அரசியல் கட்சிகளும், அடிப்படை எண்ணக்கருக்களும்

ரசியல் கட்சி என்பது, அரசில் அரசியல் அதிகாரத்தை அடைவதையும், அதனைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் சார்ந்த ஒரு அமைப்பு ஆகும். இவை பொதுவாகத் தேர்தல்களில் பங்கு கொள்வதன் மூலம் இந் நோக்கத்தை அடைய முயல்கின்றன.

ஒத்த கருத்துடைய மக்களால் அரசியல் அதிகாரத்தைப் பெறும் நோக்கில் தோற்றுவிக்கப்படும் அமைப்பு அரசியல் கட்சி எனப்படும். அரசியல் கட்சிகள் பொதுவாக ஒரு வெளிப்படையான கொள்கையையோ அல்லது, ஒரு குறித்த இலக்குடன் கூடிய நோக்கையோ கொண்டிருக்கின்றன. இவை சில சமயங்களில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களோடு கூடியவர்களின் ஒரு கூட்டணியாகவும் அமைவதுண்டு.

அர‌சிய‌ல் கட்சி முறை என்றால் என்ன?.

அரசியல் வாழ்க்கையில் தங்களுக்குள் சில கொள்கைகளையும், கோட்பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டு, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பே கட்சி என்பதாகும்.

1.எட்மண்ட் பர்க் என்பவர் "தங்களது கூட்டு முயற்சியால் குறிப்பிட்ட சில கொள்கைகளின் மீது தேசிய ஆர்வத்தை உருவாக்கி ஒத்தகருத்தை ஏற்படுத்தும் மக்கள் கூட்டமைப்பிற்கே அரசியல் கட்சி" என குறிப்பிட்டுள்ளார்.

2.ஸ்டீபன் லீகாக் குடிமக்கள் ஒன்று திரண்டு அரசியல் பிரிவுகளை ஏற்படுத்தி ஒன்றாகச் செயல்படும் கூட்டமே அரசியல் கட்சி எனப்படுகிறது.

3.கில் கிரைஸ்ட் ஒத்த அரசியல் கருத்துக்களை செயல்படுத்தும் ஒரு மக்கள் கூட்டமைப்பு அரசியல் கட்சி எனப்படுகிறது.

ஏன் அரசியல் கட்சிகள் தேவை:

ஒரு தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் அல்லது தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளுக்கு அரசியல் கட்சி என்பது மிகவும் அவசியம். மக்கள் மற்றும் அரசாங்கம், வாக்காளர்கள் மற்றும் பிரதிநிதித்துவ நிறுவனங்களுக்கு இடையே ஒரு உறவை ஏற்படுத்தும் பாலமாக அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. ஒரு அரசியல் முறையில் நாட்டின் சமுதாயத் தேவை மற்றும் குறிக்கோளை அடையும் வழிகாட்டியாகவும், எண்ணங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தும் கருவியாகவும் அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. இவை, சில சிறந்த கருத்துக்கள் மற்றும் அரசியல் கொள்கைகளை வழங்கி அரசியல் மதிப்பீட்டினை உயர்த்துகின்றன. மேலும் மக்களுக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுத்து சமுதாய பிரச்சினைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஒன்று திரட்டி அரசியல் மற்றும் தேர்தலில் பங்கேற்கச் செய்வதும், நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்காகவும் பாடுபடச் செய்வதே கட்சிகளின் பணியாகும்.

கட்சிகள் தலைமையை உருவாக்கும் நோக்கத்துடன் மக்களில் ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சியளித்து உள்ளாட்சியிலிருந்து சட்டமன்றம், பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவையில் பங்கேற்கும் அளவிற்கு அவர்களைத் தயார் செய்யும் நோக்கத்தையும் அரசியல் கட்சிகள் செய்கின்றன. அரசியல் கட்சிகள் அரசியல் அதிகாரத்தை ஏற்றிச் செல்லும் வாகனங்களாகும். இவை கல்லாமை மற்றும் தீண்டாமை போன்ற சமுதாயக் கொடுமைகளை வேறோடு அழிக்கப் பாடுபடுவதுடன், பஞ்சம், வெள்ளம் போன்றவை மக்களைத் தாக்கும் பொழுது அவற்றிலிருந்து மக்களை கைதூக்கி விட்டு காப்பாற்றுவதற்காகப் பாடுபடுகின்றன. இவை அரசியலுக்காக மக்களை ஒன்று திரட்டி, ஆள்சேர்க்கும் பணியிலீடுபடுகின்றன. மேலும் இவை மக்கள்நலனுக்காக சமுதாய நல விழாக்களை நடத்துகின்றன.

அரசியல் கட்சி முறையின் வகைகள்

மக்களாட்சி முறையின் அடிப்படையில் அரசியல் கட்சிகளை மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படும். அவையாவன:

1.ஒரு கட்சி முறை
2.இரு கட்சி முறை
3.பல கட்சி முறை

ஒரு கட்சி முறை:

ஒரு கட்சி முறையின் கீழ் ஒரே ஒரு கட்சி மட்டும் அரசியல் முறையில் இருக்கும். இக் கட்சி முறை மக்களாலும் அரசியலமைப்புச் சட்டங்களாலும் அங்கீகரிக்கப்பட்டதாகக் காணப்படும். எத்தகைய எதிர்ப்பும் மாற்றுக் கருத்தும் இன்றி அரசு அதிகாரத்தைப் பெற்று இயங்கும். ஒரு கட்சி ஆட்சி முறையில் மற்ற கட்சிகள் செயல்படாமல் இருக்கும். சீனா மற்றும் கியூபா போன்ற நாடுகளில் இந்த ஒரு கட்சி முறை நடைமுறையில் இருக்கிறது.

ஒரு கட்சி முறையின் நிறைகள்:

1. ஒரு கட்சி முறை அவசர, ஆபத்தான, இயற்கைப் பேரிடர் காலங்களில் திறமையாகவும் சுதந்திரமாகவும் விரைந்து செயல்பட்டு மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நிவாரணங்களையும் அளித்திட முடியும்.

2.ஒரு கட்சி ஆட்சி முறையில் முடிவுகள் உடனடியாக எடுக்கப்படும் வாய்ப்புகள் மிகுதி.செலவு குறைவு. சிக்கனமானது.

3.நாட்டின் பெருமைகள் பெருமளவு உயர்வு அடைந்து காணப்படும்.

ஒரு கட்சி முறையின் குறைகள்:

1.ஒரு கட்சி ஆட்சி முறையில் நாடு தழுவிய உரையாடல்கள் மற்றும் விமர்சனங்கள் நடைபெறும் வாய்ப்புகள் இல்லை.

2. மக்களுக்கான அரசியல் உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் சாதாரண சுதந்திர உரிமை ஆகியவை ஒரு கட்சி முறையில் சில வேளைகளில் மறுக்கப்படுவதாக உள்ளன.

3. ஊழல் மற்றும் திறமையின்மைக் காரணங்களால் ஒரு கட்சி முறை நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பெருமளவு பாதிப்படையச் செய்கின்றது.

4.எதேச்சதிகாரத் தன்மைகள் மற்றும் சர்வாதிகாரப் போக்குகள் போன்றவை ஒரு கட்சி முறையால் உருவாக வழிவகுக்கிறது.

இரு கட்சி முறை:


இரு கட்சி முறையில் ஒரு கட்சியானது ஆளும்கட்சியாக இருக்கும். மற்றொன்று எதிர்கட்சியாக காணப்படும். இம்முறையில் ஆளும் கட்சியாக உள்ள கட்சி அரசாங்கத்தினை நடத்துகிறது.

ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் குறைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி எதிர் கட்சி அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றில் இரு கட்சி முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

பிரிட்டனில் தொழிலாளர்கள் கட்சி மற்றும் பழமைவாத கட்சி ( Conservative Party) என இரு கட்சிகள் இயங்கி வருகின்றன.

இரு கட்சி முறையின் நிறைகள்:

1.இரு கட்சி முறையில் இரண்டு கட்சிகள் மட்டும் இருப்பதால் மக்கள் குழப்பமின்றி ஆளும் கட்சியை முறையாகத் தேர்ந்தெடுப்பது என்பது எளிதாக உள்ளது.


2. எதிர் கட்சி எப்போதும் விழிப்புடன் செயல்பட்டு ஆளும் கட்சியினை வழிநடத்துகிறது.

இரு கட்சி முறையின் குறைபாடுகள்:

1.இரு கட்சி முறையில் காணப்படும் இரண்டு கட்சிகளின் செயற்பாடுகளும் மோசமாக இருக்குமேயானால், மூன்றாவது கட்சியைத் தேர்வு செய்வதற்கு வாய்ப்பில்லை.

2.இவ்விரண்டு கட்சிகளும் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட தவறான உடன்படிக்கைகளினால் மக்கள் முட்டாளாக்கப்படும் அவல நிலைக்கு ஆட்படுவர். அதன்மூலம் இரு கட்சிகளின் மீதான தவறுகள் மற்றும் ஊழல்கள் ஆகியவற்றை மூடிமறைக்க வழிகள் மிகுதியாக உள்ளன.

பல கட்சி முறை:

இரண்டிற்கு மேற்பட்ட கட்சிகள் கொண்ட ஆட்சிமுறைக்குப் பல கட்சி முறை எனப்படும். பல கட்சி முறையானது இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது.


பல கட்சி முறையின் நிறைகள்:

1.பல கட்சி முறையில் பல கட்சிகள் இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றி அரசாங்கத்தை நிர்மாணிக்க முனையும். அதற்காக, பல்வேறு நல்ல திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்திடும் தேர்தல் பரப்புரை அறிக்கைகளை மக்கள் மத்தியில் முன்வைக்கும்.

2.பல கட்சி முறையில் புதிய கருத்துகளையும் புதிய நோக்கில் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்கொண்ட புதிய தலைவர்களையும் தேர்வு செய்ய மக்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பல கட்சி முறையின் குறைகள்:

1.பல கட்சி முறையில் ஊழல் மிகுந்து காணப்படும்.

2.மாநில, மாகாண உணர்வுகள் செல்வாக்குப் பெறும்.

3.ஒரு சார்புடைமை சிந்தனைகள் மிகும்.
பல கட்சி முறையில் ஆளும் கட்சி மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், தம் ஆட்சியாளர்களின் நன்மைகளைப் பெரிதென கருத வாய்ப்புண்டு.

4.பெரும்பான்மை பலமிழந்து காணப்படும் ஆளும் கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டு, பிற கட்சி உறுப்பினர்களைக் கவர்ந்து அரசியல் அநாகரிகம் மேலோங்கும்.

5.கட்சித் தாவல் நடவடிக்கைகளால் பல கட்சி முறையில் அரசாங்கம் நிலைத்தன்மை அற்றதாக உருமாறி பல்வேறு ஊறுகள் உண்டாகும்.

குறிப்பு:

இலங்கையில் பல கட்சிகள் காணப்படுகின்றது. ஆனாலும் இரு பிரதான கட்சிகளின் ஆதிக்கம் மட்டுமே தொடர்ந்து வருவதால் அது இரு கட்சிகளை முதன்மைப்படுத்தும் இரு கட்சி ஆதிக்க முறைமை முறைமை காணப்படுகின்றது. ஆரம்பத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய கட்சி காணப்பட்டது. தற்போது பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதிக்கம் காணப்படுகின்றது. 


இலங்கையில் காணப்படும் பிரதான கட்சிகள்(பெரும்பான்மை, சிறுபான்மை). 

உசாத்துணை நூல்கள்:

யோதிலிங்கம், சி. அ, (2001), "இலங்கையில் அரசியல் கட்சிமுறைமை", குமரன் புத்தக இல்லம்.

தொகுப்பு:


S. Vithurshan, Special in political science, 

University of Peradeniya. 

Comments

Popular posts from this blog

கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910).

மனித உரிமையின் வரலாற்று வளர்ச்சி ஒரு தொகுப்பு

மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம்:1924-1931