அரசியல் சமூகவியல் (Political Sociology)
அரசியல் சமூகவியல் எனும் பகுதி இன்று முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு துறையாகும். அரசியல் சமூகவியல் என்பது அரசியல் மற்றும் சமூகவியல் ஆகியவற்றின் படைப்பாகும் சமூக விஞ்ஞான பாடங்களில் அரசியலும் சமூகவியலும் இருவேறு
தனியான பகுதிகளாகும். இருப்பினும் இரு பகுதிகளிலும் பல்வேறு விடயங்கள் ஒருமித்து காணப்படுகின்றன. ஏனெனில் சமூகம் என்பது அரசியலிலும் அரசியல் என்பது சமூகத்திலும் நிர்ணயிக்கப்படுகின்ற இருவேறு அம்சங்கள் ஆகும். மேலும் இவ்விரு துறைகளும் மனிதனையும் சமூக அமைப்புகளையும் மையப்படுத்திய ஒன்றாகக் காணப்படுகின்றன. அரசியலுக்கான அடிப்படையான அம்சங்களை வழங்குகின்றது
அரசியல் மற்றும் சமூகவியல் ஆகிய இரண்டு சொற்பதங்களின் சேர்க்கையே அரசியல் சமூகவியல் ஆகும். அரசியல் என்பது அரசினைப் பற்றிய ஒரு கற்கை நெறியாக அமைந்திருக்க, சமூகவியல் என்பது சமூகக் கற்கை நெறியாக அமைந்துள்ளது.
சமூகவியலும் அரசியலும் நெருங்கிய தொடர்புடையனவாக காணப்பட்டாலும் இவ்விரண்டும் தமது கற்கை தொடர்பான தெளிவான வரையறைகளை கொண்டிருப்பதில்லை. அரசியல் விஞ்ஞானத்தின் தோற்றத்தினை கிரேக்க கால போலீஸ் அமைப்புடன் தொடர்புபடுத்தலாம். சமூகவியல் என்ற பதமானது கொம்டேயினால் 1839 இல் சமூக விஞ்ஞானம் என்பதனை குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருந்தது. கொம்டே சமூக பௌதிகவியல் என்ற பதத்தினை பயன்படுத்தியிருந்தாலும், பின்னர் அது சமூகவியல் என்ற பதத்தின் மூலமாக மாற்றீடாக பயன்படுத்தப்பட்டதை காணலாம்.
அரசியல் விஞ்ஞானமானது அரசியல் கட்டமைப்புகளில் கவனம் செலுத்துகின்ற அதேவேளை சமூகவியலானது சமூக கட்டமைப்பின் மீது கவனம் செலுத்துகின்றது. அரசியல் சமூகவியல் அரசியல் விஞ்ஞானம் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளில் இருந்து பெற்றுக்கொண்ட கலப்பாகும்.
ஆகஸ்ட் கொம்ட் சமூகவியலின் தந்தையாக சர்வதேசரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவராகும். சமூகவியல் கற்கை நெறி சமூகத்தின் தோற்றம், பரிணாமம், அமைப்பு, செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்கின்றதுடன், அரசு என்பது சமூக அமைப்பின் ஒரு பகுதி எனவும் கூறுகின்றது. அரசியல் விஞ்ஞானத்திற்கும், சமூகவியலுக்குக்கும் இடையிலான கூட்டுறவு கடந்த இரண்டு நூற்றாண்டு காலமாக முதன்மைப்படுத்தப்பட்டு வருவதுடன், அரசியலுக்கான சமூகவியல் அடித்தளத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சமூகவியல், அரசியல் நிகழ்ச்சிக்கான சமூகவியல் வியாக்கியானங்களைத் தருகின்றது.
லிப்செற் என்பவர் “அரசியல் ஒழுங்குமுறையினை பகுப்பாய்விற்கான பெரும்பகுதியாக அங்கீகரிக்காமல் சமூகம் பற்றிய கல்வியை சமூகவியலாளர்கள் யாரும் கற்கவில்லை. அண்மைக்காலத்தில் அனேக அரசியல் விஞ்ஞானிகள் சமூகவியல், உளவியல் உறவுகள் இல்லாமல் அரசியல் செயன்முறைப்படுத்தல்கல்வி சாத்தியமற்றதாகும்” எனக்கூறுகின்றார்.
அரசியல் ஒழுங்குமுறை என்ற எண்ணக்கரு அரசியல் சமூகவியலில் கையாளப்படுகின்றது. இதன்மூலம் அரசியலுக்கும் சமூகவியலுக்கும் இடையில் எல்லைக் கோடுகள் கிடையாது என்ற முடிவுக்கு வரவும் முடியாது.
சர்ரோறி என்பவர் “விதிமுறைக்குட்பட்ட சமூக ஒழுங்குமுறைக் கோட்பாடு எங்கே நிறுத்தி விடப்படுகின்றதோ அங்கே விதிமுறைக்குட்பட்ட அரசியல் ஒழுங்கு முறைக்கு கோட்பாடு ஆரம்பமாகின்றது” எனக் கூறுகின்றார்.
அரசியல் விஞ்ஞானம் மனித அமைப்பாகிய அரசினை மாத்திரமே கவனத்தில் கொள்கின்றது. சமூகவியல் எல்லா வகையான மனித அமைப்புக்களுடனும் தொடர்புபடுகின்றது. அரசியல் விஞ்ஞானத்திற்கும், சமூகவியலுக்கும் இடையிலான நெருங்கிய உறவினை கார்ணர் பின்வருமாறு விபரிக்கின்றார்.
“தனித்துவமானதும், தனித்தனியானதுமான இரண்டு கற்கை நெறிகளாகிய அரசியல் விஞ்ஞானமும், சமூகவியலும் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் பங்களிப்புச் செய்கின்றன. பெரும் அறிவுப்பரப்பாகிய அரசின் செயற்பாடு, ஒழுங்கமைப்பு போன்றவற்றினை சமூகவியல், அரசியல் விஞ்ஞானத்திலிருந்தே பெற்றுக் கொள்கின்றது. இதேபோல் சமூகவியலில் பெரும் அறிவுப்பரப்பாகிய அரசியல் அதிகாரத்தின் தோற்றம், சட்டங்கள், சமூகக்கட்டுப்பாடு போன்றவற்றினை அரசியல் விஞ்ஞானம் சமூகவியலில் இருந்தே பெறுகின்றது. அரசியல் விஞ்ஞானமும் சமூகவியலும் ஒன்றிற்கு ஒன்று கடமைப்பட்டிருந்ததுடன், ஒன்றிற்காக மற்றொன்று பயன்படுத்தப்பட்டும் வருகின்றது” எனக் கூறுகின்றார்.
ஜெப் மன்சா என்பவர் அரசியல் சமூகவியல் என்பது சமூகங்கள் அரசுகள் மற்றும் அரசியல் முரண்பாடுகளுக்கு இடையிலான அதிகாரம் மற்றும் உறவுகள் பற்றிய கற்கையாகும் என கூறுகின்றார்.
இன்றைய அரசியல் மற்றும் சமூகவியல் பல விடயங்கள் தொடர்பில் ஆராயும் போக்கு உள்ளது.
அரசியல் சமூகவியலை இன்று இரு வகையாக பிரிக்கலாம்.
1. The Sociology of politics
2. Political sociology என்பனவாகும்.
அரசின் மதிப்பீடு மற்றும் சட்டவாக்கதினையும் கொடுக்கின்றது. சமூகத்தின் தேவைகளையும் பலன்களையும் கவனத்தில் எடுக்கப்பட பின்பே அரசியல் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. உருவாக்கப்படும் பொது கொள்கைகளும் அதன் சட்டங்களும் கட்டாயம் சமூகத்தின் தேவைகள் என்ற அடிப்படையில் மக்களின் ஆதரவினைப் பெற்று இருக்கும். இதனால் அரசியல் என்பது சமூகத்தை சார்ந்த சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றன. அரசின் கட்டமைப்பு கூறுகள் தொடர்பான விடயங்களை பெற்றுக் கொள்வதற்கு சமூகவியல் ஆனது அரசியல் விஞ்ஞானத்தில் தங்கியுள்ளது. ஏனெனில் அரசே மிக அழகான கட்டமைப்பினை உள்வாங்கி காணப்படுகின்றது. தனிநபர் மற்றும் அமைப்புகள் என்ற ரீதியில் அரசானது அதிகார தொடர்ச்சி மற்றும் அமைப்புக்கள் மீதான கட்டுப்பாடுகளை செலுத்துகின்றது. இதனால் ஒவ்வொரு அரசியல் அனுபவங்களும் சமூக அம்சங்களுக்கு உட்படுவது ஒவ்வொரு சமூகவியல் அனுபவங்களும் அரசியல் அம்சங்களில் இருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றது. சமூகவியல் பற்றிய கற்கை சமூக பொருத்தப்பாட்டை விருத்தி செய்வதுடன் அரசியல் பற்றிய கற்கை சட்டத்திற்கு அடிபணிவினை கொடுக்கிறது. நியாயமான சட்டத்திற்கு அடிபணியும் போது சமூக அமைப்புகள் பாதுகாக்கப்படுகின்றன.
சமூகவியலில் பல்வேறு கோட்பாடுகளும், முறைமைகளும், அரசியல் நடத்தை மற்றும் நிறுவனங்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் போது அரசியல் சமூகவியல் என அழைக்கப்படுவதாக Gauba கூறுகின்றார். அரசியல் சமூகவியல் என்பது ஒரு சமுதாயம் சார்ந்த அம்சங்களை அரசியலுடன் தொடர்புபடுத்தி ஆராய்வதாகும்.
அரசியல் சமூகவியல் என்பது சமூகத்தில் காணப்படுகின்ற தனிமனிதன், குழுக்கள் மற்றும் அரசியல் அமைப்புகளுடன் கொள்ளும் தொடர்பாகும். இத் தொடர்பினை நிர்ணயிக்கின்ற இறந்த மற்றும் நிகழ்காலங்கள், பௌதீக பண்பாட்டு அம்சங்களை கொண்டன. இதில் மனிதன், குடும்பம், சமுதாய அமைப்புகள், மத ரீதியாக இனக்குழுக்கள், மொழி மற்றும் மத ரீதியான இனக்குழுக்கள் சமயம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொழிற்சங்கங்கள் நலன்பேணும் குழுக்கள் அரசியல் நிறுவனங்களான சட்டத்துறை, நிர்வாகத்துறை நீதித்துறை என்பனவும் அரசியல் கட்சிகள் மற்றும் பொருளாதார கட்டமைப்பு என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் 1970 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க அரசியல் சமூகவியலாளர்கள் "புதிய சவால்" என்ற அடிப்படையில் வகுப்புவாதம், இனத்துவம், சமயம், பால்நிலை, சமூக இயக்கங்கள், வியாபாரம், அரசியல் புவியியல், தொழிலாளர் வரலாற்று ரீதியான நிறுவனங்கள் அரசியல் கட்சிகளை ஆய்வு செய்ய முற்பட்டார்கள்.
அரசியல் சமூகவியல் ஆராயின் அடிப்படை அம்சங்கள்
1. மனிதன் எவ்வாறு சமூகத்தினை மாற்றியமைக்கும் தான் மாற்றியமைக்கப்பட்ட சமூகத்தில் அரசு எவ்வாறு உருவாக்கப்படுகின்றது.
2. எந்த அரசு எவ்வாறு சமூகத்தில் பாதுகாக்கின்றது.
3. சமூகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்ட அரசியல் முறைமை என்பது இவ்வாறான அரசியல் கலாச்சாரம், சமூகமயமாதல், அரசியல் பங்குபற்றல் அரசியல் நடத்துவதற்கு கொண்டுள்ளது.
4. சமூகத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் எவ்வாறு அரசினை பாதிக்கின்றன, திடீர் மாற்றங்களுக்கான காரணம் யாது?.
5. சமூக அம்சங்கள் அரசியல் வளர்ச்சிக்கு எவ்வாறு துணைபுரிகின்றன?.
6. சமூகத்தில் ஏற்படும் படிமுறை மாற்றத்திற்கு ஏற்ப அரசியல் மாற்றம் அடைகின்றனவா?.
7. அரசின் சட்டங்கள் சமூகத்தின் அடிப்படை ஒழுங்கினை பாதுகாக்கின்றனவா போன்றனவாகும்.
பிளேட்டோ, அரிஸ்டோட்டில், கால்மாக்ஸ், மெக்ஸ்வெபர் போன்றோர் அரசியலுக்கும் சமூக பொருளாதார நிலைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இம் முக்கியத்துவம் 19, 20, 21 ஆம் நூற்றாண்டுகளில் அதி முக்கியத்துவம் பெற்றது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் தோற்றம் பெற்ற தேசிய அரசுகள் அபிவிருத்திக்காக போராட வேண்டிய நிர்ப்பந்தத்தில் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது சமூகத்தில் காணப்படும் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டது. இதன்போது அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளை ஒப்பிட்டு ஆராய்வதற்கு முக்கிய இடம் வழங்கப்பட்டது.
சமூக பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பின்நடத்தைவாதத்தின் மிக முக்கியமான பண்பு என்பது அரசியல் விஞ்ஞானத்தில் சில திருப்புமுனைகளை ஏற்படுத்துவதாகும்.
கொள்கை விஞ்ஞானம்(Policy Science) என்பது அரசியல் விஞ்ஞானத்தில் தொழிற்பாடு அரசு மற்றும் அரசாங்கம் பற்றிய கோட்பாடாக மட்டும் இருக்கக்கூடாது. சமூகத்தின் இலக்கையும் பெறுமதிகளையும் அடைந்துக் கொள்ளத்தக்க ஒரு கொள்கையாக்க வழிமுறைகளை ஆராய்வதாக இருக்க வேண்டும். கொள்கை ஆக்கத்தினை பற்றிப் பகுப்பாய்வு செய்வதாக இருக்க வேண்டும் என டேவிட் ஈஸ்டன் கூறினார். இது அவசியமானதுடன் பெறுமதிமிக்க தொழிற்பாடுகளை கொண்டிருக்க வேண்டும். இவ்வாறான ஆய்வுக் கல்வி சம்பந்தமான கலந்துரையாடல் மற்றும் விவாதங்களில் காணப்பட வேண்டும்.
சமூக இலக்குகளுக்கு மதிப்பு கொடுப்பதன் மூலம் கொள்கையானது விஞ்ஞானம் ஆகின்றது. இவர் கொள்கை விஞ்ஞானம் தொடர்பாக திடமான கருத்துக்களுடன் காணப்படுகின்றார். இவர் ஐந்து வகையான சிந்தனையாளர்கள் பற்றி குறிப்பிடுகின்றார்கள்.
- இலக்கினை சிந்திப்பவர்கள்
- மாற்றத்தை நோக்கி சிந்திப்பவர்கள்
- விஞ்ஞானரீதியாக சிந்திப்பவர்கள்
- திடமாக சிந்திப்பவர்கள்
- சாத்தியப்படக் கூடியவாறு சிந்திப்பவர்கள்.
லாஸ்ட்வெல்லின் கருத்துக்களை பின்தொடர்ந்தவரான டேவிட் ஈஸ்ரன் என்பவர் பின் நடத்தைவாதம் தொடர்பான கருத்துக்களில் பொதுக்கொள்கை, சமூகத்திற்கு எது தேவை, எது செய்ய வேண்டும் என்பதை மையப்படுத்தியதாக கருத்துக்களை வெளியிட்டு அரசியலையும் சமூகத்தினையும் ஒருங்கிணைத்தார்.
இவ்வாறான சமூக மற்றும் அரசியல் ரீதியான ஒப்பீட்டில் தனி மனிதனின் உளவியல் என்பதும் அடிப்படை அம்சமாக காணப்படுகின்றது. இதனால் அரசியலில் சமூக உளவியல் முறையானது முதல்முறையாக Harold lasswell என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையில் பண்புசார் மற்றும் அனுபவங்கள் பயன்படுத்தப்பட்டன. டேவிட் ஈஸ்டர்ன், கேப்ரியல் ஆல்மெண்ட், ஆர். எ. டால் போன்ற நடத்தை வாதிகளும் இதனை அபிவிருத்தி செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து அரசியல் நடத்தை அரசியல் சமூகமயமாதல், அரசியல் கலாச்சாரம், அரசியல் தொடர்பாடல், அரசியல் பங்குபற்றல், அரசியல் நவீனமயமாக்கம் போன்ற அம்சங்களில் உளவியல், சமூக பொருளாதார அம்சங்களை முதன்மைப்படுத்திய ஆய்வுகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அரசியலோடு சமூகத்தினையும் ஒன்றிணைத்த இவ் எண்ணக்கருக்கள் அரசியல் முறையிலும் அரசியல் அபிவிருத்தியிலும் அதிக தாக்கம் செலுத்தின. இதனால் இவ்விரு துறைகளும் இணைந்த "அரசியல் சமூகவியல்" என்ற பாடத்துறையானது ஒப்பீட்டு அரசியலில் முக்கிய இடத்தினைப் பெற்றுக் கொண்டது.
அரசியல் சமூகவியல் துறை வளர பங்களிப்பு செய்தவர் லிப்செட். அவரின் காணொளி பின்வருமாறு :
தொகுப்பு:
S. Vithurshan,
Special in political science,
University of Peradeniya.
Comments
Post a Comment