கூட்டணி அரசியலும், இலங்கையின் அனுபவங்களும்.
கூட்டணி அரசியலும், இலங்கையின் அனுபவங்களும். (Coalition Politics and the experience of Sri Lanka)
அறிமுகம்(Introduction)
கூட்டணி அரசியல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, ஏதேனும் ஒரு கட்சியின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், அரசாங்கத்தை நடத்தவும் ஒரு அரசாங்கத்தை அமைத்து மேற்கொள்ளும் அரசியலாகும்.
கூட்டணி அரசாங்கங்கள் பொதுவாக ஜனநாயக நாடுகளில் உருவாக்கப்படுகின்றன, அங்கு ஒரு கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு தெளிவான பெரும்பான்மையை அடைய முடியாததாக காணப்படும். அந்த கட்சி மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து, ஆட்சி அமைக்க விரும்பும் போது, மொத்த இடங்களின் பெரும்பான்மையை மாற்றும் போது, கட்சிகளின் இந்த ஒன்றியம் கூட்டணி என்று அழைக்கப்படுகிறது.
கூட்டணி என்றால் என்ன? (What is the meaning of the Coalition)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள் அல்லது கட்சிகளின் 'இணைவு' என்று பொருள்படும். 'Coalesce' என்பதிலிருந்து கூட்டணி என்ற வார்த்தை உருவானது. 18 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் ஜனநாயகத்தின் எழுச்சி ஏற்பட்டபோது இந்த சொல் அரசியலில் பிரபலமாகியது. இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, இஸ்ரேல், கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் பல கூட்டணி அரசாங்கங்களை தேர்ந்தெடுத்துள்ளன.
ஏன் கூட்டணி அரசாங்கம் அமைகின்றன?(Why are coalition governments formed?)
பல அரசியல் கட்சிகள் இருந்தும், ஆட்சி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படாத நிலையில் அல்லது முட்டுக்கட்டையில் இருக்கும் போது, கூட்டணி அரசாங்கம் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. வெவ்வேறு கட்சிமுறையைக் கொண்ட நாடுகளில் வெவ்வேறு விதமாக கூட்டணி அரசாங்கம் அமைகின்றன. உதாரணமாக,
பல கட்சி முறைமை நாடுகள்: (Multi political parties countries)
தேர்தலில் எந்தக் கட்சியும் தெளிவான பெரும்பான்மையைப் பெற முடியாதபோது, ஒரே மாதிரியான நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட பல கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உருவாக்கலாம்.
இரு கட்சி முறை நாடுகள்: (Two party system)
இரண்டு பெரிய கட்சிகளும் ஒரே மாதிரியான இடங்களைப் பெற்றால், சிறு கட்சிகள் அல்லது நடுநிலை தனிநபர்கள்/கட்சிகளுடன் ஒன்றிணைந்து பெரும்பான்மையை அடையும் கட்சி அரசாங்கத்தை அமைக்கும்.
அவசரகால சூழ்நிலைகள் காணப்படும் நாடுகள்: (Countries where emergency situations exist).
தேசிய நெருக்கடிகள் போன்ற சூழ்நிலைகளில், பெரும்பாலான அரசியல் கட்சிகள் அரசியல் நலன்களைக் காட்டிலும் தேசிய நலன்களைப் பாதுகாக்க ஒன்றிணைகின்றன.
கூட்டணி அரசாங்கத்தின் முக்கியத்துவம் என்ன? (What is the importance of Coalition government)
பாராளுமன்றத்தில் முடிவெடுப்பதற்கு பல கட்சிகளின் பங்கேற்புடன் கூட்டணி அரசாங்கம் இருந்தால், வாக்காளர்கள் தங்கள் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் இலகுவாக முன்வைக்க முடியும். கூட்டணிகளை உருவாக்குவதால் ஒரு அரசியல் கட்சியின் கைகளில் இருந்த அதிகாரம் அரசியல் அதிகார பரவலாக்கத்திற்கு வழி வகுக்கிறது.
பொதுமக்களின் பிரதிநிதித்துவத்தை பல்வகைப்படுத்துவதற்கும் கூட்டணிகள் முக்கியமானவை. இது சமூகத்தின் குறித்த ஒரு வர்க்கத்தின் மீதும் கவனம் செலுத்துவதை அரசாங்கம் தடுக்கிறது. மேலும் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான கொள்கை வகுப்பதை உறுதி செய்கிறது. உதாரணமாக இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம்.
கூட்டணி அரசாங்கத்தில் குறைந்த பட்ச திட்டம் என்ன? (What is the minimum plan in a coalition government?)
கூட்டணியாக இணையும் கட்சிகள் ஒரே மாதிரியான சித்தாந்தங்களைக் கொண்டிருப்பது கடினமாகும். எனவே, அனைத்துக் கட்சிகளின் பொதுவான கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களை ஆவணப்படுத்தப்பட்ட வடிவத்தில் குறிப்பிடுவது முக்கியம். அதன் மூலம் அவர்கள் தங்கள் அரசாங்கத்திலோ அல்லது அமைச்சரவையிலோ செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். உதாரணமாக அமைச்சரவை அமைச்சுப் பதவி, அரசாங்கத்தின் முக்கிய அந்தஸ்து நோக்கங்களாக இருக்கலாம்.
பொதுவாக கூட்டணி அரசியலில் காணப்படும் சிக்கல்(A common problem in coalition politics)
- பல கட்சிகளின் அரசாங்கம் என்பதால் நிலையற்றதாகவும் பலவீனமாகவும் இருப்பதாகக் கருதுவது பொதுவான கருத்து.
- பல நேரங்களில், கட்சிகளுக்கு இடையே கருத்தியல் மற்றும் அடிப்படை வேறுபாடுகள் இருந்தபோதிலும், கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. உதாரணமாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து பிரிந்து சென்றதே JVP இன் வருகையாகும்.
- பல தலைவர்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையால் திசைதிருப்பப்பட முடியும். அரசாங்கங்கள் வலுவாக இருந்தாலும், தங்கள் கூட்டணிகளின் வீழ்ச்சிக்கு தாங்களே காரணமாக இருக்கும் நிலை காணப்படலாம்.
கூட்டணி அரசாங்கத்தின் அம்சங்கள்(Features of coalition government).
- வெகுமதி, பொருள் அல்லது வேறு ஒரு காரணத்திற்காக கூட்டணி உருவாகும்.
- ஒரு கூட்டணி என்பது குறைந்தது இரண்டு கூட்டுக்களின் இருப்பைக் குறிக்கிறது.
- ஒரு கூட்டணி அமைப்பின் அடிப்படைக் கொள்கை "குறிப்பிட்ட விருப்பத்திற்கான தற்காலிக இணைப்பு" என்ற எளிய உண்மையின் மீது நிற்கிறது.
- கூட்டணி அரசியல் என்பது ஒரு நிலையானது அல்ல, ஆனால் கூட்டணியில் உள்ள கட்சிகளும், குழுக்களும் கலைந்து புதியவற்றை உருவாக்க முடியும்.
- ஒரு கூட்டணி அரசாங்க கட்சியொன்று குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
- ஆட்சியை கைப்பற்றுவதே கூட்டணி பிரதான நோக்கம்.
- நோக்கங்கள், கொள்கைகள் அடையபடாதவிடத்து கூட்டணியை முடித்து கொள்ளும் இயல்பானது.
- தற்காலிக மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாத முறையாக காணப்படுகிறது.
கூட்டணி அரசியல் ஒரு நாட்டில் இடம்பெறும் போது அது சில நன்மையான விடயங்களை தந்தாலும், சில எதிர்மறையான விளைவுகளையும் அரசாட்சி மற்றும் அரசாங்கம் முறைகளுக்குள் ஏற்படுத்தி விடுகிறது. அந்தவகையில் பின்வரும் விளைவுகள் ஏற்படும்.
நன்மைகள்(Advantages)
- அரசாங்கத்தின் செயல்பாட்டில் பல்வேறு நலன்களை பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்பு உள்ளது.
- ஒரு கூட்டணி அரசாங்கம் பல்வேறு குழுக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் ஒரு கருவியாக செயல்பட முடியும்.
- இலங்கை மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. வெவ்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், சாதிகள், மதங்கள் மற்றும் இனக்குழுக்கள் உள்ளன. அதாவது கூட்டணி அரசாங்கத்தின் பிரதிநிதித்துவம் மற்றும் வாக்காளர்களின் மக்கள் கருத்தை பிரதிபலிக்கிறது.
- ஒரு கூட்டணி அரசாங்கம் வெவ்வேறு அரசியல் கட்சிகளை உள்ளடக்கியது, அவற்றின் சொந்த சித்தாந்தங்கள் அல்லது நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுள்ளது. ஆனால் அரசாங்கக் கொள்கைக்கு அனைத்து கூட்டணிக் கட்சிகளின் இணக்கம் தேவை. எனவே, ஒருமித்த அடிப்படையிலான அரசியலுக்கு கூட்டணி அரசு வழிவகுக்கும்.
- கூட்டணி அரசாங்கம் பிராந்திய கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி, பதிலளிக்கக்கூடியதாக காணப்படும். உதாரணமாக இலங்கையில் பிரதேச அலகுகளில் காணப்படும் கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
- ஒரு கூட்டணி அரசாங்கம் சர்வாதிகார ஆட்சிக்கான வாய்ப்புகளை குறைக்கிறது. அரசாங்கத்தின் செயல்பாட்டில் ஒற்றை அரசியல் கட்சியின் ஆதிக்கம் குறைந்ததே இதற்குக் காரணம். கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களும் முடிவெடுப்பதில் பங்கேற்கின்றனர்.
தீமைகள்( Disadvantages)
- கூட்டணி அரசியலில் கூட்டணி அரசாங்கம் நிலையற்றவை அல்லது உறுதியற்ற தன்மைக்கு ஆளாகின்றன. கூட்டணி உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, ஆட்சி கவிழ்வதற்கு வழிவகுக்கிறது.
- கூட்டணி ஆட்சியில் உள்ள சிறிய கட்சிகள் 'கிங் மேக்கராக' செயல்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் பாராளுமன்ற பலத்தை விட அதிகமாக கோர முடியும். உதாரணமாக தேசிய அரசாங்கங்த்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பாடுகள்.
- பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் தேசிய ரீதியாக முடிவெடுப்பதற்காக பிராந்திய பிரச்சினைகளை கொண்டு வருகிறார்கள். அவர்கள் தங்கள் வழிகளில் செயல்பட மத்திய நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்; இல்லையேல் கூட்டணியில் இருந்து விலகுவதாக மிரட்டப்படலாம்.
- நிர்வாகத் தோல்விகள் மற்றும் குளறுபடிகளுக்கு கூட்டணி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். அவர்கள் கூட்டு மற்றும் தனிப்பட்ட பொறுப்புகளில் இருந்து தப்பிக்க வாய்ப்பு காணப்படும்.
- உறுதியற்ற ஆட்சியும், எப்போதும் கலையும் என்ற பதற்றத்துடன் நிதமும் செயற்பட வேண்டிய நிலை காணப்படும்.
கட்சிகள் சிலவற்றுடன் ஏற்படுத்தப்படும் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தல் என்பது இலங்கையில் 1947ஆம் ஆண்டில் இருந்து காணப்படும் விசேட இயல்பாகும். "அரசியல் கட்சிகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் பொது வேலைத்திட்டத்தின் ஊடாக பொது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகத் தாபிக்கப்படும் அரசாங்கம்” கூட்டணி அரசாங்கம் என வரைவிலக்கணம் செய்யலாம்.
கூட்டணி அரசாங்கமானது பாராளுமன்றித்தில் அதிக ஆசனத்தைப் பெறும் கட்சியை மையப்படுத்தி, சிறிய எண்ணிக்கையிலான ஆசனங்களைப் பெற்ற ஒரு கட்சியை அல்லது சில கட்சிகள் இணைந்து ஏற்படுத்தப்படுகிறது. அரசாங்கத்தைத் தாபிப்பதற்குப் பாராளுமன்றத்தில் தேவையான பெரும்பன்மையை சிறு கட்சிகளின் ஆதரவுடன் பெற்றுக் கொள்கின்றமையானது கூட்டணி அரசாங்கம் தாபிக்கப்படுவதற்கான பொதுவான காரணமாகும்.
கட்சிகள் பலவற்றின் வளங்களை இணைத்து தேர்தல் வெற்றியை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்தல் தேர்தலுக்கு முன்னரான கூட்டணிகளை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. தேர்தலின் பின்னரான கூட்டணிகள் அரசாங்கத்தைத் தாபிப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதன் நிமித்தம் உருவாக்கப்படுகின்றன.
தேர்தல் முறைமை, கட்சி முறைமை என்பவற்றுக்கும் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படுவதற்கும் ஏதுவான காரணிகளுக்கிடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. எளிய பெரும்பான்மை மற்றும் விகிதாசாரத் தேர்தல் முறைகள் இரண்டின் தலைமையிலும் கூட்டணி அரசாங்கங்கள் தாபிக்கப்பட்டமை இலங்கையின் அனுபவமாகும். இவ்வாறான நிலைமைக்குக் காரணம் இரு கட்சி ஆதிக்க முறைமையும் சிறு கட்சிகள் என்ற கட்சிமுறைமையினதும் இயல்பாகும்.
பிரதான கட்சியொன்றின் அல்லது இரண்டுடன் சிறு கட்சிகள் பல செயற்பாடுகளில் இருக்கின்றமையே பொதுவாகப் பல கட்சி முறைமையில் இடம்பெறுகிறது. இலங்கையில் கூட்டணி அரசாங்கம் இதுவரையில் இரண்டு முறைகளில் உருவாகி இருப்பதை அவதானிக்கலாம்.
1. தேர்தலுக்குப் பின்னரான கூட்டணிகள் (Pre-election Coalition)
2. தேர்தலுக்கு முன்னரான கூட்டணிகள் (Post-election Coalition)
முறை 01. (Types 01): தேர்தலுக்குப் பின்னரான கூட்டணிகள் (Pre-election Coalition)
பல கட்சி முறைமையில் இடம்பெறக் கூடியது யாதெனில் சிறிய கட்சிகள் பலவற்றுக்கிடையில் பாராளுமன்ற ஆசனங்கள் பகிரப்படுகின்றமையும், பாராளுமன்ற ஆசனங்களில் பெரும்பான்மை ஆசனங்களை தனித்து ஒரு பிரதான கட்சி பெறமுடியாமையும் ஆகும்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், பாராளுமன்றத்தில் அதிக ஆசனத்தைப் பெற்ற போதும் பெரும்பான்மை ஆசனத்தைப் பெற்றிராத பிரதான கட்சி கூட்டணி அரசாங்கம்அமைக்க சிறிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் நிலை ஏற்படும். 1947, 1965 மற்றும் 1994ஆம் ஆண்டுகளின் கூட்டணி அரசாங்கங்கள் இவ்வாறான பின்னணியிலேயே உருவாகின.
இதனை கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளின் நிலைப்பாடு ஊடாக விளங்கிக் கொள்ள முடியும். உதாரணமாக 1947 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல், 1965 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் 1994 ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
1947 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல். (1947 parliamentary election).
1947 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 42 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. ஆயினும் தனித்த பெரும்பான்மை காணாத போதும் சுயேச்சை அங்கத்தவர்களின் ஆதரவுடன், சிறிய கட்சிகளின் ஆதரவோடும் அரசாங்கத்தை அமைத்தது.முறை 02. (Types 2):தேர்தலுக்கு முன்னரான கூட்டணிகள் (Post-election Coalition)
2001 ஆண்டு டிசம்பர் மாத பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியானது ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணி ஒன்றை உருவாக்கியது. அதில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி என்பவற்றுடன் கூட்டணிகளை அமைத்து தேர்தலில் போட்டியிட்டார்கள். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களை வென்று பாராளுமன்றத்தை அமைத்து கொண்டது.
இலங்கை அனுபவத்தின்படி, இரு ஆதிக்க கட்சிகள் காணப்படும் போது, பொதுவாக சிறு கட்சிகளுக்கு சிறிய எண்ணிக்கையை கொண்ட ஆசனங்களையே பெற முடியும். அச்சிறு கட்சிகளுக்குத் தங்களுக்கென்று தனி அரசாங்கத்தை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு இல்லை. சதாகாலமும் எதிர்க் கட்சியில் இருக்கின்ற நிலைமையில் இருந்து மீளுவதற்கு அவற்றுக்கு உள்ள மாற்று வழி யாதெனில் பிரதான கட்சியுடன் கூட்டணி அரசாங்கத்தில் இணைவதாகும்.
இதனூடாக குறைந்த அளவிலான ஆசனத்தைக் கொண்ட கட்சிகளும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை பெற்று அரசாங்கத்தின் செயன்முறையில் பங்குகொள்ள முடியும். உதாரணமாக டக்ளஸ் தேவானந்தா - மீன் பிடி அமைச்சர்(EPDP) , நஷிர் அஹமட்- சுற்றுச்சூழல் அமைச்சர்( இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்).
இரண்டு கூட்டணிகளையும் பார்க்கும் போது தேர்தல்களுக்கு பின்னரான கூட்டணிகளை விட தேர்தலுக்குப் முன்னர் உருவாக்கி தேர்தலில் போட்டியிடும் கூட்டணியே பலமானதாகவும், வீழ்ச்சி அடைவதிலும் குறைந்த சந்தர்ப்பம் உண்டு. அதனாலே இலங்கையில் 1978 யாப்பிற்கு பின்னர் காணப்படும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை சமாளித்து கொண்டு போக அதிகளவில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகள் உருவாக்கப்படுகின்றன.
கூட்டணி அரசியல் அரசாட்சி (Governance) முறைமையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் (Implications of coalition politics on governance system)
ஆட்சிமுறை அல்லது ஆட்சியியல் (Governance) என்பது ஜனநாயக அரசியல் முறைமையினுள் பிரசைகள் அரசாங்கத்தை தெரிவு செய்து தாம் அங்கத்துவம் பெற்றுள்ள சமூகமாகிய அரசியல் சமூகத்தினை சரியாக வழிநடத்தி அதன் மூலம் சமூகத்தின் பொது எதிர்ப்பார்ப்புகளுக்கு சேவை செய்து அரசியல் மற்றும் நிருவாக ரீதியாக சமூகத்தினை கட்டுப்படுத்துவதற்காகும்.
இந்த ஆட்சிமுறையில் கூட்டணி அரசாங்கம் பாரிய நெருக்கடி மற்றும் அச்சத்தை உருவாக்கும் தன்மை கொண்டது. கூட்டணி அரசாங்கத்தினால் இலங்கையில் ஏற்பட்ட சில நெருக்கடி மற்றும் பிரச்சனைகள் பின்வருமாறு :
- அரசாங்கம் வீழ்ச்சி அடையும்.
- அரச நிர்வாகம் செயல் இழந்து போகும்.
- நாட்டில் வெவ்வேறு கட்சிகளை திருப்திப்படுத்த பல கொள்கைகளை உருவாக்க வேண்டிய தேவை காணப்படும்.
- நாடு Demand Politics என்ற நிலையை அடையும்.
- அனுபவம் இல்லாத சிறிய கட்சிகள் அமைச்சுகளை பெற வேண்டிய நிலை உருவாகும். இதனால் நிருவாகம் பாதிப்பு அடையலாம்.
- நிதமும் எதிர்கட்சிகளால் குழப்பம் மற்றும் கட்சி தாவலுக்கான செயன்முறை இடம்பெறும்.
- பலவீனமான அரசாங்கம் உருவாகும் நிலையும் உருவாகும்.
- அரசாட்சி நிதமும் பதற்ற நிலைமையில் காணப்படும்.
- சமூக குழுக்களுக்கிடையில் சரியான முறையில் இணைப்பை ஏற்படுத்த முடியாமல் போகலாம்.
உசாத்துணை நூல்கள்( References Books)
யோதிலிங்கம். சி. அ, (2008),” இலங்கையில் அரசியல் கட்சி முறைமை”, குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை.
பிரசாத். சி, கணேசலிங்கம். கே,ரி,(2015) “சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் அரசியற் கட்சிகளது தோற்றத்திலும் வளர்ச்சியிலும் மதத்தின் செல்வாக்கு”, 5th International Symposium, SEUSL.
Michelangelo Vercesi, (2016),Coalition Politics and Inter-Party Conflict Management: A TheoreticalFramework, researchgate article.
Coalition government, Available at: https://www.britannica.com/topic/coalition-government
Sri Lanka’s “independent” parties to launch grand coalition on September 04, Available at :https://economynext.comsri-lankas-independent-parties
Jayadeva Uyangoda, (2012),The Dynamics of Coalition Politics and Democracy in Sri Lanka, Oxford University Press.
தொகுப்பு :
S. Vithurshan, BA(Hons) Special in Political Science and MA(R),
Assistant lecturer,
Department of Political Science and Public policy,
University of Colombo.

.jpg)







ஓர் சிறந்த தெளிவினை பெற்று தரக்கூடியதான கட்டுரை.... superb
ReplyDeleteCoalition government பற்றி ஓர் தெளிவான விளக்கம் கிடைத்தது.
DeleteThank you.
ReplyDeleteThanks
ReplyDelete