சோல்பரி அரசியல் யாப்பின் வெஸ்மின்ஸ்டர் மாதிரி மற்றும் பிரித்தானிய மாதிரிக்கும் இடையிலான வேறுபாடுகள்.



1947ம் ஆண்டு யாப்பு பிரித்தானிய பாராளுமன்ற முறைமையில் இருந்து வேறுபட்டதாகும். அது பல ஒத்த தன்மைகளை கொண்டு காணப்படுகின்றது. எனினும் நுணுக்கமான ஆராயும் போது அது மாறுபட்டதாகவே காணப்படுகின்றது. இவற்றை பின்வரும் இயல்புகளின் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்க முடியும். அவை பின்வருமாறு,

பிரித்தானிய அரசியலமைப்பின் பிரதான இயல்பு அதன் பெரும்பகுதி எழுதப்படாது இருப்பதாகும்.  இதன்படி பிரித்தானியா அரசியல் திட்டம் என அழைக்கத்தக்க ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் திட்ட ஆவணமொன்றினை அங்கு அடையாளம் காண முடியாது. இதனையே டீ. டொக்குவில் என்ற அறிஞர் உண்மையில் இங்கிலாந்து அரசியல் திட்டம் என்ற ஒன்று இல்லை என்று
குறிப்பிடுகிறார்.

 இவ்வாறு பிரித்தானியா எழுதப்படாத அரசியலமைப்பினை கொண்டிருப்பதற்கு அரசியலமைப்பு நடைமுறைகளில் மரபுகளினதும் வழக்காறுகளினதும் அதிகரித்த செல்வாக்கே பிரதான காரணமாகும்.  ஆனால் இலங்கையில் 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சோல்பரி அரசியலமைப்பு முற்றிலும் எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆகும். இதில் எந்த ஒரு மரபுகளையும், வழக்காறுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கவில்லை.

பிரித்தானியா  படிமுறையாக வளர்ச்சி பெற்ற அரசியலமைப்பை கொண்டது. பிரித்தானியா அரசியல் திட்டம் தற்செயலானதோ குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட குழுவினால்
வரையப்பட்டதோ அல்ல. அது நீண்டகால படிமுறை வளர்ச்சியின் ஒரு உற்பத்தியாகும்.

அதேவேளை பிரித்தானிய அரசியல் திட்ட மூலாதாரங்களும் பல்வேறு பகுதிகளில் சிதறிக் காணப்படுகின்றன. அந்த வகையில் பிரித்தானிய அரசியல் திட்டத்தினை படிமுறையாக வளர்ச்சி பெற்ற ஓர் அரசியலமைப்பு என்று குறிப்பிட முடியும். ஆனால் 1947ம் ஆண்டு பிரித்தானியர்களால் முன்வைக்கப்பட்ட சோல்பரி அரசியலமைப்பு சேர். ஐவர் ஜெனிங்ஸ் அவர்களால் மந்திரி சபை சார்பில் தயாரிக்கப்பட்டு ஆளுனரிடம் ஒப்படைத்தனர். பின்னர் 1944 சோல்பரி பிரபுவின் தலைமையில் இந்த மாதிரி நகலை கொண்டு சில திருத்தங்களுடன் உருவானது. இது பிரித்தானியா போல அல்லாமல் குறித்த குழுவினால் உருவானது.

பிரித்தானிய அரசியலமைப்பு ஒரு நெகிழும் அரசியலமைப்பு ஆகும். இங்கு அரசியலமைப்பு நடைமுறைகளை பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் மாற்றியமைக்க முடியும். இதனால் சாதாரண சட்டத்திற்கும் அரசியலமைப்பு சட்டங்களுக்கும் இடையே தெளிவான வேறுபாடுகள் இல்லை. இரண்டு சட்டங்களும் ஒரே மாதிரியான கவன ஈர்ப்பினை பெற்றுள்ளன. ஆனால் 1947 சோலபரி அரசியலமைப்பு ஒரு நெகிழா அரசியலமைப்பு ஆகும். இங்கு யாப்பு திருத்தம் கடினமானதாகும். இங்கு 2/3 பெருமான்மையுடனே மாற்றியமைக்க முடியும். இது கடினமானதாகும்.

பிரித்தானிய அரசியலமைப்பின் பிரதான பகுதி மரபுகளும் வழக்காறுகளுமாகும். இவை பிரித்தானிய அரசியலமைப்பில் கணிசமான செல்வாக்கினை கொண்டுள்ளது. 03 வகையான மரபுகள் வழக்காறுகள் பிரித்தானிய அரசியலமைப்பில் செல்வாக்கு செலுத்துகின்றன. அவை முடியுடன்
தொடர்பான மரபுகளும், வழக்காறுகளும், அமைச்சரவையுடன், தொடர்பான மரபுகளும்வழக்காறுகளும், பாராளுமன்றத்துடன்  தொடர்பான மரபுகளும் வழக்காறுகளும் ஆகும். ஆனால் இலங்கையில் இவ்வாறான வழக்காறுகளும், மரபுகளும் இல்லை. அவை யாப்புசார் விடயங்களாகவே தாபிக்கப்பட்டது.

பிரித்தானிய அரசியலமைப்பின் பிரதான இயல்புகளில் பாராளுமன்றத்தின் இறைமையும் ஒன்றாகும். இங்கு பாராளுமன்றத்தின் இறைமை என்பது சட்டவாக்கத்தில் பாராளுமன்றம் பெற்றிருக்கும் உயர் தன்மையினை குறிக்கின்றது. இதன் படி பாராளுமன்றம் தான் விரும்பும் எந்தவொரு சட்டத்தினை
இயற்றுவதற்கும், திருத்துவதற்கும் நீக்குவதற்குமான அதிகாரத்தினை பெற்றுள்ளது. 


இதன்போது பாராளுமன்றத்தினை கேள்விக்கிடமாக்கும் எந்தவொரு தாபனமும் இல்லை. இது பற்றி குறிப்பிடும் சட்ட அறிஞர் ஏ.வி.டைசி பிரித்தானிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தின் இறைமை, சட்டத்தின்
ஆட்சி எனும் இரு தூண்களில் நிறுவப்பட்டுள்ளது என்றார். ஆனால் 1947ம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தை போல் பூரண அதிகாரம் கொண்டதாக காணப்படவில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன.

  • பிரித்தானிய முடி பாராளுமன்றத்தின் ஓர் அங்கமாகக் காணப்பட்டமை.
  • இலங்கையின் வேண்டுகோளின்படி இலங்கை தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டுள்ளது.
  • இலங்கையின் ஆட்சி நடவடிக்கையில் பாதிக்கப்படுவோர் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலில் முறைப்பாடு செய்ய முடிந்தது.
  • பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு மகாதேசாதிபதியின் சம்மதம் பெற்ற பிறகே அமுலுக்கு வரும்.

பிரித்தானிய அரசியலமைப்பு முடியாட்சி, உயர்குடியாட்சி மற்றும் ஜனநாயக தத்துவங்கள் ஒன்றுகலந்த ஒரு அரசியலமைப்பாகும். இதன்படி முடி என்ற நிறுவனம் முடியாட்சி தத்துவத்தினை
பிரதிபலிப்பதுடன் பிரபுக்கள் சபையினது இருப்பு உயர் குடியாட்சி தத்துவத்தினை
பிரதிபலிக்கின்றது. அதே போல பொதுமக்கள் சபை உண்மையான ஜனநாயக செயற்பாட்டு தத்துவத்தினை பிரதிபலித்து நிற்கின்றது.

இதனடிப்படையில் பிரித்தானிய
அரசியலமைப்பு சகலவிதமான அரசியல் தத்துவங்களையும் வெற்றிகரமாக ஒன்றிணைத்துள்ளது எனலாம். ஆனால் 1947 ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பு மாறுபட்டது. அது தனிப்பெரும் ஜனநாயக தன்மையை மட்டுமே கொண்டு இயங்கியது. இங்கு பொதுமக்கள் சபை, செனட் சபை ஆகியவையின் இருப்பு ஜனநாயக தன்மையை காட்டுகிறது.

பிரித்தானிய அரசியலமைப்பு சட்டவாட்சியின் மீது நிறுவப்பட்டுள்ளதால் அந்நாட்டின் நீதித்துறை சுதந்திரம் உயர் மட்டத்தில் உள்ளது. இதன்படி நீதிபதிகளின் நியமனம், பதவி நீக்கம் மற்றும் நீதிபதிகளுக்கான சலுகைகள் என்பன நீதித்துறையின் சுதந்திரத்தினை மேலும் வலுப்படுத்தும்
வகையில் அமைந்துள்ளது.

 நீதிபதிகளை அகற்றும் விடயத்தில் அவர்கள் பாரதூரமான துர்நடத்தைகளை கொண்டிருந்தால் ஒழிய அவர்களை பதவிகளிலிருந்து அகற்ற முடியாது. அவ்வாறு நீதிபதிகளை அகற்றும் போது பாராளுமன்றத்தின் இரு சபைகளினது சம்மதம் அவசியம். ஆனால் இலங்கை அவ்வாறு இல்லை. இந்த விடயம் இலங்கையில் இருந்தாலும் பூரண சுதந்திரம் இல்லை. இலங்கையில் நீதித்துறை சுதந்திரம் பிரித்தானியரால் மட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டது. இலங்கையில் நீதித்துறை சார்பில் பிரித்தானியாவில் தங்கி இருந்தார்கள். மேன்முறையீட்டு நீதிமன்றமாக பிரித்தானிய பிரிவு கவுன்சில் காணப்பட்டது.

பிரித்தானியா நிறைவேற்று துறை உண்மை நிர்வாகம், நாம நிர்வாகம் என இரண்டாக காணப்படுகின்றது. இதில் நாம நிர்வாகியாக பாராளுமன்ற முறைமையின் அடிப்படையில் பிரித்தானிய முடி காணப்பட்டார். ஆனால் இலங்கையின் நாம நிர்வாகியாக மகாதேசாதிபதி காணப்பட்டார். ஆனால் இவர் பிரித்தானிய முடியை பிரதிநிதித்துவப்படுத்தி காணப்பட்ட நாம நிர்வாகியாவார். மேலும் இங்கு நாம நிர்வாக பதவி அதிகாரம் வெவ்வேறு வழியாக கிடைக்கின்றது. பிரித்தானிய முடிக்கு மரபு ரீதியாகவும், மகாதேசாதிபதிக்கு யாப்பின் ரீதியாகவும் வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா பாராளுமன்ற முறைமையின் கீழ் அரசின் தலைவரும், அரசாங்கத்தின் தலைவரும், முப்படைகளின் தலைவருமாக பிரித்தானிய முடி காணப்படுகின்றார். ஆனால் 1947ம் ஆண்டு யாப்பின் கீழ் மகாதேசாதிபதியே அரசின் தலைவரும், அரசாங்கத்தின் தலைவரும், முப்படைகளின் தலைவருமாக காணப்படுகின்றார்.

பிரித்தானியா பாராளுமன்ற முறைமையில் உண்மை நிர்வாகி யாராலும் நியமிக்க முடியாது. அவர் பரம்பரை மற்றும் மரபு அடிப்படையில் முடியாக காணப்படுவார். அவரை பதவி அகற்றுவதற்கான வழியும் இல்லை. ஆனால் இலங்கையின் நாம நிர்வாகியான மகாதேசாதிபதி இலங்கை பிரதமரின் விருப்பம் இருக்கும் வரை மாத்திரமே பதவி வகிக்கலாம். மேலும் ஆகக்கூடியது 5 வருடங்கள் பதவிக்காலம் ஆகும். மேலும் முடி விரும்பும் வரையே பதவி வகிக்கலாம்.

பிரித்தானியா பாராளுமன்ற முறைமையில் பிரதமரை நியமிக்கும் பொறுப்பு பிரித்தானிய முடிக்குரியதாகும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்று வெற்றி பெற்ற கட்சிகளின் தலைவர் அல்லது பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்பும் ஒருவரை முடியானவர்  பிரதமராக நியமிப்பார். மேலும் இவரின் ஆலோசனையின் பெயரில் ஏனைய அமைச்சர்களை நியமிப்பார். ஆனால் 1947ம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் இவ் அதிகாரம் மகாதேசாதிபதிக்கு வழங்கப்பட்டது. இவரே பிரதமர் மற்றும் பிரதமர் சிபாரிசின் பேரில் ஏனைய அமைச்சர்களை நியமிப்பார்.

பிரித்தானிய பாராளுமன்ற முறைமையில் சகல அதிகாரங்களும் பிரதமரின் ஆலோசனையின்படியே பிரித்தானிய முடியானவர் பிரயோகிப்பார். எந்த விடயங்கள் என்றாலும் அவர் பிரதமரிடம் கலந்துரையாடியே செய்வார். பிரித்தானிய பாராளுமன்ற முறைமையில் முடியானவர் பாரிய அதிகாரங்களை கொண்டிருந்தாலும், பிரதமரே முடியின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் கருவியாக உள்ளார். 

ஆனால் 1947ம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் நாம நிர்வாகியாக மகாதேசாதிபதி காணப்படுகின்றார். இவர் பிரதமரின் ஆலோசனையின் பெயரிலே தமது கடமைகளை செய்ய வேண்டும். பிரதமரிடமே தங்கியும் இருந்தார். மேலும் பிரித்தானிய முடியினை விட குறைவான அதிகாரத்தையே இலங்கையின் மகாதேசாதிபதி கொண்டு இருந்தார்.

பிரித்தானிய அரசாங்க முறையில் உயர் நீதிமன்றம் நீதிமுன் புனராய்வு அதிகாரத்தையே கொண்டுள்ளது. இங்கு பாராளுமன்றம் இறைமை படைத்ததாகக் இருப்பதால், அங்கு சட்டமன்றம் கொண்டு வரும் மசோதாவை எதிர்த்து செயற்பட முடியாது இருப்பதுடன், அவர்களுக்கு ஆலோசனை கூறும் நிறுவனமாகவே நீதிமன்றம் காணப்படுகின்றது. குறிப்பாக இது மசோதா தொடர்பில் ஆலோசனை கூறும் அமைப்பாகவே உள்ளது. ஆனால் இலங்கையில் சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் நீதிப்புனராய்வு அதிகாரம் காணப்படவில்லை. இது பிரித்தானிய யாப்பின் கீழ் மாறுபட்டது. 

ஆயினும் 1962ஆம் ஆண்டின் சதிப்புரட்சி வழக்கின் மூலமே நீதிமன்றத்திற்கு நீதிப்புனராய்வு அதிகாரம் காணப்படுகிறது என உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் இலங்கையில் 1947ம் ஆண்டு யாப்பின் கீழ் நீதிப்புனராய்வு அதிகாரம் காணப்படுகிறது என்பதை அடையாளம் காண முடிகிறது. ஆனால் பிரித்தானியாவில் முன் நீதிப்புனராய்வு அதிகாரமே உள்ளது.

பிரித்தானிய முதலாம் மன்றமான பொதுமக்கள் சபையின் சகல உறுப்பினர்களும் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டனர்.  இங்கு மொத்தமாக 650 உறுப்பினர்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆகும்.  ஆனால் 1947 சோல்பரி யாப்பின் கீழ் மக்கள் சபையின் உறுப்பினர்கள் நியமனம் மற்றும் மக்கள் தெரிவு எனும் இருவகையான உறுப்பினர்களை கொண்டது. இங்கு 95 உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமும், 6 பேர் நியமிக்கப்பட்டனர். பின்னர் இந்த தொகை 157 ஆக (151+6) அதிகரிக்கப்பட்டது.

பிரித்தானியா பாராளுமன்ற முறைமையில் மசோதாக்களுக்கு இறுதி அங்கீகாரம் வழங்குவது பிரித்தானிய முடியாகும். இவர் குறித்த மசோதா தொடர்பில் மறுப்பு அதிகாரத்தை பயன்படுத்த முடியும். ஆனால் அவர் பயன்படுத்துவது குறைவாக உள்ளது. ஆனால் 1947ம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் இறுதி அங்கீகாரம் வழங்குவது மகாதேசாதிபதி ஆவார். இவர் மறுப்பு அதிகாரத்தை பயன்படுத்தி வந்தார். குறிப்பாக பிரித்தானியருக்கு எதிரான சட்டங்களை உருவாக்குவதில் இருந்து பாதுகாக்கவே மகாதேசாதிபதி இந்த அதிகாரத்தை கொண்டு காணப்பட்டார்.

பொதுமக்கள் சபையினை கூட்டல், கலைத்தல், ஒத்திவைத்தல் அதிகாரம் பிரித்தானிய பாராளுமன்ற முறைமையில் முடிக்கு அதிகாரம் காணப்படுகிறது. ஆனால் 1947ம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் மகாதேசாதிபதிக்கு இந்த அதிகாரம் காணப்படுகிறது.

பிரித்தானியா முறையில் பிரபுக்கள் சபையானது சாதாரண மசோதாவை ஒரு  வருடத்துக்கு தாமதப்படுத்தலாம். ஆனால் சோல்பரி யாப்பின் கீழ் செனட்பை சாதாரண மசோதாவை 6 மாதங்களுக்கே தாமதப்படுத்தும். மேலும் சாதாரண மசோதாவை இரு தடவைகள் ஏற்க மறுத்தால் மகாதேசாதிபதியின் கையொப்பத்துடன் சட்டமாகிவிடும் நிலை காணப்பட்டது.

எனவே மேற்குறிப்பிட்ட விடயங்களை தொகுத்து நோக்குமிடத்து பிரித்தானிய வெஸ்மின்ஸ்டர் மாதிரியை இலங்கையில் 1947ம் ஆண்டு சோல்பரி யாப்பின் கீழ் நடைமுறைப்படுத்தினாலும், அது பாராளுமன்ற முறையில் இருந்து மாறுபட்டு இருப்பதை அடையாளம் காண முடிகிறது. 


தொகுப்பு :

S. Vithurshan, 

Special in political science, 

University of Peradeniya. 


Comments

Popular posts from this blog

கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910).

மனித உரிமையின் வரலாற்று வளர்ச்சி ஒரு தொகுப்பு

மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம்:1924-1931