அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ்
"நான் முதல் பெண்மணியாக இருக்கலாம். ஆனால், கடைசியாக இருக்க மாட்டேன்" - கமலா ஹாரிஸ்
அறிமுகம்
இன்று அனைவராலும், அனைத்து நாடுகளிலும், குறிப்பாக அமேரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் பரவலாக பேசப்படும் ஒருவராக கமலா ஹாரிஸ் காணப்படுகிறார். அமெரிக்காவின் அதிபர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் ஜனநாயகக் கட்சியின் உட்கட்சிப் போட்டியில் களமிறங்கிய பிறகுதான், உலக அளவில் அனைவராலும் பேசப்பட்டார். இதன் பின்னரே இவர் மீது அதிக ஊடக வெளிச்சம் பாயத் தொடங்கியது. அந்தப் போட்டியில் வெல்ல முடியவில்லை என்றாலும், இப்போது ஜோ பைடனின் அதிபர் தேர்தல் வெற்றி மூலம் அமெரிக்காவின் துணை அதிபர் ஆகியுள்ளார் கமலா ஹாரிஸ்.
தான் வெற்றி பெற்றால் கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆக்கப்படுவார் என்று பைடன் அறிவித்தபோது, கமலா மீது இவ்வளவு கவனம் விழக் காரணம் அமெரிக்க துணை அதிபர் பதவியில் இதுவரை ஒரு பெண்ணோ, ஆப்ரிக்க-அமெரிக்க வம்சாவளியினரோ, ஆசிய-அமெரிக்க வம்சாவளியினரோ இருந்ததில்லை என்பதால் ஆகும்.
முன்னதாக ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான உள்கட்சி போட்டியில் கடுமையாக ஈடுபட்டு தோற்றவர் கமலா. இதையொட்டி கமலா ஹாரிஸிக்கும் குடியரசு கட்சி துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸுக்கும் அக்டோபர் 7ஆம் தேதி விவாதம் நடைபெற்றது.
இதற்கு முன்பு இரண்டு முறை மட்டுமே பெண்கள், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டுள்ளனர். 2008ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் சார்பாக சாரா பாலினும், 1984ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜெரால்டின் பெரொரோவும் போட்டியிட்டுள்ளனர். ஆனால் இவர்கள் வெற்றி பெறவில்லை. அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகளான குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி இரண்டுமே அதிபர் வேட்பாளராக கருப்பின பெண்ணை நிறுத்தியதில்லை. இதுவரை யாரும் அதிபராக இருந்ததும் இல்லை. ஆனால் இன்று அவ்வாறு நின்று தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார் என்பது அமெரிக்காவில் மீண்டும் ஜனநாயக புதுப்பொலிவுடன் புத்துயிர் பெறப்பட உள்ளது என்பதையே இந்த வெற்றி உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது.
கமலா ஹாரிஸ் (Kamala Devi Harris), 1964 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதி பிறந்தார். அமெரிக்க அரசியல்வாதியும், வழக்கறிஞரும், அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினரான இவர், 2021 ஜனவரி 20 இல் துணைக் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கவுள்ளார். இவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனும் 2020 குடியரசுத் தலைவர் தேர்தலில் நடப்புத் தலைவர் டொனால்ட் டிரம்ப்பையும், துணைத் தலைவர் மைக் பென்சையும் தோற்கடித்தனர். கமலா ஹாரிஸ் 2017 முதல் கலிபோர்னியாவுக்கான மூதவை உறுப்பினராக இருந்தவர். இந்தியத் தமிழ் மற்றும் ஆப்பிரிக்க-ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா பல்லின அமெரிக்கராவார். அமெரிக்க வரலாற்றில், கமலா ஹாரிஸ் முதலாவது ஆசிய-அமெரிக்க, முதலாவது ஆபிரிக்க அமெரிக்க, மற்றும் முதலாவது பெண் துணைக் குடியரசுத் தலைவராக விளங்குகிறார். அத்துடன், இவர் அமெரிக்க வரலாற்றில், அதியுயர் பதவி ஒன்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண்ணும் ஆவார்.
கலிபோர்னியா, ஆக்லாந்தில் பிறந்த கமலா ஹாரிஸ், ஹவார்ட் பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பயின்று சட்டத் துறையில் பட்டம் பெற்றார். இவர் தனது பணியை அலமேடா கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ஆரம்பித்து, பின்னர் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட, மற்றும் சான் பிரான்சிசுக்கோ நகர வழக்கறிஞர் அலுவலகத்திலும் பணியாற்றினார். 2003 இல், சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 இலும், பின்னர் 2014 இலும் கலிபோர்னியா மாநில தலைமை வழக்கறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016 அமெரிக்க மேலவைத் தேர்தலில் "லொரெட்டா சான்செசைத்" தோற்கடித்து கலிபோர்னியாவுக்கான மேலவை உறுப்பினரானார். இதன் மூலம், அமெரிக்க மேலவைக்குத் தெரிவான முதலாவது ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண், மற்றும் முதலாவது தெற்காசிய-அமெரிக்கர் என்ற சிறப்புகளையும் பெற்றார். மேலவை உறுப்பினராக, சுகாதார சீர்திருத்தம், கட்டுப்பாட்டுப் பொருட்கள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குதல், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமைக்கான வழிவகைகள், தாக்குதல் ஆயுதங்களுக்கு தடை, மற்றும் வளர்விகித வரி சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு ஆதரவளித்தார். இவர் பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரட் கவானா என்பவரை அரசுத்தலைவர் டொனால்ட் டிரம்ப் உச்சநீதிமன்றத் இணை நீதிபதி பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது, அவருக்கு எதிராகக் குரல் கொடுத்தது மூலம் கமலா ஹாரிஸ் நாட்டளவில் அறியப்பட்டவர்.
2020 குடியரசுத் தலைவர் தேர்தலில் தேர்தலில் போட்டியிடுவதற்கான மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராக கமலா போட்டியிட்டார், 2019 டிசம்பர் 3 இல் தொடர் நிதிப் பற்றாக்குறை காரணமாக தனது பிரச்சாரத்தை முடிப்பதற்கு முன்னர் கருத்துக்கணிப்புகளில் சில காலம் இவர் முன்னணியில் இருந்தார். 2020 ஆகஸ்ட் 11 அன்று 2020 தேர்தலில் ஜோ பைடனின் துணைக் குடியரசுத் தலைவராக கமலா அறிவிக்கப்பட்டார். ஐரோப்பியரல்லாத வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும், முன்னதாக 1929 சார்லசு கேர்ட்டிசு துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார்.
கமலா ஹாரிஸின் இளமைக்காலம்.
கமலா ஹாரிஸுக்கு 55 வயதாகிறது. கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். கமலா ஹாரிஸின் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களின் பூர்விகம் தமிழ்நாட்டின் திருவாரூரில் உள்ள துளசேந்திரபுரம்.
கமலா ஹாரிஸ் 1964 ஒக்டோபர் 20 இல், கலிபோர்னியா, ஓக்லாந்தில் பிறந்தார். தாயார் சியாமளா கோபாலன், ஓர் உயிரியலாளர், மார்பகப் புற்றுநோய் மரபணு ஆய்வில் ஈடுபட்டவர். சியாமளா 1958 இல் தனது 19-வது அகவையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து மற்றும் உட்சுரப்பியலில் பட்டப் படிப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா வந்து, தனது முனைவர் பட்டத்தை 1964 இல் பெற்றார். கமலாவின் தந்தை டொனால்டு ஜே. ஹாரிஸ் யமேக்காவைச் சேர்ந்தவர். இவர் யமேக்காவில் இருந்து 1961 இல் அமெரிக்கா வந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1964இல் பொருளியலில் முனைவர் பட்டம் பெற்று, இஸ்டான்போர்ட் (Stanford University) பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
கமலா ஹாரிஸின் தாயின் வளர்ப்பும், விடாமுயற்சியும்.
கமலா ஹாரிஸ் தன் அன்னை மீது அளவு கடந்த பாசம் கொண்டவர் என்பதை அவரது கருத்தின் மூலம் அறியலாம். இவரை இந்த அழகு உயர்த்தி அமெரிக்கா அழகு பார்க்க காரணம் அவரது தாயின் நம்பிக்கையும், அவரது உற்சாகமும் என்பதை உலகிற்கு வெளிக்காட்டினார். அமெரிக்க துணை அதிபராகத் தேர்வாகி இருக்கும் கமலா ஹாரிஸ், கடந்த 10 ஆம் திகதி மே மாதம், 2020 அன்று, தன் இன்ஸ்டாகிராம்(Instagram) பக்கத்தில், தன் தாய் ஷியாமளாவின் படம் ஒன்றைப் பதிவு செய்து இருந்தார்.
அந்தப் பதிவில் "எல்லா விதமான தடைகளையும் உடைத்து எறிந்த ஒரு தாயின் மகள் நான். ஷியாமளா ஹாரிஸ் ஐந்து அடி உயரத்துக்கு மேல் இருக்கமாட்டார். ஆனால் எப்போதாவது அவரை சந்தித்து இருந்தால், அவர் ஏழு அடி உயரமானவர் என நீங்கள் நினைத்து இருப்பீர்கள். அவருக்கு அப்படி ஓர் உற்சாகமும், விடாமுயற்சியும் இருந்தது. அவர் என்னை வளர்த்ததற்கு நான் தினமும் நன்றி சொல்கிறேன்" என அன்னையர் தின வாழ்த்து சொல்லி இருந்தார் கமலா ஹாரிஸ். அந்த அளவுக்கு அவர் தாய் மீது நம்பிக்கை மற்றும் பாசம் உடையவர் என்பதை இப் பதிவு வெளிக்காட்டியுள்ளது.
1960-ம் ஆண்டு உட்சுரப்பியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெறுவதற்கான கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு வந்தார் ஷியாமளா. அங்குதான் டொனால்டு ஹாரிஸை சந்தித்தார். அதன் பிறகு திருமணமும் செய்து கொண்டார். இதன் பின் கமலாதேவி, மாயா எனும் பிள்ளைகளுக்கு தாயாராகின்றார்.
1971-ம் ஆண்டில், கமலா ஹாரிஸிக்கு ஏழு வயதாக இருக்கும் போது, டொனால்டு ஹாரிஸ் மற்றும் ஷியாமளா, விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். விவாகரத்துக்குப் பிறகும், இவர்களது வாழ்கையில் டொனால்ட் ஹாரிஸ் தொடர்ந்து இருந்தார். இருப்பினும், தங்களின் வாழ்கையை வடிவமைத்ததில், பெரும் பகுதி, தன் தாய் ஷியாமளாவைத்தான் சேரும் என ஒரு கட்டத்தில் கூறி இருக்கிறார் கமலா ஹாரிஸ்.
கமலாவின் தாயார் ஷியாமளா இந்தியாவிற்கு செல்லும்போதெல்லாம் அவருடன் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார் கமலா ஹாரிஸ். மேலும் தனது இந்திய பாரம்பரியத்துடன் இணைந்தே வளர்ந்தார் கமலா ஹாரிஸ். இருப்பினும் தனது தாய் ஒக்லாந்தின் கருப்பின கலாசாரத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டார் என்றும், தனது இரு மகள்களையும் அவ்வாறே வளர்த்தார் என்றும் ஒரு கட்டத்தில் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தனது சுயசரிதையில் குறிப்பிடுகையில்,
"எனது தாய் இரு கருப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று புரிந்துகொண்டே எங்களை வளர்த்தார்." என தனது சுயசரிதையான `தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்` புத்தகத்தில் கமலா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "நாங்கள்
வாழச் சென்ற இடம் என்னையும் எனது சகோதரியையும் கருப்பின பெண்களாகதான் பார்க்கும்.
எனவே நாங்கள் தன்னம்பிக்கைக் கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும்
என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்," என கமலா குறிப்பிட்டிருந்தார்.
கமலா இந்தியாவில் தங்கியிருக்கும் போது அவருடைய தாத்தா தினமும் காலையில் நடைபயிற்சிக்கு செல்லும் போது கமலாவையும் அழைத்து செல்வாராம். அதுவே அவரை அமெரிக்காவில் மக்களின் உரிமைக்காகவே போராடுவதற்கான உந்துசக்தியை அளித்துள்ளது என்று ஒரு கட்டத்தில் கமலா ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்
கமலா ஹாரிஸ் வாழ்க்கையில் துணைநிற்கும் கணவர்.
கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எமோப், தெற்கு கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில், கோட் சட்டப் புலத்தில் சட்டம் பயின்றவர். 1990 காலப்பகுதியின் இறுதி காலம் வரை, பல்வேறு சட்ட நிறுவனங்களில் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில் சொந்தமாக சட்ட நிறுவனத்தை தொடங்கினார். 2006ஆம் ஆண்டு, இந்த நிறுவனத்தை வெனபிள் என்கிற நிறுவனம் வாங்கி தம்முடன் இணைத்துக்கொண்டது.
ஹாலிவுட் வீடியோ என்கிற நிறுவனத்துக்கும், பாக்ஸ் நிறுவனத்துக்கும் இடையிலான கணக்கு வழக்கு பிரச்சனையில், ஹாலிவுட் வீடியோ சார்பாக வாதாடினார். இதனால் பொழுதுபோக்கு தொடர்பான சட்ட விவகாரங்களில் இவருக்கென ஒரு பெயர் அமெரிக்காவில் கிடைத்தது. இந்த வழக்குக்குப் பின், பல தயாரிப்பு நிறுவனங்கள் சார்பாக க்ளாஸ் ஆக்ஷன் எனப்படும் வழக்குகளில் ஆஜரானார் எம்ஹாப்.
2017ஆம் ஆண்டுகளில் வெனபிள் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். டி.எல்.ஏ பைபர் என்கிற நிறுவனத்தில் கூட்டாளியாக சேர்ந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். பொழுதுபோக்கு சார்ந்த வழக்குகள் மற்றும் அறிவுசார் சொத்து விவகாரங்களில் நிபுணராக இவர் அமெரிக்காவில் பிரசித்தி பெற்றுக் காணப்படுகிறார்.
அதேபோல் மனைவி மீது பாசமும், அன்பும் கொண்ட கணவராக இருக்கிறார் என்பதை கடந்த காலத்தில் அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மூலமாக அறிய முடிகிறது. "என் மனைவியின் அரசியல் வேலைகள், என்னை மிகவும் கவர்கிறது. என் மனைவியின் தேர்தல் வேலைகளின் போது, என்னை நிறுத்தி, என்னோடு செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என கடந்த ஆண்டு, ஹாலிவுட் ரிப்போர்டருக்குச் சொல்லி இருந்தார் டக்ளஸ் எம்ஹாப்".
கருத்துக்கள்
2019ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்டுக்கு பேசிய அவர், "நிறத்தாலோ அல்லது பின்புலத்தாலோ ஒருவர் அரசியல்வாதியாக கூடாது. "நான் யாரோ அதில் சிறப்பாக உள்ளேன். உங்களுக்கு தெளிவு தேவைப்படலாம் ஆனால் நான் சிறப்பாக உள்ளேன்," என தெரிவித்திருந்தார்.
துணை அதிபர் போட்டியில் கமலா வெற்றி பெற்றால் 2024ஆண்டுக்குள் அதிபர் போட்டியில் மீண்டும் பங்குபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்றளவில் அவர் ஜனநாயகக் கட்சியில் எதிர்காலத்திற்கான ஒரு வலுவான சக்தியாக உள்ளார் என அமெரிக்கா செய்தி ஊடகங்கள் மற்றும் அரசியல் அறிஞர்களால் பரவலாக பேசப்படுகிறார்.
நான் அவரையும், பல தலைமுறைகளாக இங்கு இருக்கும் பெண்கள் - கறுப்பினப் பெண்கள், ஆசியப் பெண்கள், லத்தின், பூர்வகுடி அமெரிக்க பெண்கள் என வரலாற்றில் இந்தத் தருணத்தை ஏற்படுத்த உழைத்த அனைத்து பெண்களையும் நினைத்துக்கொள்கிறேன்” என்று நன்றி தெரிவித்தார் கமலா ஹாரிஸ்
வெற்றியை ஆசிய
மக்கள் கொண்டாட காரணம்
இன்று ஆசிய நாட்டில் குறிப்பாக இந்தியாவில் இந்த வெற்றியை மக்கள் கொண்டாடுகின்றனர். வாழ்த்துக்களை கூட அதிகமாக கூறியுள்ளார்கள். ஆயினும் கமலா ஹாரிஸின் வெற்றியை, அவர் ஓர் இந்தியர் என்பதற்காகவோ, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காகவோ கொண்டாடுவதைவிட, ஒரு பெண்ணாக அவரின் வெற்றியைக் கொண்டாடுவதுதான் மிகவும் அவசியம்! இன்று இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அடக்குமுறைகளும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் நிலையில், கமலா ஹாரிஸ் என்ற பெண்ணின் வெற்றியைக் கொண்டாடுவதுடன் கூடவே, பெண்களுக்கு எதிரான சவால்களை உடைத்தெறிந்து முன்னேறிச் செல்லும் ஓர் ஊக்கசக்தியாக அவரைப் பார்ப்பதுதான் சரியான பார்வை என கூறுவது சரி. இந்த எண்ணத்தை விதைக்கும் வகையில்தான் அவரின் உரையும் இருந்தது. அவர் பின்வருமாறு கூறுகிறார்,
"இந்தப் பதவிக்கு நான் முதல் பெண்மணியாக இருக்கலாம். ஆனால், கடைசியாக இருக்க மாட்டேன். ஏனென்றால், இந்த நிகழ்வைப் பார்க்கும் ஒவ்வொரு சிறுமியும், இந்த நாடு இதுபோன்ற வெற்றிகளுக்கான பல சாத்தியங்களைக் கொண்டது என்பதை உணர்வார்கள். நம் நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கும், அவரின் பாலினத்திற்கு அப்பாற்பட்டு, ஒரு தெளிவான செய்தியைக் கூற விரும்புகிறேன்: லட்சியத்துடன் கனவு காணுங்கள், உறுதியுடன் முன்னேறிச் செல்லுங்கள், மற்றவர்கள் உங்களைக் காண இயலாத இடத்தில் வைத்து உங்களைப் பாருங்கள். ஏனென்றால், அத்தகைய ஓர் இடத்தை மற்றவர்கள், முன்பு ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அத்தகைய தருணம் வாய்க்கும்போதெல்லாம் நிச்சயம் கைதட்டுவார்கள்" என கமலா ஹாரிஸ் கூறுகின்றார்.
இந்த கூற்றுக்கு அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு மட்டும் அல்ல. உலகில் உள்ள சகல மக்களுக்கும் பொருந்த கூடிய பேச்சாகவ பார்க்க வேண்டும். இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தும் பாராட்டியும் வருகின்றனர். அந்த வகையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா கருத்துக்களை தெரிவித்து உள்ளார்.
உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்கு பெருமை தருகிறது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் "மன்னர்கள் பைத்தியக்காரர்கள் ஆக மாறும் போது ஜனநாயகமும், அதன் செயற்பாடுகளுமே மக்களுக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பாகும் ஜனநாயக நிறுவனங்கள் அவற்றின் சுதந்திரத்திற்கும், சட்டப்படியான அவற்றின் செயற்பாட்டிற்கும் வருகின்ற சகல அச்சுறுத்தல்களையும் கடுமையாக எதிர்த்து நின்று வெற்றி கொள்ள வேண்டும். அதை அமெரிக்க மக்களிளே உங்களால் நாம் பெருமை அடைகிறோம் என்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருக்கின்றார். மேலும் பல நாட்டு ஜனாதிபதிகளும், பிரதமர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் போன்றோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
அரசியல் பயணம்:
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அமெரிக்க அரசியலில் இருக்கும் கமலா ஹாரிஸை, பலரும் பராக் ஒபாமாவின் பெண் வெர்ஷன் என்றே அழைப்பார்கள். தான் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து கமலா ஹாரிஸ், ``என் வெற்றியையும் பலத்தையும் யாருடனும் ஒப்பிட விரும்பவில்லை. என் முந்தைய வெற்றியையும் செயலையும் கொண்டே என்னை அளக்க வேண்டும்” என்று அழுத்தமாகக் கூறினார்.
எனவே இந்தப் பண்பைத்தான் நாம் உணர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பெண்ணின் திறமையையும் வெற்றியையும் அளக்க ஆணின் வெற்றி அளவுகோல்கள் இனியும் தேவை இல்லை; அதற்கு நம் வெற்றி - ஒரு பெண்ணின் வெற்றிதான் தேவை. அத்தகைய வெற்றியைத்தான் கமலா ஹாரிஸ் நமக்கு தந்திருக்கிறார்.
மேலவை( Senate) உறுப்பினர் பதவி
கமலா ஹாரிஸ்,
மக்களாட்சிக் கட்சியின் சார்பாக, கலிபோர்னியாவிலிருந்து, நாட்டின் மேலவை
உறுப்பினராக நவம்பர் 2016இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம்
அமெரிக்க மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற
பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
இரண்டு நூற்றாண்டு வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட அமெரிக்காவில் ஆபிரிக்க குடியேற்ற அடிமை விடயங்கள் வலிமிகுந்த பகுதியாகும். எனினும் அவ்வலிகளைக் கடந்து அமெரிக்கா ஜனநாயக ரீதியில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருவதுடன், புதுமைகளை உருவாக்கவும் ஜோ பைடன் வெற்றி காரணமாகியது. இதனால் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதற்கான பின்னணியையும், சமகால அரசியல் தளமிட்டு கொடுத்துள்ளன. ஜனநாயகத்தின் மீதான பரந்துபட்ட பற்றையே 2020 அமெரிக்க தேர்தல் சுட்டிக் நிற்க்கின்றது. வேறு ஒரு நாட்டில் குடி பெயர்ந்து, வேறு ஒரு இனத்தை சேர்ந்த ஒருவர் உப ஜனாதிபதியாக வருவது என்பது சுலபமான காரியம் அல்ல. சமகாலத்தில் அமெரிக்காவின் மீது விமர்சனங்கள் பல இருந்தாலும், அதைத் தாண்டி இன்று ஜனநாயகம் புத்துயிர் பெற்று இருக்க காரணம் கமலா ஹாரிஸின் வெற்றியாகும். இதுகுறித்து ஆய்வாளர் இம்ரான் புர்க்கான் கருத்துப்படி " கமலா ஹாரிஸ் அடுத்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் ஒரு முன்னணி வேட்பாளராக உருவாகலாம் என தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.
சிறுவயது முதலே
மிகவும் தன்னம்பிக்கை மிக்கவராக கமலா ஹாரிஸ்
காணப்பட்டார். அதுமட்டுமன்றி
நெருக்கடிகள், சவால்களை எதிர்கொள்ளும் போது அவர் ஒருபோதும் தளர்ந்து விடவில்லை.
ஒரு தைரியமான தலைமைத்துவ பண்பாளராக கமலா ஹாரிஸ் வலம் வருகிறார். அமெரிக்காவின்
வரலாற்றை மாற்றி எழுதி இருக்கும் கமலா ஹாரிஸ், முக்கியமாக தெற்காசியாவில் தமிழ்
மொழிக்கு பெருமை சேர்ப்பதாக காணப்படுகிறார். அரிசோனா பல்கலைக்கழக பேராசிரியர் சில்க் கொக்
குறிப்பிடுவதன்படி " கமலா ஹாரிஸ் என்பவர் ஒரு சிறந்த தெரிவு அவர் ஒரு சிறந்த தலைமைத்துவ பண்பை கொண்டுள்ளதுடன் முக்கியமாக பெண்களுக்கான ஒரு தலைமைத்துவ முன்மாதிரியாக செயல்படும் ஆற்றலை கொண்டிருக்கிறார்" என்கிறார். இது அவருடைய ஆளுமைக்கு கிடைத்த பரிசாகும். காரணம் மக்களுடன் கூடுதலான ஈடுபாடு கொண்டவரும், மக்கள் மீது சிறந்த தெளிவும், புரிதலும் கொண்டவராவார். மேலும் அவருடைய கணவர் மற்றும் சகோதரி மாயா, தனது இரண்டு குழந்தைகள் என்பவர்கள் தனது பயணத்தில் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள் என கூறுகின்றார். அடுத்து 2024 தேர்தலில் முன்னிலை வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு இருக்கும் என இன்று சர்வதேச அளவில் பேசப்படுகிறது.
அமெரிக்க
ஜனாதிபதியாக உள்ள ஜோ பைடனுக்கு வரும் கைதட்டலை
விட, கமலா ஹாரிஸ்க்கு வரும் கைதட்டல்களே அதிகமாக இருப்பதை ஊடகங்களில் காணலாம். இது அவரின் தொடர் வெற்றிக்கு காட்டும் அறிகுறி.
பல சவால்களை கடந்து வாழ்வில் நல்லதொரு இடத்திற்கு வந்த கமலாதேவி சமகால மற்றும் இனி வரும் சவால்களை வென்று உலகில் ஜனநாயகப் பாரம்பரியத்தை நிலைநாட்டும் அமெரிக்காவை, இனி வரும் காலங்களில் உலக நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ செய்வார் என்பதில் ஐயமில்லை.
கமலா ஹாரிஸ் இன் அரசியல் பயணம்
இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ மாகாண வழக்கறிஞர்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். வழக்கறிஞராக பதவி வகித்த காலம் முதல் மரணதண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்.
கமலா ஹாரிஸ் 2015ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் செனட்சபைக்கு போட்டியிடுவதாக அறிவித்தார் இவரை கலிபோர்னியாவின் ஜனநாயக் கட்சி 2016 ஆம் ஆண்டு உறுப்பினர் பதவிக்காக அங்கீகரித்தது. இவர் சக ஜனநாயகக் கட்சி வேட்பாளரான லோரெட்டா சான்செஸிக்கு எதிராக போட்டியிட்டு வென்றார். செனட் உறுப்பினராக பதவி ஏற்றபின் ட்ரம்பின் பல்வேறு நடவடிக்கைகளை பொதுவெளியில் விமர்சித்தார்.
கமலா ஹாரிஸ் ஜோ பைடன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்றே தனது தாய் வழிச் சமூகத்தை பற்றி தனக்கு தெரியும் என்றும் கூறினார். அமெரிக்க தேர்தலில் வெற்றியும் பெற்று, துணை ஜனாதிபதி ஆசனத்தில் அமரும் அவர், அமெரிக்காவின் இரண்டாவது குடிமகள் என்ற பட்டத்தையும் பெற்றிருப்பது மகிழ்ச்சி ஆகும்.
அதைப்போல் ஜோ பைடனின் வெற்றியின் பின்னர் டொலாவர் பிராந்தியத்தில் தோன்றி மேடையில் அவர் உரையாற்றினார். அவர் குறிப்பிடுகையில் "நூறு ஆண்டுகளாக தமது உரிமைக்காக போராடிய பெண்களாலேயே நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது உரையில் ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல. அது ஒரு செயற்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் தான் இறப்பதற்கு முன்னர் எழுதினார். அதன் பொருள் அமெரிக்க ஜனநாயகம் உத்தரவாதமளிக்கப்பட்ட ஒன்றல்ல என்பது ஆகும். மேலும் அவர் அதற்காக போராடுவதற்கான எமது விருப்பங்களின் அளவு மட்டுமே பலமாக இருக்கிறது. அதை நாம் வழங்கப்பட்ட ஒன்றாக எடுக்கக்கூடாது. நாம் எமது ஜனநாயகத்தை போராடிப் பாதுகாக்க வேண்டுமென கூறினார் இக்கூற்றுக்கள் ஒவ்வொன்றும் உலக ஜனநாயகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கின்றன.
பெண்கள்தான்
ஜனநாயகத்தின் முதுகெலும்பாகவும், அவர்களே நூறு ஆண்டுக்கு முன்னர் வாக்குரிமையை
பாதுகாப்பதற்கான 19ஆம் திருத்தச் சட்டத்திற்காக போராடி உள்ளதாகவும், தற்போது 2020 ஆம் ஆண்டில் எமது நாட்டில் உள்ள புதிய தலைமுறை
பெண்கள் தமது வாக்குகளை அளித்து அவர்களது வாக்களிப்பதற்கான அடிப்படை உரிமைக்காக
போராடியதன் விளைவுதான் இங்கு நான் நிற்க காரணம் எனக் கூறினார்.
கமலா ஹாரிஸ் அரசியல் வாழ்க்கை குறிப்பு: காணொளி.
தொகுப்பு:
S. Vithurshan,
Special in political science (R),
University of Peradeniya.
YouTube இல் பார்வையிட இணைந்து கொள்ளுங்கள்.
Channel : Sivam vithurshan
கமலா ஹாரிஸின் அரசியல் பயணம்:









Comments
Post a Comment