சர்வதேச அரசியல் என்றால் என்ன?

அரசியல் என்ற பதம் நலன்கள், மோதல்கள், அதிகாரம் ஆகிய மூன்று விடயங்களுடன் தொடர்புபட்டதாகும். அரசியலைச் சர்வதேச அரசியலுடன் தொடர்புபடுத்தும் போது சர்வதேச இறைமையுடைய அரசுகளின் நலன்கள் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. இறைமையுடைய அரசுகளின் நலன்கள் ‘தேசிய நலன்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன.

இறைமையுடைய அரசுகள் தங்களுடைய தேசிய நலன்களை அடைவதற்காக ஒன்றுடன் ஒன்று மோதலில் ஈடுபடுகின்றன. இதற்காக அதிகாரத்தினைப் பொதுவாக அரசுகள் பயன்படுத்துகின்றன.

சர்வதேச அரசியல் என்பது இறைமையுடைய அரசுகளுக்கு இடையிலான உறவுகள் உள்தொடர்புகள் என்பவற்றின் வழி ஏற்படுத்தப்படும் நலன்களிற்கான மோதல்களாகும். இன்னொரு வகையில் கூறின் சர்வதேச அரசியல் என்பது இறைமையுடைய அரசுகளுக்கிடையிலான பரஸ்பர உறவு நிலைகளைக் குறித்து நிற்கின்றது.

அதாவது முழு உலகமோ அல்லது அதன் ஒரு பகுதியோ அல்லது ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச சமுதாயங்களோ தமது நட்புறவுகளை அல்லது பகைமை உறவுகளைப் பரஸ்பரம் செயற்படுத்துவதைக் குறித்து நிற்கின்றது.

சர்வதேச அரசியல் பற்றிய வரைவிலக்கணங்கள்:

தேசங்களுக்கிடையில் இடம்பெறும் அதிகாரத்திற்கான போராட்டமும் அதிகாரப் பிரயோகமும் சர்வதேச அரசியலாகும்.

தேசங்களுக்கிடையிலான போட்டி மற்றும் அவற்றுக்கிடையிலான தொடர்புகளை சீராக மேம்படுத்தும் நிலைகள், நிறுவனங்கள் என்பன பற்றிய கற்கையாகும்.

தாம் எண்ணும் தேசிய நலன்கள் இலக்குகளை அடைந்து கொள்வதில் தனித்தனி தேசிய அரசுகளுக்கிடையில் இடம்பெறும் ஊடாட்டம் சர்வதேச அரசியலாகும்.

தேசங்கள் தமது ஒத்திசைவற்ற நலன்களை அதிகாரத்தின் மூலம் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் செயன்முறை.

சர்வதேச அரசியல் என்பது அரசுகளின் சார்பில் இயங்குகின்ற அரசாங்கங்களுக்கு இடையிலான அதிகாரப் போராட்டமாகும் என்பதை அனேக அறிஞர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

ஹான்ஸ் ஜே. மோர்கென்தோ சர்வதேச அரசியல் என்பது “அரசுகளுக்கிடையில் அதிகாரத்தினைப் பயன்படுத்தி நடாத்தப்படுகின்ற போராட்டம்” என்று கூறுகின்றார். 

ஸ்பிரவுட், ஸ்பிரவுட் (Sprout and Sprout) சர்வதேச அரசியல் என்பது “சுதந்திரமான அரசியல் சமுதாயங்களிற்கிடையில் நிகழும் உறவுகளும் உளத் தொடர்புகளுமாகும். இதில் எதிர்பார்ப்புக்கள், கட்டுப்பாடுகள், மோதல்கள் என்பன தத்தமது நலன்களிற்காக ஏற்படுகின்றன” என்று கூறுகின்றார். 

பிலிக்ஸ் குறோஸ் (Feliks Gross) என்பவர் “சர்வதேச அரசியல் என்பது பிரதேசத்தில் பிரச்சினைகளிற்கான தீர்வினைக் காணுதல், எதிர்காலத்திட்டம், கொள்கைகள், பெறுமதிகள் சித்தாந்தம், போன்றவற்றின் செயற்பாட்டுக்கான தகுந்த பதமாகலாம்” எனக் கூறுகின்றார். 


தொகுப்பு:


S. Vithurshan, Special in political science, 

University of Peradeniya. 

Comments

Post a Comment

Popular posts from this blog

கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910).

மோதல் மற்றும் மோதல் தீர்வு.

மனித உரிமையின் வரலாற்று வளர்ச்சி ஒரு தொகுப்பு