பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிகாரங்கள், பணிகள் மற்றும் நிலைகள்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிகாரங்கள், பணிகள் மற்றும் நிலைகள்.
பிரான்ஸ் அரசியல் அமைப்பானது ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற முறையிலான அரசாங்க அமைப்பைக் கொண்டுள்ளது. ஆயினும் பாராளுமன்ற முறையைக் காட்டிலும் ஜனாதிபதி முறைக்கு அதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு ஜனாதிபதியை, வலுப்படுத்தி பாராளுமன்றத்தின் பங்கை குறைத்து விடுகிறது.
இரண்டு முறையிலான ஆட்சித் துறையைக் கொண்டிருப்பினும் பிரதம மந்திரியை காட்டிலும் ஜனாதிபதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள ஐந்தாவது குடியரசு அரசியல் அமைப்பின் படி பிரான்சின் அரசுத்தலைவரான ஜனாதிபதி வயது வந்தோர் வாக்குரிமை முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஜனாதிபதிக்கான தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகள் பெரும் வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தப்படும்.
எந்த ஒரு வேட்பாளரும் 50%வாக்குகளை பெறத் தவறினால் அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்களைக் கொண்டு மறுபடியும் தேர்தல் நடாத்தப்படும்.1979ம் ஆண்டு எஸ்டாங் என்பவர் இரண்டாம் முறை வாக்கெடுப்பில் தான் ஜனாதிபதியாக
தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007ம் ஆண்டு நிகலஸ் சார்கோஸி என்பவரும் இரண்டாம் முறை வாக்கெடுப்பில் தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனாதிபதியின் தகுதிகளைக் குறித்து அரசியல் அமைப்பு எதுவும் குறிப்பிடவில்லை. குறிப்பிட்ட பதவிக்காலம் முடிவதற்கு முன் ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க வேண்டுமாயின் ஜனாதிபதிக்கெதிரான குற்றச்சாட்டு பிரேரனையை பாராளுமன்றத்தின் இரு சபைகளும் அவற்றின் மொத்த உறுப்பினர் தொகையில் ½ பங்கினருக்கு குறையாதோரின் ஆதரவு கொண்டு நிறைவேற்ற வேண்டும்.
அவ்வாறாயின் ஜனாதிபதிக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். உயர் நீதிமன்றம், ஜனாதிபதிக்கெதிரான குற்றச் சாட்டுக்களை சரி கண்டால் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டதைக் குறிக்கும். அரச துரோகத்திற்கு மட்டுமே ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்கலாம்.
சனாதிபதியின் அதிகாரங்கள்:
1958 5ம் குடியரசு யாப்பின் படி ஜனாதிபதி அரசினதும் அரசாங்கத்தினதும் நிறைவேற்றுத்துறையினதும் தலைவராவார். ஆயுதம் தாங்கிய படைகளின் பிரதான தளபதியும், இவராவார். இந்த வகையில் பிரான்சிய அரசாங்க முறையில் மிகவும் முக்கியமானதும் பலம் வாய்ந்ததுமான பதவி ஜனாதிபதிப் பதவி ஆகும். மேலே குறிப்பிட்ட ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதிக்கு உரித்தாகும் அதிகாரங்களும் பணிகளும் கீழே தரப்படுகின்றன.
சட்டத்துறை அதிகாரம்:
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஜனாதிபதிக்கு சமர்பிக்கப்பட்டு 15 நாட்கள் முடிவடைய முன்னர் ஜனாதிபதி பிரகடனம் செய்கிறார். அவ்வாறு செய்யாமல் பாராளுமன்றம் இயற்றிய ஒரு மசோதாவை பாராளுமன்றத்துக்கே திருப்பி அனுப்பி மறு பரிசீலனை செய்ய்ம்படி பாராளுமன்றத்தைக் கோரலாம். ஜனாதிபதி பிரதம மந்திரியையும், பாராளுமன்றத்தின் இரு சபைகளின் தலைவர்களையும் அரசியல் அமைப்பு அவையின் தலைவரையும் கலந்தாலோசித்து தேசிய சபையை கலைக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்.
பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளுக்கும் செய்திகளை அனுப்பும் அதிகாரங்களையும், ஜனாதிபதி பெற்றுள்ளார். பாராளுமன்ற சட்டவாக்கத்தின் யாப்புறு தன்மையை பரிசீலனை செய்யும்படி அரசியல் அமைப்பு அவையின் ஆலோசனையை ஜனாதிபதி கோரலாம். ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள மறுப்பானை அதிகாரம் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை. பிரான்ஸ் ஜனாதிபதி தற்காலிக மறுப்பானை அதிகாரம் பெற்றுள்ளார். இதன்படி ஜனாதிபதி ஒரு மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி பாராளுமன்றத்துக்கு திருப்பி அனுப்பலாம்.
நிர்வாகத்துறை அதிகாரம்:
ஜனாதிபதி அரசின் தலைவராகவும் அரசாங்கத்தின்தலைவராகவும் விளங்குகின்றார். பாராளுமன்றத்தின் தேசிய சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெறக்கூடியவரை ஜனாதிபதி பிரதம மந்திரியாக நியமனம் செய்கிறார்.
பிரதம மந்திரியின் அறிவுரையின் பேரில் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களில் இருந்து அமைச்சரவைக்கான ஏனைய மந்திரிமார்களையும், ஜனாதிபதி நியமனம் செய்வார். அமைச்சரவை கூட்டங்களுக்கு ஜனாதிபதி தலைமை தாங்குவார். அமைச்சரவையால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஜனாதிபதி கையொப்பம் அளிக்கிறார். முக்கிய அரச அலுவலர்களையும் ஜனாதிபதி நியமிக்கிறார்.
நீதித்துறை அதிகாரங்கள்:
தலைமை நீதிமன்றத்துக்கான நீதிவான்மார்களை ஜனாதிபதி நியமிக்கிறார்.இவ்விடயத்தில் நீதித்துறை உயர் அவையின் ஆலோசனைப்படி ஜனாதிபதி செயற்படுவார். நீதித்துறை உயர் அவை என்பது நீதிமன்றங்களுக்கான நீதவான்மார்களின் பெயர்களை ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்யும் ஒரு அமைப்பாகும். நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக காணப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டவர்களுக்கு கருணைகாட்டி மன்னிப்பு வழங்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு உண்டு. இவ்விடயத்திலும் நீதித்துறை உயர் அவையின் ஆலோசனைப்படியே ஜனாதிபதி செயல்படுவார்.
அரசுத் தலைவர் என்ற முறையிலான அதிகாரங்கள்:
வெளிநாடுகளுக்கான பிரான்சிய தூதுவர்களை ஜனாதிபதி நியமிக்கிறார். பிரான்சுக்கான வெளிநாட்டுத் தூதுவர்களை வரவேற்பது ஜனாதிபதி தான் ஆயுதப் படைகளுக்கான தளபதிகளையும் அவரே நியமிக்கிறார். போரைப் பிரகடனம் செய்வதும், சமாதானத்தை பிரகடனம் செய்வதும், ஜனாதிபதி அலுவல்கள் ஆகும். வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகள் செய்து கொள்ளும் அதிகாரமும் அவருக்கு உண்டு. அரசியல் அமைப்பு அவைக்கான 3 உறுப்பினர்களை ஜனாதிபதி நியமனம் செய்வார். அரசியல் அமைப்பு அவை என்பது பாராளுமன்ற சட்டவாக்கத்தின் யாப்புறு தன்மையை தீர்மானிக்கும் ஓர் அமைப்பாகும்.
அவசரகால அதிகாரங்கள்:
அரசியல் அமைப்பின் 16ம் விதி ஜனாதிபதியின அவசர கால அதிகாரங்களை பற்றி கூறுகிறது. இவ் அதிகாரங்கள் ஜனாதிபதி சட்ட பூர்வமான சர்வாதிகாரியாக செயற்பட வழிவகை செய்கிறது. அரசியல் அமைப்பின்படி அவசரகால அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு முன் ஜனாதிபதி
பிரதம மந்திரியையும், பாராளுமன்றத்தின் இரு சபைகளின் தலைவர்களையும் அரசியல் அமைப்பு அவையின் தலைவரையும், கலந்தாலோசிக்க வேண்டும் என்றிருப்பினும் அவசரகால அதிகாரங்களை பொறுத்தவரை ஜனாதிபதியின் முடிவே இறுதியானது.
ஜனாதிபதி அவசர கால அதிகாரங்களை பெற்று விட்டால் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர் தேசிய சபையைக் கூட கலைக்கலாம். வெளிநாட்டு படை எடுப்பின் மூலமோ அல்லது உள்நாட்டு கலவரங்கள் மூலமோ அரசின் பாதுகாப்பு சீர்குலையுமானால் ஜனாதிபதி அச் சூழ்நிலையை சமாளித்து நாட்டைக் காக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்.
முடிவுரை
மேற் கூறிய கருத்துக்களில் இருந்து பிரான்ஸ் ஜனாதிபதி பெயர் அளவிலான ஆட்சித் துறைத் தலைவர் அல்லர் என்பது தெளிவாகின்றது. ஜனாதிபதி தலைமை ஆட்சியாளராக இருந்து பாராளுமன்றத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளார். ஜனாதிபதியின் உண்மையான அதிகாரங்களின் விளைவால் ஆட்சித்துறை பலப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றமும் அரசாங்கமும் ஜனாதிபதியின் பிரதிநிதிகள் ஆவர்.
பிரான்சினுடைய அரசியல் அமைப்பின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் ஜனாதிபதி ஆட்சி முறையையும் அமைச்சரவை ஆட்சி முறையையும் கலந்த ஓர் அரசாங்க முறையை அது உருவாக்கி இருப்பது தான். அவ்வாறு இருந்தாலும் ஜனாதிபதி ஆட்சி முறைப் பண்பே மிகுந்து காணப்படுகிறது.
தொகுப்பு:
S. Vithurshan,
Special in political science(R)
University of Peradeniya.




Comments
Post a Comment