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு அனுப்ப முடியும்.
இன்றும் பெருமளவ் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய தெளிவு மக்களிடம் இருக்கவில்லை. இதற்கு கிராம மட்டத்தில் செய்கின்ற பொது வேலைத்திட்டம் மூலமாக மக்களின் கவனத்தை பெண்கள் மீது திருப்ப வேண்டும். பெண்களுடன் அரசியல் பிரதிநிதித்துவத்தை அபிவிருத்தி செய்வதற்காக செயற்படக் கூடிய விசேடத்துவ நிறுவனத்தினை உருவாக்க வேண்டும். இன்று அனேக கட்சிகள் பெண்களை குறித்த ஒரு இடத்திலே வைத்துள்னர். பெரும்பாலும் கட்சி தலைவர்கள் பெண்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தினை வழங்க விருப்பமற்ற நிலையில் உள்ளனர். இதனை மாற்ற பெண்களுக்கு என ஒரு பங்கினை சட்ட ரீதியாக ஒதுக்கல் வேண்டும். இவர்களுக்கு குடும்பம், கல்வி நிலையம், மதத் தாபனங்கள், அரசியல் நிறுவனம், அரசசார்பற்ற நிறுவனம் போன்றவை ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறானதொரு நிறுவனம் மூலம் இளம்வயதினர் மற்றும் பெண்களுக்கு அரசியல் அறிவு மற்றும் தலைமைத்துவ பயிற்சியை அரசியலில் பெற்றுக்கொடுக்கலாம். அதேபோல அரசியலில் ஆர்வமுள்ள பெண்களின் பெயர்களை தயாரித்து குறைந்தபட்சம் ஒரு பெண்ணையாவது தேர்தலில் ஈடுபடுத்தல் வேண்டும். இதன் மூலம் அவர்களின் பங்குபற்றலை அதிகரிக்கலாம்.
பெண்களின் அரசியல் பங்குபெற்றலை அதிகரிப்பதற்காக மகளிர் அமைப்புகள், சிவில் அமைப்புக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக அரசியல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை கிராம சேவகர் பிரிவின் ஊடாக நடாத்துதல் வேண்டும். அக்கருத்தரங்குகளில் பெண்களின் அரசியல் உரிமைகள், கடமைகள் என்பற்றின் அவசியத்தினை வலியுறுத்துவதுடன் பெண்களின் அரசியல் பங்குபெற்றுதல் இடம்பெறாமையின் மூலமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விடயங்களை சுட்டிக் காட்டுவதுடன், கருத்தரங்குகளை நடாத்துவதன் மூலம் அரசியல்பங்குபற்றுதலை பெண்கள் பெறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படும்.
தேர்தலில் போட்டியிட விரும்பும் பெண்களை முன்னுரிமை வழங்கி வழிகாட்டுபவர்களாக குடும்ப அங்கத்தினர் காணப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களில் அப் பெண்ணின் கணவர் அப்பெண்ணின் அரசியல் செயற்பாடுகள் அனைத்திற்கும் உறுதுணையாகவும், உதவி புரிபவராகவும் காணப்படுதல் வேண்டும். சமூக ரீதியாக அவப்பெயர் ஏற்பட்டு அப்பெண் சோர்வடைந்து கவலையடைகின்ற சந்தர்ப்பத்தில் உற்சாகம் அளிக்கக் கூடியவராக காணப்படுவதுடன் இப் பெண் வேட்பாளரின் வெற்றிக்கு முழு மூச்சாக உழைத்தல் வேண்டும். பெண் வேட்பாளர் போட்டியிட முன் வருகின்றபோது, குறித்த பிரதேச பெண்கள் இப்பெண்ணின் முயற்சிக்கு ஆதரவளித்து அப்பெண்ணுக்கு பக்க பலமாக இருந்து செயற்படுதல் வேண்டும்.
மேலும் குறித்த அப்பெண் வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்காக தமது வாக்குகளை வழங்க வேண்டும். அரசியல் கட்சிகளை பொறுத்த வரையில் தமது வேட்பு மனுப் பத்திரத்தினை குறித்ததொரு பெண் வேட்பாளரை இணைத்து அவரது வெற்றிக்கு பின் புலமாக நின்று செயல்படுவதன் மூலம் பெண் பிரதிநிதித்துவத்தை பெறக்கூடியதாக இருத்தல் வேண்டும். இன்றைய தேர்தல் நடைமுறையானது அதிகளவோ செலவுத்தன்மை கொண்டதாக காணப்படுகிறது. எனவே அரசியல் கட்சியானது அப்பெண் வேட்பாளருக்கு தேர்தல் செலவினை ஈடுசெய்யக்கூடிய வழிவகைகளை செய்ய வேண்டும். அப்பெண் வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்தக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
இறுக்கமான கலாச்சாரத்தன்மைகளை தகர்த்தெறிந்து பெண்களால் அரசியலில் போட்டியிட முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. எனவே அரசசார்பற்ற நிறுவனங்கள், மதப் பெரியார்கள், சமுக ஆர்வலர்கள், புத்துஜீவிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பெண்களின் கலாச்சார பின்னணிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போட்டியிடுவதற்கான அனுமதியை வழங்கி அப்பெண்ணின் வெற்றிக்கு முழு மூச்சாக செயற்படல் வேண்டும். கொள்கை தீர்மான செயற்பாடுகளில் பெண்களின் கருத்துக்களை உள்வாங்க வேண்டும். அதாவது கிராமிய அபிவிருத்தி சங்கங்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள், சிவில் சமூகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்பற்றில் பெண்களை உள்வாங்குவதுடன் அவர்களது கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும்.
முடிவுரை
மேலே குறிப்பிடப்படும் விடயங்களை அடிப்படையாக கொண்டு குறைந்துவரும் பெண் பிரதிநிதித்துவத்தையும், பெண்களின் பங்குபற்றலையும், அதிகரிக்க சில தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும்.அவற்றை சரிவர கடைப்பிடிப்பதன் மூலமே பெண்களின் விகிதத்தை உள்ளூர் அரசியல் மன்றம் முதல் தேசிய அளவுவரை அதிகரிக்கலாம்.
தொகுப்பு:
சி.விதுர்ஷன்
அரசியல் விஞ்ஞானத்துறை.(4ஆம் வருடம்).
பேராதனைப் பல்கலைக்கழகம்.
உசாத்துணை நூற்பட்டியல்
சரவணன்.என், (2001), இலங்கை அரசியலில் பெண்களும், பெண்கள் அரசியலும், மூன்றாவது மனிதன் பதிப்பகம், கொழும்பு.
ரமேஷ். இரா, சோபனா.ரா, "ஆண்- பெண் அரசியல் பிரதிநித்துவம் சமமானதா? பங்குமுறை கோட்பாடு மற்றும் பயன்பாடு" (மொழிபெயர்ப்பு)இட்ரெட்ரிச் ஈபர்ட் ஸ்டிப்டுங் வெளியீடு, கொழும்பு.
Pujika.R, (2017), "Women's political representation in srilanka, leading towards prosperity or peril, The Asian peacebuiders scholarship programme, university of peace.
Liyanage, Kamala and rajendran, shobana,(2012), "Increasing women's representation in local government in central province of srilanka: Trends and problems", paper presented at the 13th national convention on women's studies, colombo: center for women's Research.











அருமையான பதிவு
ReplyDeleteஅருமையான பதிவு அண்ணா
ReplyDelete👍
ReplyDelete