பொதுநலவாய அமைப்பு(Common wealth countries)
பொதுநலவாய அமைப்பு என்பது பிருத்தானியாவின் நேரடி அல்லது மறைமுக ஆட்சியின் கீழுருந்து பின்னர் சுதந்திரம் அடைந்த நாடுகளின் கூட்டமைப்பாகும்.
சூரியன் ஆஸ்தமிக்காத நாடு என புகழ் பெற்ற பிருத்தானியாவின் ஆளுகையின் கீழ் 1945 வரை பல ஆசிய ஆபிரிக்க ஐரோப்பிய நாடுகள் இருந்தன.
இரண்டாம் உலகப்போரில் பலவீனமுற்றதன் விளைவாக தனது ஏகாதிபத்திய கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்தி பல நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்தது.
இத்தகைய சுதந்திரம் பெற்ற நாடுகள் பிருத்தானியாவுடன் இணைந்து 1949 ஆம் ஆண்டு பொதுநலவாய அமைப்பினை உருவாக்கின.
எனிலும் பிரித்தானியாவுடன் வரலாற்று ரீதியான உறவுகள் இல்லாத போதும் ருவண்டா, மொசாம்பிக் ஆகிய நாடுகள் பின்னர் இதில் இணைந்து கொண்டன.
இன்று தன்னார்வ தொண்டு நிறுவனம் போன்று செயற்படும் இக் கூட்டமைவு காலனிய ஒடுக்குமுறையின் காலம் கடந்தும் வாழும் குறியீடாகும்.
இது ஆரம்பிக்கப்பட்ட போது 8 நாடுகள் அங்கத்துவத்தினை பெற்றிருந்தன. மேற்கூறியவாறு தற்போது இதில் 54 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் இதில் 19 ஆபிரிக்க நாடுகளும், 11 தென் பசுவிக் நாடுகளும், 10 கரீபியன் நாடுகளும், 8 ஆசிய நாடுகளும், 3 அமெரிக்க நாடுகளும், 3 ஐரோப்பிய நாடுகளும் அடங்குகின்றன.
இப் பொதுநலவாய அமைப்பு இரண்டாண்டுக்கு ஒரு முறை பொதுநலவாய அமைப்பில் தலைவர்களின் மாநாடு, பொதுநலவாய நாடுகளின் அமைச்சரவை மட்டத்திலான நடவடிக்கைக் குழு மற்றும் இராஜதந்திர-அதிகாரிகள் மட்டத்திலான நடவடிக்கைக் குழுக்கள் என பல நோக்கங்களுடன் கூடுகின்றன
இப் பொதுநலவாய அமைப்பில் அரசு தலைவர்களின் மகாநாடு முக்கியமானதாகும். இதுவரையில் 25 மாநாடுகள் ஐந்து கண்டங்களில் நடைபெற்றன. 2021 இல் ருவாண்டா மற்றும் 27 வது மகாநாடு சாமோ தீவிலும் இடம்பெறும்.
பொதுநலவாய அமைப்பில் அரசு தலைவர்களின் மாநாடு என்பது அனைத்து பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் பங்குபற்றும் உச்சி மாநாடாகும்.
இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கத்துவ நாடோன்றில் நடைபெற்று வருவதுடன் இவ்விரு ஆண்டுகளும் குறித்த நாட்டின் அரச தலைவரே நடப்பு தலைவராக செயலாற்றுவார்.
சுதந்திரமான கூட்டமைப்பின் அடையாளமாக பொதுநலவாயத்தின் தலைவராக மாட்சிமை தங்கிய இரண்டாவது எலிசபெத் மகாராணியாக இருப்பார்.
இந்நாடுகளின் தலைவர்கள் இரண்டு வருடத்திற்கொருமுறை கூடி அங்கத்துவ நாடுகள் எதிர்கொள்ளும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள், பொருளாதாரம் போன்றபல விடயங்கள் பற்றி பேசுவார்கள்.
உதாரணமாக தென்னாபிரிக்கா இனவெறி, பாகிஸ்தான் மற்றும் பிஜி நாடுகளின் இராணுவப் புரட்சி, சிம்பாவே நாட்டின் தேர்தலின் குளறுபடிகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டு பொதுத்தீர்வு ஒன்றும் எட்டப்பட்டது.
மேலும் இம்மாநாடுகளில் சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு, ஜனநாயகம், காலநிலை மாற்றம், சர்வதேச வர்த்தகம், நல்லாட்சி, கடன் முகாமை, கல்வி, சூழல், பால் சமத்துவம், சுகாதாரம், மனித உரிமைகள், தகவல் தொழினுட்பம், இளைஞர் விவகாரங்கள், பூகோள மீள் எழுச்சியினை கட்டியெழுப்புதல் ஆகியன குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன் முடிவில் ஒர் பிரகடனமும் வெளியிடப்படும். உதாரணமாக, சிங்கப்பூர் 1971 ஆம் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி “பொதுநலவாய கொள்கை”, 1991 ஆம் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி “ஹராரி பிரகடனம்” யாவும் - சர்வதேச சமாதானம், உலக பொருளாதாரம், சர்வதேச விதிமுறைகள் போன்றவற்றை மதிக்குமாறு வலியுறுத்துகின்றன.
பொதுநலவாயம் தனது செயற்பாடுகளை சீராக மேற்கொள்வதற்காக கட்டமைப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமையகம் லண்டனில் மார்லப்பரோ ஹவுசில் அமைந்துள்ளது. இதில் செயலாளரின் பங்கு முக்கியம் பெறுகின்றது.
செயலாளர்தான் பொதுவெளியில் பொதுநலவாயத்தையும் பொதுநலவாய செயலகத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் பொறுப்பைப் பெற்றவராவார்.
இதன் செயலாளர் பொதுநலவாயத்தின் தலைவர்களால் பிரேரிக்கப்படுவார். இவர் நான்கு வருடங்களைக் கொண்ட இரண்டு தவணைகளுக்கு பணியாற்ற முடியும்.பொதுநலவாய நாடுகள் ஒன்றியத்தின் ஐந்தாவது செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆவார். தற்போதும் ஆறாவதுமாக பாட்ரிசியா என்பவர் 2016 முதல் உள்ளார்.
பொது நலவாய நாடுகளின் முக்கிய குறிக்கோள்களாக ஜனநாயகத்திற்கு வலுவூட்டல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லாட்சியை ஏற்படுத்தல், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல், தனிமனித உரிமைகளைப் பாதுகாத்தல், மனித சமூக சமத்துவம் பேணுதல், தாராள வர்த்தகம் நடத்ததல், உலக சமாதானத்தை நிலை நிறுத்த துணை புரிதல் போன்றன காணப்படுகின்றன.
பொதுநலவாயம் என்பது ஓர் சம்பிர்தாய அமைப்பாக காணப்பட்டாலும் தற்போதைய நடைமுறையிலும் மற்றும் காலத்தின் தேவை கருதியும் பல உடன்பாடுகள், பிரகடனங்கள் மூலமான குறிப்பிடத்தக்க அளவு நடைமுறை சாத்தியம் உள்ள சில அழுத்தங்களை பிரயோகிக்கும் ஓர் அமைப்பாகயும் பொதுநலவாயம் காணப்படுகிறது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இதற பலமுள்ள அமைப்புக்களுடன் ஒப்பிடுகையில் பொதுநலவாயம் பலவீனமானதாகவே காணப்படுவதுடன் பிரித்தானிய நலனை பேணும் ஓர் அமைப்பாக இது விளங்குவதாகவும் விமர்சிக்கப்படுவதுண்டு.
எவ்வாறாயினும் பாதுகாப்பு ரீதியாகவே அல்லது இராணுவ ரீதியாகவோ பொதுநலவாய அமைப்பு முக்கியம் பெறாவிட்டாலும் பொருளாதார ரீதியாக குறிப்பிடத்தக்க அளவு அங்கத்துவ நாடுகள் நன்மைகளை பெற்றுள்ளன.
- அதன் தொடர்ச்சியாகவே ஐரோப்பாவில் ஐரோப்பிய யூனியன் இயங்குவது போல் பொதுநலவாய யூனியன் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டுமென்று பொதுநலவாயத்தின் உறுப்பு நாடுகள் சில விரும்புகின்றன.
- இதன் போது இந்த யூனியனுக்குள் விஸா இன்றி பயணம் செய்தல், சுதந்திர வர்த்தகம், பொதுவான வெளியுறவுக் கொள்கை என்பனவும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவை விரும்புகின்றன.
- அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பிரச்சினைகளின் பயனுள்ள ஒத்துழைப்பையும் பொருளாதார உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
- பொதுநலவாய அமைப்பின் குழுக்கள் மூலமும் அங்கத்துவ நாடுகளுக்கு இடையே கலுத்துப்பரிமாற்றங்கள் வாயிலாக பிரச்சனைகளை தீர்க்கும் வாய்ப்பு உள்ளது.
- பொதுநலவாய பாராளுமன்ற சங்கம், விவசாய அமைப்பு, பொருளாதார உதவி, ஒத்துழைப்பு வழங்குவதிலும் முன் நின்று செயற்படுகின்றன.
- அரசாங்கம் தொடர்பான அமைப்புகளுக்கு அப்பால் ஏனைய சில அமைப்புகளும் பொதுநலவாய அமைப்பில் செயற்பட்டு வருகின்றன.
- வர்த்தகக் குழுக்கள், கலாசார பிரசார குழுக்கள், தொழிற்சங்கங்கள் போன்றவையும் அங்கத்துவ நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பையும் நெருங்கிய தொடர்பையும் பேணி வருகின்றன.
இவ்வாறான பல நன்மைகளை அங்கத்து நாடுகள் அடையக்கூடியதாக உள்ளது. இதனாலேயே பொதுநலவாயம் தற்போதும் உயிர்ப்புடன் இயங்கி வருகின்றது.
தொகுப்பு,
S. Vithurshan,
Special in political science,
University of Peradeniya.
Comments
Post a Comment