அரசியல் கலாசார எண்ணக்கருவும், இலங்கையில் அதன் பண்பு காணப்படும் விதமும்.

அரசியல் கலாச்சாரம் என்ற விடயம் புதியதொன்றாக காணப்படுவதுடன் அது தொடர்பான தெளிவான புரிதல்கள் சிக்கலானவை என்றே கூற வேண்டியுள்ளது.  பொதுவாக  ஒரு தேசத்தின் அரசியல் கலாச்சாரம் ஆனது அங்குள்ள மக்களின் அரசியல் நெறிமுறைகள், செயற்பாடுகள், அரசியலமைப்பு பற்றிய அவர்களது கருத்துக்கள், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகள், மக்களின் பங்குபற்றல்கள் அவர்களது பணிகள், உரிமைகள், கடமைகள் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.  ஒரு சமூகத்தின் நடை, உடை, பாவனை, மொழி, இனம், வழிபாடுகள், நெறிமுறைகள், கோட்பாடுகள், கலை, கல்வி, ஆன்மீக வளர்ச்சி என்பன பொதுவான கலாச்சாரங்கள் ஆகும்.

ஆனால் அரசியல் கலாச்சாரம் என்பது அரசியல் சிந்தனைகள் செயல்பாடுகள், நடத்தைகள் போன்றவற்றைக் குறித்து நிற்கின்றது.  பெரும்பாலான அறிஞர்கள் அரசியல் கலாச்சாரம் ஆனது ஒரு முறைமை கலாச்சாரம், ஒரு செயன்முறை கலாச்சாரம், ஒரு கொள்கை கலாச்சாரம் என மூன்று  பரிமாணங்களைக் கடந்து வந்துள்ளது என்கிறார்கள்.  இந்த அரசியல் கலாச்சாரத்தின் இயல்பினை அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள முடியும் அந்த வகையில்,  பொதுக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றது,  அரசியல் நடத்தை முதன்மைப்படுத்துவது, பங்கிடக்கூடிய விழுமியங்களைக் கொண்ட அரசியல் முறையினை பிரதிபலிப்பது, முறையான உள்ளடக்கத்தைக் கொண்டு காணப்படுவது, அரசியல் பயிற்சி வழங்குவது, அரசியல் சமூகமயமாதலை அடியொட்டி காணப்படும்,  உணர்வுபூர்வமான அம்சங்களை கொண்டது, ஒட்டுமொத்த அரசியல் விழுமியங்கள் உள்ளடக்கமாக இருப்பது, அரசியல் கருத்தியலை பிரதிபலிப்பது, வெளிப்படையான தன்மை கொண்டிருப்பது என்பன இவற்றின் பொதுவான பண்பு எனலாம். 

அரசியல் கலாச்சாரம் அனைத்து பொதுவாக தனி மனித கலாச்சாரம், ஒழுக்க ரீதியான அரசியல் கலாச்சாரம், மரபு ரீதியான அரசியல் கலாச்சாரம் என பிரித்துப் பார்க்கப்படுகிறது எனினும் அரசியல் கலாச்சாரம் பற்றிய சிறந்த கருத்தினை முன்வைத்த சிட்னி வேர்பா, கேப்ரியல் ஆல்மெண்ட்  போன்றோர்  அரசியல் கலாச்சாரத்தை  பற்றிக் கூறும் போது மூன்று வகையான வகைப்படுத்தலை மேற்கொள்கிறார்கள்.  அதில் குறுகிய அரசியல் கலாச்சாரம், அகநிலை அரசியல் கலாச்சாரம், பங்குபற்றல் அரசியல் கலாச்சாரம் என்பன உள்ளடங்குகின்றன.  எந்த ஒரு நாட்டிலும் இந்த வகையான  அரசியல் கலாசாரத்தை முழுமையாக காண முடியாது.  ஏதோ ஒரு வகையில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட  அரசியல் கலாச்சாரத்தின் இயல்புகளைக் கொண்டு காணப்படும்.  அந்த வகையில் இலங்கையும்  அவ்வாறான பண்புகளைக் கொண்டு காணப்படுகின்றது.  இதனால் பொது மக்களின் அரசியல் கலாச்சாரமும் காலத்திற்கு காலம் மாறுபட்டு கொண்டிருக்கிறது.  அதனால் பொதுமக்களின் அரசியல் கலாச்சாரம் குறித்து அறிந்திருக்க வேண்டிய அவசியம் தற்காலத்தில் காணப்படுகின்றது.

இலங்கையும்  அரசியற் கலாசாரமும்

இலங்கை போன்ற மூன்றாம உலக நாடுகளில் அரசியல் கலாச்சாரத்தினை அறிந்து கொள்வது மிகவும் கடினம். பொதுவாக மூன்றாம் உலக அரசுகளாக காணப்படும் ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க அரசுகள் காலணித்துவத்திற்கு உட்பட்ட கலாச்சாரத்தினை ஆரம்பத்தில் கொண்டிருந்தன. இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மரபுரீதியான மன்னர் ஆட்சி முறையிலிருந்து மாற்றமடைந்து காலணித்துவ ஆட்சியை தழுவின. இதன்போது பிரித்தானியரால் வழங்கப்பட்ட அரசியல் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டது. அதாவது பாராளுமன்ற மந்திரி சபை முறையை கொண்ட அரசியல் அமைப்பாகும். இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் அரசியலமைப்பின் மூலம் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் வறுமை, மத அடிப்படைவாதம், மற்றும் பிற்போக்குத்தனமான மக்களின் அரசியல் என்பன மரபுகளை உள்வாங்கி இருக்கின்றன.

இரண்டாம் உலக யுத்தத்துடன் ஆசிய ஆபிரிக்க நாடுகள் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள எத்தனித்தன. இன்று அனைத்து அரசுகளும் சுதந்திர அரசியலா காணப்படுகின்றன. அதிகளவில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அரசுக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவு என்பது அரசியலில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும் பண்புகளில் ஒன்றாக காணப்படுகின்றது. பல்லின சமூகத்தில் பலமான தலைவர்களைக் கொண்ட அரசு அரசியலில் அதிகாரம் செலுத்துகிறது. இந்த நாடுகளின் இராணுவ சிந்தனைகளும், இராஜதந்திரங்களும், மத அடிப்படைவாத கருத்துக்களும், மொழி ரீதியான பிரச்சினைகளும், தேர்தல் வன்முறைகளும் முக்கியம் பெறுகின்றன. இவ்வாறான இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அரசுக்கும் சமூகத்துக்கும் முக்கியமான தொடர்பினை ஏற்படுத்த அரசியல் கலாச்சாரம் பின்வரும் வடிவங்களில் காணப்படலாம்.

  • குடும்ப வழி அரசியல் கலாச்சாரம் 
  • ராணுவ அரசியல் கலாச்சாரம்
  • பங்குபற்றல் அரசியல் கலாச்சாரம்
  • வன்முறை அரசியல் கலாச்சாரம்.  

 சுதந்திரத்தினை பெற்றுக்கொண்ட அரசுகள் தேசிய அடையாளம் மற்றும் இன ரீதியான அடையாளத்தை மையப்படுத்தி நாட்டை கட்டியெழுப்புவதிலும், நாடுகளில் முதன்மை கலாச்சாரத்தினை முதன்மைப்படுத்திய நாடுகளில் அரசியலில் கட்டியெழுப்புவதிலும் தேசத்தை கட்டியெழுப்பும் தோல்வியைத் தழுவினர்.

சில அரசியல் கலாச்சாரங்கள் தெளிவாக வன்முறையற்று காணப்படுவதை அவதானிக்கலாம். இங்கு இலக்கு என்பது தெளிவானதாகும். அதனை அடைவதற்கான முயற்சியும் காணப்படும். சில கலாசாரங்கள் வன்முறைக்கு செல்லக்கூடியன. இதனை பன்மைத்துவ சமூகங்கள் காணலாம். வேறுபட்ட குழுக்கள் தமது சொந்த அடையாளத்தை பாதுகாத்துக்கொள்ள வன்முறைக் கலாச்சாரத்தை பின்பற்றி வந்திருக்கலாம். இதனை இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் யுத்தம் என்பது அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. அரசியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் காணப்படலாம்.

இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் தாக்கம் செலுத்தும் காரணிகள்.

இன்று இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் பல்வேறுபட்ட காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.  இந்தக் காரணிகளே  அரசியலிலும் பொது மக்களிடமும் செல்வாக்கு செலுத்துகின்றது.  இந்த காரணிகள் மரபு ரீதியான காரணிகளாகவோ,  முறைசார் மற்றும் முறைசாரா காரணிகளாக  அமையலாம்.  அந்தவகையில் இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தின் தாக்கம் செலுத்தும் காரணிகளாக சமயம், மொழி, புவியியல் காரணிகள், சமூக பொருளாதார அபிவிருத்தி,  மரபார்ந்த பாரம்பரியம்,  லஞ்ச ஊழல்,   ஊடகங்களின் செயல்பாடு,  அரசியல் கட்சிகளின் செயற்பாடு,  அரசியல் பங்குபற்றல்,  அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் நடத்தைகளும் என்பன அடங்கும். இவை செலுத்தும் தாக்கத்தினை பின்வருமாறு நோக்கலாம்.

மதம்

இலங்கையில் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை செல்வாக்குமிக்க ஒன்றாக இருக்கும் காரணியே மதமாகும். இந்த மதமானது இலங்கையில் பல்வேறுபட்ட பிரிவில் காணப்படுகின்றது. பல்லிமக்கள் வாழுகின்ற ஒரு நாட்டில்  பல்வேறுபட்ட மதங்கள் காணப்படும்.  இதனால் இலங்கை  பல்வகை மதங்களைக் கொண்ட ஒரு அரசாக காணப்படுகின்றது.  இன்று இலங்கையில் பல்வேறு மதங்கள் காணப்பட்டாலும் பௌத்த மதத்தின் செல்வாக்கே அதிகமாக காணப்படுகின்றது.  இதனால் இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் பல்வேறு பிரச்சினைகள் காலத்திற்கு காலம் தோன்றியிருக்கின்றன.  உதாரணமாக 1915 இல் இடம்பெற்ற முஸ்லிம் சிங்கள கலவரம்,  30 ஆண்டு தமிழர் போராட்டம், கண்டி திகன பிரச்சனை,  ஈஸ்டர் தாக்குதல் என்பவற்றைக் குறிப்பிடலாம். இலங்கையில்  இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கலாச்சாரம் ஒழுங்கமைந்துள்ளதை காணலாம்.  இதனால் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள்  தோற்றம் பெறுகின்றது.  இவை அரசியல் கலாச்சாரத்தை  பாதிப்பதாக உள்ளது.

மொழி

அரசியல் கலாச்சாரத்தை பாதிக்கும்  காரணிகளில் ஒன்றே மொழியாகும்.  வரலாற்று ரீதியாக இலங்கையின்  மொழியை பார்க்கும்போது அது பல்வேறுபட்ட பிரச்சனைகளை கடந்தே  வந்துள்ளது.  இலங்கையின் அரசியல் செயல்முறையில் மொழியின் தாக்கம்  சுதந்திரத்துக்கு பின்னரே அதிகமாக காணப்பட்டது.  பிரித்தானிய ஆட்சியில்  மொழியானது மக்களின் அரசியல் பங்குபற்றலை தீர்மானிக்கும் காரணியாக இருந்தது.  அந்தவகையில் சுதந்திரத்துக்குப் பிறகு 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் பாரியளவு இலங்கையில் இனங்களுக்கிடையே பிளவுகளை உருவாக்க காரணமாகியது.  இதனால் இலங்கையில் பிளவுபட்ட அரசியல் கலாச்சாரம் ஒன்றை  மக்களிடையே உருவாக்கியது.  இது பிற்காலத்தில்  இலங்கையை சிங்கள மொழி கொண்ட தனி இராஜ்ஜியமாக மாற்றுவதற்கு  தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.  இதனால் சிறுபான்மை மக்கள் பாதிப்பு  அடைந்தனர்.  இதன் தாக்கம் இன்று வரை இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் காணப்படுகின்றது.  இன்று இலங்கையில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடும்  நிலை உருவாகி இருப்பதற்கு இந்த  பிளவே காரணமாகும்.

புவியியல் அமைவிடம்

இலங்கையில் புவியியல் காரணி  அரசியல் கலாச்சாரத்தில் செல்வாக்கு செலுத்தும் ஒன்றாக உள்ளது.  குறிப்பாக இலங்கையினுடைய அமைவிடம், அதைப்போல் இலங்கையின் உள்ளே உள்ள  அமைவிடம்  மக்களின் அரசியல் செயன்முறையில் பாரிய தாக்கத்தை செலுத்தி வருகின்றது.  குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள்  அதிகமாக வசிக்கின்றனர்.  ஏனைய இடங்களில் சிங்கள மக்களே பெரும்பான்மையாக உள்ளனர்.  இதுவும் அரசியல் கலாச்சாரத்தில் தாக்கம் செலுத்துகின்றது.  வடக்கு, கிழக்கு மக்கள் சேர்ந்து ஒரு ஆட்சியாகவும் ஏனைய பிரதேசத்தில் வாழும் பெரும்பான்மை மக்கள் வேறு ஒரு ஆட்சியாக இருக்கும் போக்கும் எதிர்காலத்தில் உருவாக காரணமாக இருந்தது.  இதனால் இலங்கையில் பிரிவினைவாதக் கோரிக்கை உருவாக காரணமாக அமைந்தது.  இன்றுவரை இந்த பிரிவினைவாத கோரிக்கை அடிப்படையாகக் கொண்டே இலங்கை  தமிழர்களின் அரசியல் கலாச்சாரம் ஒழுங்கு அமைந்துள்ளதை காணலாம்.

சமூக பொருளாதார அபிவிருத்தி

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளும்  அதன் அரசியல் கலாச்சாரத்தை வடிவமைக்கின்றன.  ஆரம்பத்தில் அபிவிருத்தி என்பது நகர்ப்புறங்களை மையப்படுத்திய காணப்பட்டமையால் கிராமப்புறங்கள் கவனிப்புக்கு உட்பட்டமையால்  இலங்கையில் முரண்பட்ட அரச கலாச்சாரம் ஒன்று உருவாகுவதற்கு காரணமாக அமைந்தது.  இதனால் கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்பு இன்மை, வறுமை என்பவற்றுக்கு தள்ளப்பட்டனர்.  இதனால் இலங்கையில் இருவேறுபட்ட காலத்தில் ஜேவிபி கலவரம் உருவாகியது.  இதனால் தற்காலத்தில் அதிகமாக நகர்ப்புறங்களில்  மட்டுமன்றி கிராமப்புறங்களிலும் அபிவிருத்தியை மேற்கொண்டு  மக்களை தன்வசம் ஈர்க்கும்  வேலைகளில் அரசியல்வாதிகள் ஈடுபடுகின்றனர்.  குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையில் அதிகமாக அபிவிருத்திசார் செயல்பாடுகளுக்கும், சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதைக் காணலாம்.   அதேபோல் 1980களின் பின்னர்  அபிவிருத்தி நடவடிக்கைகள் இன, மத பேதங்களை அடிப்படையாகக் கொண்டும், குறித்த இனம் மதங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டமையினால் இனவாதம் என்பன தோற்றம் பெற காரணமாகியது. இது இலங்கையில் அரசியல் கலாச்சாரத்தில் தாக்கம் செலுத்தியது.

இலஞ்ச ஊழல்

இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் தாக்கம் செலுத்தும் ஒன்றே இலஞ்ச ஊழல் ஆகும்.  இலங்கையில் ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் அதிக அதிகமாக ஊழலில்  ஈடுபடுகின்றார்கள்.  இதனால் நாடும் நாட்டின் அபிவிருத்தியும், பொருளாதாரமும் பின்னடைவைச் சந்திக்கின்றன மக்களின் தேவைகள் நிராகரிக்கப்படுகின்றன.  மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் சென்றடையாமை போன்ற காரணத்தினால் இலங்கையில் அரசியல் கலாச்சார  சூழலில் மிக முக்கியமான தாக்கத்தை செலுத்துகின்றது.  2019 தரவின் படி இலங்கை ஊழலில் 93 வது இடத்தில் உள்ளது.

பாரம்பரிய மரபுகள்

இன்று இலங்கையில்  செல்வாக்கு செலுத்தும் ஒரு  விடயம்தான் பாரம்பரிய மரபுகள்.  இன்று அரசியல் செயல்முறையில் வாக்களிக்கும் போது குறித்த இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு வாக்களிக்கும் போக்கு  காணப்படுகின்றது.  உதாரணமாக சிங்கள மக்களிடையே  கொவிகம என்ற சாதியினருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.  அதைப்போல் வேளாளர் சாதியினருக்கு  வட கிழக்கில் உயர்ந்த இடம் வழங்கப்படுகின்றது.  அதேபோல் அரசியல் செயல்முறையில் சமய ரீதியான  சடங்குகளை மேற்கொள்ளும் போக்கு இலங்கையில் காணப்படுகின்றது.  வரலாற்று மரபில் வேரூன்றி காணப்படுகின்றதும், வரலாறையும், மதத்தையும்  ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத அளவுக்கும் இலங்கையில் அரசியல் கலாச்சாரம் காணப்படுகின்றது. இது இலங்கையில் குறுகிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கின்றது.

அரசியல்வாதிகளின் நடத்தைகளும் செயற்பாடுகளும்

இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தை பொறுத்தவரையில் அரசியல்வாதிகளின் நடத்தைகளும் செயற்பாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கையில் அதிகமாக அரசியல் சகாய முறைகள் காணப்படுவதைக் காணலாம். குடும்ப ஆட்சி, குடும்ப உறுப்பினர்களுக்கான பதவி வழங்குதல் என்பன இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் காணப்படுகின்றது.  அதேபோல் தேர்தல் காலங்களில் வாக்குறுதி வழங்கிவிட்டு அதனை நிறைவேற்றாமல்   செயற்படல்,  மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இடைவெளி இலங்கையில் அதிகமாக காணப்படுதல்,   அரசியல்வாதிகளின் ஏமாற்றுத்தனம், போலித்தனம் போன்றவற்றால் மக்கள் அதிருப்தி அடைகின்ற போக்கு இலங்கையினுடைய அரசியல் கலாச்சாரத்தில் காணப்படுகின்றது. இது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தை குறுகிய அரசியல் கலாச்சாரமாக மாறுவதற்கு காரணமாக அமைகின்றது.

ஊடகம்

இலங்கையில் அரசியல் கலாச்சாரத்தில் தாக்கம் செலுத்துகின்ற முக்கியமான  காரணியான ஊடகங்கள் காணப்படுகின்றன.  இலங்கையில் ஊடகங்கள் பற்றி வகிபங்கு அதிகமாகவே காணப்படுகின்றது. தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என தீர்மானிக்கும் ஒரு காரணியாக அரசியலில் இந்த ஊடகங்கள் தான் காணப்படுகின்றன. ஆகவே ஒரு நாட்டில் மக்களின் அரசியல் கலாச்சாரம் எந்தளவு இருக்கின்றது என்பதைத் தீர்மானிக்கவும், அதனை வளர்ச்சி அடைய செய்வதா அல்லது வீழ்ச்சி அடைய அடைய செய்வதா என்பதை தீர்மானிக்கும் ஒரு காரணியாகவும் ஊடகங்கள் காணப்படுகின்றது.  இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச காலத்தில் ஊடக சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக காணப்பட்டது.  ஆனால் மைத்திரிபால சிறிசேன காலத்தில்தான் தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் ஊடக சுதந்திரம் ஆனது அதிகரிக்கப்பட்டது. இதனால் அரசியல் கலாச்சாரம் ஆனது  தூய்மை ஆக்கப்பட்டது.  ஆனால் மீண்டும் 2020 ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையில் ஊடக சுதந்திரம் ஆனது கேள்விக்குறியாகி  இருப்பதை நடைமுறையில் காணலாம்.

அரசியல் கட்சிகள்

இன்றைய இலங்கையில் அரசியல் கலாச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு மிக முக்கியமானது.  இன்று அதிகமாக அரசியல் கலாச்சாரத்தில் தாக்கம் செலுத்துவதாக அரசியல் கட்சிகள் காணப்படுகின்றது.  காரணம் மக்களை ஒன்று திரட்டுதல், மக்களின் பங்குபற்றலுக்கான காரணமாக அமைதல், ஒரு நாட்டின் அரசியலை  மேம்படுத்தல், அதைப்போல ஒரு நாட்டில் பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குதல் போன்ற இவ் வெற்றிக்கு இந்த அரசியல் கட்சிகளே மூலகாரணமாக அமைகிறது. இதனால் அவை அரசியல் கலாச்சாரத்தில் அதிகளவு தாக்கம் செலுத்துகின்றது.  அதேபோல் இன்று அரசியல் கட்சிகள் இன, மத அடிப்படையில் உருவாகி இந்த அரசியல் கலாச்சாரத்தில் பிளவுகளை உருவாக்க காரணமாக அமைகிறது .

உதாரணமாக சிங்கள இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு பொதுபலசேனா போன்ற கட்சிகள் உருவாகியிருப்பதை இலங்கையில் காணலாம்.

இலங்கையில் பொதுமக்களின் அரசியல் கலாச்சாரம்


இலங்கையில்   பொதுமக்களின் அரசியல் பங்குபற்றலானது கீழ்மட்டத்தில் காணப்படுகின்றது.  இலங்கை அரசியலில் பொதுமக்கள்  விளக்கம் கொண்டவர்களாக காணப்பட்டாலும் அரசியலில் ஆர்வம், ஈடுபாடு காட்டுவதில்லை.  ஒவ்வொரு ஆண்டும் இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தலில் பெரும்பான்மை மக்கள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளை அளித்து அளிக்கின்றனர்.  அதைப்போல் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்கும் வீதமும்  குறைந்து செல்லும் போக்கினை காணலாம்.  சில இடங்களில் ஆட்சிபீடம் வரும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால்  வாக்களிப்பதை தவிர்க்கின்றனர். இதனால் வாக்களிக்கும் வீதமும் பங்குபற்றலும் குறைகின்றன.  அதேபோல் இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் ஆட்சியாளர்களையும், சகல விதிகளுக்கும் சட்டத்திற்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய வேண்டியது கடமை என மக்கள் கருதுகின்ற போக்கு காணப்படுகின்றது.  அதைப்போல் ஆட்சியில் உள்ள அரசாங்கம் தங்களுக்கு குறைந்தபட்ச வசதிகள் செய்து தரவேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். இது கீழ்ப்படிவுள்ள அரசியல் கலாச்சாரத்தின் பண்பாகும்.  இந்தப் போக்கு இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் காணப்படும் முக்கியமான போக்காகும்.  அரசியல் முறைமை, அதன் செயற்பாடுகளில் மக்களிடம் ஓரளவு தெளிவு தான் இலங்கையில் காணப்படுகின்றன.  இலங்கை மக்களில் பெரும்பான்மை மக்களுக்கு அரசியலில் என்ன நடக்கின்றது என்பது குறித்து  தெளிவான அறிவு  இல்லை என்றே கூறமுடியும்.  இதைவிட அரசியலமைப்புச் சட்டங்கள், அதில் செய்யப்படுகின்ற  மாற்றம் குறித்தும் மக்களுக்கு தெளிவின்மையே காணப்படுகின்றது. அவை விழிப்புணர்வு செய்ய வேண்டிய சூழல் இலங்கையில் அரசியல் கலாச்சாரத்தில் ஒரளவு காணப்படுகின்றது.  அதேபோல் அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் மக்களின் பங்கேற்பு இலங்கையில் காணப்படுகின்றது பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிதளவேனும்  மக்களின் பங்களிப்பு தீர்மானம் எடுக்கும் செயன்முறையில் காணப்படுகின்றது.  இலங்கையில் மக்கள் ஒரு அடக்குமுறை கட்டுப்பாட்டுக்குள் வாழவேண்டிய சூழலும் இலங்கையில் காணப்படுகின்றது.  உதாரணமாக இலங்கையின் பயங்கரவாத செயற்பாடுகளில் பொது மக்கள் முடக்கப்பட்டனர்.  சிறுபான்மை இனங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இதனால் இலங்கையில் ஒரு அடக்குமுறையுடன் கூடிய ஆட்சி இடம்பெற்று வருவதை  காணலாம்.  தாராண்மைவாத ஜனநாயகத்தில் அடிமைப்படுத்தப்பட்ட மனப்பாங்கு வீழ்ச்சி அடைந்து புதிய மனப்பாங்கு கொண்ட இளைஞர்கள், அதைபோல மக்கள் உருவாகின்ற போக்கு இலங்கையில் காணப்படுகின்றது.  கடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட கலவரங்கள் அதேபோன்று யுத்தங்கள் என்பவற்றிற்கு இந்த மனப்பான்மையே காரணமாக இருந்தது.  குறிப்பாக இலங்கையில் ஜேவிபி கலவரம் இதன் அடிப்படையில் உருவானது. 

மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ் அவர்களின் வாழ்க்கை காணப்படும்  போக்கு இலங்கையில் காணப்படுகின்றது.  மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியினால் இலங்கையானது ஆட்சி  செய்யப்படுவதை காணலாம்.  அதேபோல் அரசியல் செயல்முறையில் தேர்தல் காலங்களில் மட்டுமே பங்கு பெறுகின்றதும், ஏனைய காலங்களில் இலங்கை மக்கள் விலகி இருப்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது.  இலங்கையில் உயர்ந்த அளவிலான விழிப்புணர்வு, எதிர்பார்ப்பு என்பன காணப்பட்டாலும், மக்கள் குறைந்த அளவிலேயே அரசியலில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக பெண்கள் இலங்கையில் மிகக் குறைந்த அளவில் பங்கு பெறுகின்றனர். இது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்திற்கு பாதிப்பை உருவாக்குகிறது.  அரசியல் செயல்முறையில் தாம் குறைந்தளவு செல்வாக்கை கொண்டிருப்பதாக சிறுபான்மை இனக் குழுக்கள்  நினைக்கும்போக்கு இலங்கையில் காணப்படுகின்றது .  குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களிடையே இந்த எண்ணப் பாங்கு இருப்பதைக் காணலாம்.  தனிப்பட்டவர்கள், அரசியல்வாதிகள் அரசியல் நிறுவனம் தொடர்பாக  அறிவு கொண்டவர்களாக இலங்கை மக்கள் காணப்படுகின்றனர். இது சிறந்த அரசியல் கலாச்சாரத்துக்கு வழிவகுக்கின்றது.  இலங்கை மக்கள் அரசியல் தீர்மானம் எடுக்கும் செயன்முறை குறித்து நன்கு அறிந்தவராக காணப்படுகின்றனர். எனினும் அவர்கள் முழுமையாக ஈடுபடுவதில்லை.  இலங்கையைப் பொறுத்தவரையில் அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிப்பது சுலபமல்ல. சில நேரத்தில் அவர்கள் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையும், வன்முறை கலாச்சாரமும் இலங்கையில் காணப்படுகின்றது.  இதனால் பெரும்பாலும்  அரசாங்கத்தை விமர்சிக்கும் போக்கு இலங்கை மக்களிடையே  குறைவாக உள்ளது.  மேலும் மக்கள் தங்களுக்கிடையே பேசிக் கொண்டாலும் பொதுவெளியில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்டு பேசுவதில் பின் நிற்கின்றனர்.  இலங்கையில் உயர்குழாம் பின்னே மக்கள் செல்லும் போக்கு காணப்படுகின்றது. கூடுதலாக  கல்வி, பரம்பரை, செல்வம் என்ற அடிப்படையில் உருவாகிய உயர்குழாம்  செல்வாக்கு அதிகமாக இலங்கையில் காணப்படுவதுடன் மக்கள் அவர்களின்பால் ஈர்க்கப்படுவதையும் நடைமுறையில் காணலாம்.  அதேபோல் பரம்பரை வழி அதிகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் சிங்கள மொழி  பேசும்,  பௌத்த  தலைவருக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.  இலங்கையில் மதம், இனம் என்ற அடிப்படையில் தமது அரசியலை ஒழுங்குபடுத்தும் போக்கு மக்களிடம் காணப்படுகின்றது.  அதேபோல் தன்னுடைய தேசம் தொடர்பான பெருமையை பெரும்பான்மை மக்கள் கொண்டிருந்தாலும், சிறுபான்மை மக்கள் பெரும்பாலும் கொண்டிருப்பதில்லை. தேசிய உணர்வு அவர்களிடம் குறைவாகவே காணப்படுகின்றது.  இலங்கை அரசியலில் நியாயமான தேர்தலை எதிர்பார்க்கும் போக்கு மக்களிடம் காணப்படுகின்றது. ஆனால்  பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக வரவேண்டும் என்ற எண்ணப்பாடு சிங்கள மக்களிடையே காணப்படுகின்றது.  அதேபோல் சிறுபான்மை இனத்தவரை அடக்கும் ஆயுதமாக அரசியல் இருப்பதாக  ஒரு தரப்பு மக்கள்  பேசும் போக்கும் இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் காணப்படுகின்றது. எனவே மொத்தமாக பார்க்கும் போது இலங்கையில் அரசியல் கலாச்சாரம் ஆனது பெரும்பான்மை இனத்தின் கீழ்   இருப்பதைக் காணலாம்.   ஆகவே இவ் அரசியல் கலாச்சாரம் ஆனது சிறந்த கலாச்சாரமாக மாறுவதற்கும்,  அனைவருக்கும்  நன்மை பயக்கும் வகையிலும் உருவாவதற்கும் அரசியல் கலாச்சாரமானது தூய்மைப்படுத்த வேண்டும். அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

 

குறுகிய ஜனநாயக அரசியல் கலாச்சாரமும், இலங்கையும்.

இன்று இலங்கையில்  அரசியல் கலாச்சாரம் என்பதே அபாயகரமான சூழ்நிலையில் காணப்படுகின்றது. காரணம் மக்கள் நாட்டின் தலைவரை தெரிவு செய்கின்றபோது தாம் பெரும்பான்மை இனத் தலைவர்களை தெரிவு செய்யும் போக்கு காணப்படுகின்றது.  இவர்கள் இனவாத பேச்சுக்களை மக்கள்மீது திணிப்பதன் மூலம் ஆட்சிக்கு வருகின்றார்கள். இங்கு தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஜனநாயகத்துக்கு எதிரான தந்திரங்களை தம்முடன் இணைத்துக் கொள்கிறார்கள்.  இதன்போது பூரண ஜனநாயக பண்புகளை தழுவிக் கொள்ள முடியாதவர்களாக அவர்கள் ஆட்சி பீடத்திற்கு வருகின்றார்கள்.  இந்த நிலையை  இலங்கையில் காணலாம்.  அதிகாரம் பொருந்திய நிறுவனங்கள், மட்டுப்படுத்தப்பட்ட அரசாங்கம், தனி மனித உரிமை என்பவற்றை பாதுகாக்க இயலாது போகின்றது.

இவ்வாறான  ஆட்சிமுறை நேர்மையற்ற அரசியல் கலாச்சாரத்தை அதிகாரம் பெற்றவர்கள் வளர்ச்சி அடையச் செய்கின்றது. இவர்கள் அரசியலில் வெற்றிக்காக எதையும் செய்யும் திறமை பெறுகின்றார்கள். இதனை கலாசாரம் அல்லது மரபு என்கிறார்கள். அல்லது வரலாற்று ரீதியான கட்டமைப்பு என்கிறார்கள். இக் கட்டமைப்புக்கள் பரம்பரை ரீதியாகவும் அல்லது குடும்ப ரீதியாகவும் பேணப்பட்டு வந்திருக்கும். இதனை குடும்ப அரசியல் கலாச்சாரத்தின் ஓர் அம்சம் என்று கூறலாம்.  அந்தவகையில் இலங்கையின் கடந்த கால ஆட்சியில் நாம் நோக்கும் போது ஒரே  பரம்பரையினர் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வருவதையும், எதிர்காலத்தில் அவர்கள் ஆட்சி வருவதற்கான வழிகளை மேற்கொண்டு வருவதை இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் நாம் இனம் கண்டு கொள்ளலாம்.

இலங்கை போன்ற  குறுகிய ஜனநாயக நாடுகளின் ஆட்சியாளர்கள் நாட்டின் தந்தையாகவும் பிரதான தலைவராகவும் காணப்படுவர். இங்கே இவருக்கு பாதுகாப்பும், அரசியலில் தொடர்ச்சியான இடம் கொடுக்கப்படுகின்றது. ஆனால் ஜனநாயக கடமை இருப்பதில்லை.  இலங்கை போன்ற ஆசிய நாடுகளில்  இதற்காக பலம்பொருந்திய குடும்பத்தினர் தமது இளையவர்களை அரசியலில்  பயிற்றுவிக்கிறார்கள். இங்கு பிள்ளைகள் பெற்றோரின் செயற்பாட்டினை ஏற்றுக் கொள்கின்றார்கள். மேலும் நிறுவன ரீதியான வசதிகள் காணப்படுமிடத்து அங்கு தனிப்பட்ட மனிதனின் அரசியல் கலாச்சாரம் என்பது அதிகாரம் பெற்றவர்களினால் முடக்கப்படுகின்றன.  இலங்கையில் இந்த நிலைமையை தற்கால அரசியலில் காணலாம். குறிப்பாக மகிந்த ராஜபக்ச  கோட்டாபய ராஜபக்ச,  சமல் ராஜபக்ஷ நாமல் ராஜபக்சே  என்ற  என்ற வளர்ச்சியைக் காணலாம்.

வேறுபட்ட  மரபுகள் மற்றும் அதிகாரங்கள் பொருந்திய  தனி மனிதன் கொண்டுள்ள விசுவாசம் என்பது கலாச்சாரத்தின் மூலமாகும். இவ்வாறான தன்மைகளை கொண்ட பல தலைவர்கள் இலங்கை, அமெரிக்கா, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் காணப்படுகின்றார்கள்.

உதாரணமாக முன்னைய சோவியத் ரஷ்யாவில் மக்கள் ஜனநாயகத்தை பயன்படுத்தவில்லை. அங்கு சிந்தனையும் நடத்தையும் பன்மைத்தன்மை கொண்ட தாகவே காணப்பட்டது.  இதனால் அங்கு குறுகிய அரசியல் கலாச்சாரமே காணப்பட்டது.  ஆனால் தற்போது ரஷ்யாவின் அரசியல் கலாச்சாரம் தாராண்மை ஜனநாயகத்தினால் சூழப்பட்டுள்ளது. பெரும்பான்மையான ஏனைய நாடுகளை காட்டிலும் இன்று சந்தோஷமாக மக்கள் வாழ்கிறார்கள். ஒரு  தாராண்மை ஜனநாயகம் அற்ற நிலையிலிருந்து ஜனநாயகத்திற்கு நிலைமாறும் போது கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரமே இதற்குக் காரணமாகும்.  இதனால் இலங்கையிலும் சிறந்த ஒரு அரசியல் கலாச்சாரத்தை கொண்டதும்,  பூரண ஜனநாயகத் தன்மை கொண்டதுமான ஒரு பங்குபற்றல் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் போதே அங்கு அரசியல் கலாச்சாரம் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து செயற்படக் கூடியதாக மாறும்.

முடிவுரை

மேற்குறித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது இலங்கையில் காணப்படும் குறுகிய அரசியல் கலாச்சாரத்தை இல்லாமல் செய்ய வேண்டும். அரசியல் கலாச்சாரத்துக்கு உருவாகும் சவால்களை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். இலங்கையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும். மக்கள் அரசியல் தொடர்பான விடயங்களில் கூடுதலாக ஆர்வம் செலுத்துவதன் மூலம் இலங்கையில் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க முடியும். இதன் மூலம் இலங்கையில் அரசியல் கலாச்சாரம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு அடைவதுடன் சிறந்த அரசியல் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான வழியும் உருவாகும். 

உசாத்துணை நூல்கள்:

கணேசலிங்கம். கே. ரீ, (2008),  "தென்னாசியாவின் அரசியல் கலாச்சாரம் , கொழும்பு, மேமமடு பதிப்பகம்.

சத்தியசீலன். ச, (1994), "இலங்கை அரசியலில் மொழியும் மதமும்", அருண் வெளியீட்டகம்.

ஆலிப். எஸ். எம், (2015)," யுத்தத்திற்கு பின்னரான இலங்கை அரசியலில் மதம்: விசேட ஆய்வு பொதுபல சேனா", KALAM” Journal Vol. IX.(1), தென்கிழக்கு பல்கலைக்கழகம்.

பிரசாத். சி, கணேசலிங்கம். கே,ரி,(2015) "சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் அரசியற் கட்சிகளது தோற்றத்திலும்
வளர்ச்சியிலும் மதத்தின் செல்வாக்கு", 5th International Symposium, SEUSL.

Thiruchelvam M, Dattathreta C.S,(1998), "Culture and Politics of identity in Sri Lanka", Colombo, International Centre om studies. 

அரசியல் கலாச்சாரம் ஒழுக்கம் தொடர்பான காணொளி : 



தொகுப்பு:


S. Vithurshan, Special in political science, 

University of Peradeniya. 


Comments

Popular posts from this blog

கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910).

மனித உரிமையின் வரலாற்று வளர்ச்சி ஒரு தொகுப்பு

மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம்:1924-1931