தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விழிப்புணர்விற்கான அவசியப்பாடு

 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விழிப்புணர்விற்கான அவசியப்பாடு


அறிமுகம்

தனிநபருக்கு இலங்கையின் பொது அதிகாரசபைகளில் உள்ள தகவல்களை அறிந்துகொள்வதற்கான அடிப்படை உரிமையை வழங்குகின்ற சட்டம் இதுவாகும். இலங்கையின் பொது அதிகாரசபைகள் தன்னகத்தே கொண்டுள்ள பல்வேறு தகவல்கள் தொடர்பிலும் அறிந்துகொள்வதற்கான உரிமை மக்களுக்கு உள்ளது. ஆனால், எத்தகைய தகவல்களை, எத்தகைய செயல்முறை மூலம் மக்கள் பெற்றுகொள்வது என்பது தொடர்பில் பொதுவான செயன்முறையை அமுலாக்குவதன் மூலம், மக்கள் இலகுவாக தகவல்களைக் கையாள இந்த சட்டமானது நடைமுறைபடுத்தப்படுகிறது தகவல் என்பது பதிவேடுகள், ஆவணங்கள், குறிப்புகள், மின்அஞ்சல்கள், அபிப்பிராயங்கள், மதியுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றுநிருபங்கள், கட்டளைகள், சம்பவத்திரட்டுக்கள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், பத்திரிகைகள், மாதிரிகள், உருப்படிவம், கடிதத் தொடர்பு, குறிப்பறிக்கை, விரைவுச் சட்டவாக்கம்,புத்தகம், திட்டவரைபு, வரைவு, வரைபடம், பட அல்லது வரைபட வேலை, புகைப்படம், திரைப்படம், குறும்படம், ஒலிப்பதிவு, ஒளிநாடா, இயந்திரம் மூலம் வாசிக்கக்கூடிய பதிவுகள், கணணிப்பதிவுகள் மற்றும் வேறு ஆவண பொருள், உள்ளடங்கலாக அதனது பௌதீக படிவம் அல்லது, ஏதேனும் படிவத்திலான, ஏதேனும் பொருள், அதன் ஏதேனும் பிரதி என்பவற்றை உள்ளடக்குகின்றது.

இந்த தகவல்களில் மக்களின் பொதுநலனை பாதிக்ககூடிய தகவல் என தகவல் வழங்கும் அதிகாரியினால் அல்லது அரசினால் தீர்மானிக்கப்பட்டவை, அரசின் பாதுகாப்பு மற்றும் நலன்களை பாதிக்க கூடிய தகவல்கள், அரச கொள்கைகளின் இரகசியத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் தகவல்கள், ஏதேனும் தனிநபரை பாதிக்க செய்யும் தகவல் மற்றும் நாடுகளுக்கிடையிலான உறவுமுறையில் பாதிப்பை ஏற்படுத்தகூடிய தகவல்கள், நீதித்துறையினை பாதிக்கக்கூடிய தகவல்கள் போன்றவை தவிர்த்து ஏனைய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும், தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுவதற்கான அடிப்படைகள், நேர்முகப் பரீட்சைகளின் புள்ளிகள், பாடசாலை அனுமதி மறுப்புக்கான காரணங்கள், அலுவலகங்களின் உள்ளக செயற்பாடுகள் போன்ற ஏனைய விடயங்களையும் அறியலாம்.

சர்வதேச நாடுகளில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வளர்ச்சி

தகவலறியும் உரிமைச் சட்டமானது இலங்கைக்கு புதிய ஒன்றாக இருந்தாலும், 250 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலில் சுவீடன் நாட்டின் பிரஜைகள் தகவலறியும் உரிமையை அனுபவிக்க வழி ஏற்படுத்தப்பட்டது. அந்நாடு 1766 ஆம் ஆண்டில் பத்திரிகைச் சுதந்திரச் சட்டத்தை நிறைவேற்றி தகவலறியும் உரிமையானது மக்களின் அடிப்படை உரிமை என உலகிற்கு எடுத்துக் கூறியது. தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா தகவலறியும் உரிமையை சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்திய பின்னர் 1976 ஆம் ஆண்டில் மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற தகவல் பரிமாற்றம் தொடர்பான மாநாட்டில், தகவலறியும் உரிமையானது பிரஜைகளின் சமூக உரிமை எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தகவலறியும் உரிமையை தங்களது சட்டவாக்கங்களில் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தன. சார்க் பிராந்தியத்திலுள்ள இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,மாலைதீவு, நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் தகவலறியும் சட்டத்தினை கடைப்பிடிகின்றன. இந்தியாவில் 2005 ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பின் 22 ஆவது பிரிவுக்கு திருத்தம் கொண்டுவரப்பட்டதன் மூலம் தகவல் அறியும் உரிமை அந்நாட்டு மக்களுக்கான அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வரலாறு:

தகவலறியும் உரிமை சட்டத்தின் அவசியம் 1994 ஆம் ஆண்டில் இலங்கையில் உணரப்பட்டது. இதனடிப்படையில் குணசேகர தலைமையில் அமைக்கப்பட்ட குழு தகவலறியும் சட்டத்திற்கான சிபாரிசுகளை முன்வைத்தது. இனைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டில் தகவலறியும் சுதந்திர சட்டமூல வரைபினை இலங்கை சட்ட ஆணைக்குழு சமர்ப்பித்தது. இந்த வரைபானது பரவலாக விநியோகிக்கப்பட்டு இருந்தாலும்  பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படவேயில்லை. தொடர்ந்து 1997 இலும், 2002 இலும் சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முண்ணனி அரசாங்கம் முன்வைத்த அரசியல் தீர்வுத் திட்ட வரைபுகளிலும் தகவலறியூம் உரிமையானது, அடிப்படை உரிமையாக உள்ளடக்கப்பட்டிருந்தது.    

2002 ஆம் ஆண்டில், தகவலறியும் சுதந்திர சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு இரு கட்சிகள் சார்ந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. மேலும், ஊடகங்களும், சிவில் சமூக நிறுவனங்களும் அரசாங்கத்துடன் இணைந்து சட்டமூல வரைபுக்கும், வடிவமைப்புக்கும் உதவின. இந்த செயற்பாடு தகவலறியும் சட்டமூல வரைபுநகலிற்கு வழிகோலியதுடன், 2004 பெப்ரவரியில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களால் தகவல் அறியும் சட்டமூல வரைவு அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இருப்பினும் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதற்கு முன் 2004 மார்ச் மாதம் பாரளுமன்றம் கலைந்தது. இதன் காரணமாக இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய அவர்கள் 2003 ஆம் ஆண்டின் தகவலறியும் சட்டமூல வரைபினை தனிநபர் பிரேரணையாக, பாராளுமன்றில் சமர்ப்பித்தார். ஆறு மாதங்களுக்குள், தகவலறியும் சட்டமூலமொன்றை அரசாங்கம் சமர்ப்பிக்கவிருப்பதாக அப்போது ஆளும் கட்சிக் கொறடாவாக இருந்த தினேஷ் குணவர்தன தெரிவித்ததையடுத்து, கரு ஜயசூரிய, தமது சட்டமூலத்தை வாபஸ் பெற்றார். ஆனாலும் இது சார்ந்த சட்ட முயற்சிகள் எதுவும் முன்வைக்கப்படாமையால், 2011 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் மீண்டும் சட்டமூலத்தை முன்வைத்தார். எவ்வாறாயினும், அது அரசினால் தோற்கடிக்கப்பட்டது. 97 உறுப்பினர்கள் சட்ட மூலத்திற்கு எதிராகவும்இ 34 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.

இறுதியாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது 100 நாள் வேலைத்திட்ட வாக்குறுதிகளில் ஒன்றாக தகவலறியும் சட்டத்தை இயற்றலைக் குறிப்பிட்டிருந்தார். இதன் பின்னணியில் 2015 ஏப்ரல் 28 ஆம் திகதி, 19 வது திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. இதில் அரசியலமைப்பின் உறுப்புரை 14(அ) இல் தகவலறியூம் உரிமையானது பிரஜைகளுக்கான அடிப்படை உரிமைகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. உறுப்புரை 14(அ) இன் கீழ், சட்டத்தினால் அளிக்கப்பட்டவாறே இந்த உரிமை அமுலாக்கப்படக் கூடியதாகும். எனவே, தகவலறியும் உரிமை சட்டம் இல்லாத நிலையில், தகவலறியூம் உரிமை தொடர்பான அரசியலமைப்பு ஏற்பாடு பயனற்றதாகவே இருந்தது. 

எனவே தான் 2016 மார்ச் 4 இல், பாராளுமன்றத்தினால் தகவலறியூம் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டதுடன், 2016 ஆகஸ்ட் 4 ஆம் திகதி சபாநாயகர் ஒப்பமிட்டதன் மூலம் அது சட்டமாக மாறியது. அதன்பின் 2018ஆம் ஆண்டின் உலக தகவலறியும் உரிமைச் சட்ட தரவரிசை பட்டியலில் இலங்கைக்கு 4ஆம் இடம் கிடைத்தது. இது இச் சட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். 


தகவலறியூம் உரிமைச் சட்டமும் அதன் நோக்கமும்:

தகவல் அறியூம் உரிமையானது மக்களுக்கான அடிப்படை உரிமையாக பல்வேறு நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும்இ 19 ஆம் திருத்தச் சட்டத்திற்கு பின்னர், அரசியலமைப்பின் உறுப்புரை 14(அ) இன் மூலம் தவலை பெறுவதற்கான உரிமையானது ஓர் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தகவலறியும் உரிமைச் சட்டமும் இலங்கைப் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டுள்ளது. ஏதோ ஒருவகையில் ஒவ்வவொருவரும் வரி செலுத்துபவர்கள் என்ற முறையில், அவர்கள் செலுத்தும் பணத்திற்கு என்ன நடக்கின்றது என்பதை அறிவதற்கு உரிமை இருக்கின்றது.

அதனால் தகவல் அறியும் உரிமையானது நாட்டில் பணத்திற்கு என்ன நடக்கின்றது, அல்லது அப்பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது, பிரதிபலன் எவ்வாறு அமைகின்றது போன்ற விடயங்கள் தொடர்பாக, அந் நாட்டின் பிரஜைக்கு விடயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது. தகவலறியும் உரிமையை உறுதிப்படுத்தப்படுத்துவதன் மூலம் பின்வரும் நோக்கங்களை அடையக்கூடியதாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1. பகிரங்க அதிகார சபைகளின் வெளிப்படைத் தன்மையை பேணலாம். 

2. பொறுப்புக்கூறும் பண்பாட்டைப் பேணி வளர்க்கலாம்

3. மக்கள் ஊழலை எதிர்த்து நிற்கும் பொறிமுறையை தாபிக்கலாம்.

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியூம் உரிமைச் சட்டம்:

இச்சட்டத்தின் பிரிவு  2இன் படி, தகவலறியும் சட்டத்தினை அமுல்படுத்தும் பொறுப்பு வெகுசன ஊடக அமைச்சிற்கு உரியதாகும். இச்சட்டத்தின் பிரிவு-3 இன் படி, பிரசை ஒவ்வொருவரும், ஒரு பகிரங்க அதிகாரசபையின் உடைமையை, கட்டுக்காப்பில் அல்லது கட்டுப்பாட்டில் இருக்கின்ற தகவலைப்பெற அணுகுதலுக்கான உரிமையொன்றைக் கொண்டிருக்க வேண்டும். இச் சட்டத்தினை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்த பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டத்தின் பிரிவு 7இன் படி, அமைச்சுகள், திணைக்களங்கள், பகிரங்கக் கூட்டுத்தாபனங்கள், உள்ளுராட்சி; மன்றங்கள், அரசாங்கத்தினால் பொருளளவில் நிதியளிக்கப்படுகின்ற அரச சார்பற்ற ஒழுங்கமைப்புகள், உயர்கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், நியாயசபைகள் மற்றும் ஏனையவை தகவல் அணுகலை வழங்கக்கூடியதாகவும், பதிவேடுகளை பராமரிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அவர்கள் அனைத்து பதிவேடுகளையும் மின்னணு வடிவத்தில் பாதுகாக்க முயல வேண்டும்.

மேலும் பிரிவு  8 ஆனது, ஒரு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஒருவர்இ ஒவ்வோர் ஆண்டும் முறையே யூன் 30 ஆந் திகதிக்கும் டிசெம்பர் 30 ஆந் திகதிக்கும் முன்னராக, ஆண்டுக்கு இரு தடவைகள் தமது அமைச்சுப் பற்றிய தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்தும் வண்ணம் அறிக்கை வெளியிட வேண்டும் என  கூறப்படுகின்றது. பிரிவு 9 இன் படி, அரசானது ஏதேனும் செயற்றிட்டங்களை தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் அது பற்றி பொது மக்களிற்கு அறிவிக்க வேண்டும் என்பதுடன் குறித்த செயற்றிட்டம் தனிநபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருப்பின் அவர்களுக்கும் அது பற்றி தெரியப்படுத்துதல் வேண்டும். 

பிரிவு 11 ஆனது, தகவலுக்கான உரிமை ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படல் வேண்டும் எனவும் ஆணைக்குழுவானது, அரசியலமைப்புப் பேரவையின் விதப்புரை மீது சனாதிபதியினால் நியமிக்கப்படும் ஐந்து(05) ஆட்களைக் கொண்டமைதல் வேண்டும். அரச நிறுவனம் ஒன்றிலிருந்து தகவல் ஒன்றைப் பெற்றுக்கொள்ள பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கை முறை பற்றி இனி கவனம் செலுத்துவோம். தகவல் அலுவலர் இயன்றளவு விரைவாகவும், 14 வேலை நாட்களுக்கு மேற்படாமலும், கோரப்பட்ட தகவலை வழங்க அல்லது கோரிக்கையை நிராகரிக்க முடிவு செய்ய வேண்டும். கோரிக்கையானது நிராகரிக்க முடிவு செய்தால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தகவல் அலுவலர் கோரிக்கையை விடுத்த பிரசைக்கு அறிவிக்க வேண்டும். தகவலை வழங்க முடிவு செய்தால், அத்தகைய முடிபு எடுக்கப்பட்டதிலிருந்து 14 நாட்களினுள் குறித்த தகவல் பிரஜைக்கு அளிக்கப்படுதல் வேண்டும்.

தகவலுக்கான கோரிக்கையானது, ஒரு பிரசையின் உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துடன் சம்மந்தப்படுகின்றவிடத்து, அதற்கான பதிலளிப்பு கோரிக்கை கிடைக்கப்பெற்றதிலிருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்குள் செய்யப்படுதல் வேண்டும். பிரஜை ஒருவர் கோரும் தகவலானது மூன்றாம் நபருடன் தொடர்புடையதாக இருப்பின், தகவலை வழங்குவதா? வேண்டாமா? என்பது பற்றி 7 நாட்களுக்கு அறிவிக்கும் படி, தகவல் அலுவலர் மூன்றாம் நபரை கோருதல் வேண்டும். மூன்றாம் நபர் தகவலை வழங்க சம்மதியாதுவிடின் தகவலை வழங்கக்கூடாது. மாறாக மூன்றாம் நபர் சம்மதித்தாலோ அல்லது பதில் தராவிட்டாலோ அத்தகவலை வழங்க வேண்டும்.

மேன்முறையீடுகள்:

தகவல் அலுவலரினால் தரப்பட்ட காரணங்களுடன் திருப்திப்படாத பிரசையொருவர், தகவல் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு ஒன்றை முன்வைக்கலாம். அதே போல் ஆணைக்குழுவின் முடிவினால் பாதிக்கப்பட்ட பிரசையொருவர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதன் முடிவுக்கெதிராக மேன்முறையீடு செய்யலாம்.

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு தகவல் அறியூம் சட்டத்தின் தேவைப்பாடு

அபிவிருத்தி அடைந்துவரும் நாடு அல்லது அபிவிருத்தி அடைந்த நாடு என்ற ரீதியில் அந்நாட்டிலுள்ள குடிமக்களுக்கு நாட்டின் அலுவலகர்களின் செயற்பாடுகள் குறித்து அறிவதற்கு உரிமை உண்டு. ஆனாலும் மக்களுக்கு இது குறித்து தெளிவு இருக்கிறதா என்பது குறித்து சந்தேகம்தான். மேற்கத்திய நாடுகளில் மக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு உண்டு. அதாவது மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தியே ஒரு அரசு இயற்குகிறது. அரசை இயக்கும் அரசியல்வாதிகளும் மக்களின் பணத்தின் ஊடாகவே செயற்படுகிறார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் இயற்றும் திட்டங்கள் செம்மையாக நடைபெறுகிறதா என்பதை, இச்சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் அறியலாம்.

எமது நாட்டில் தகவல் அறியும் சட்டத்தின் அவசியம் குறித்து பிற்காலத்திலேயே மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது. ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தகவல்களை அறிவதற்கு உரித்துடையவர் என்பது அடிப்படையான விடயம். எமது நாட்டில் கடந்த எழுபது வருடங்களில் மக்களின் தேவைகளை வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள ஆக குறைந்தளவான செயற்பாடு இதுவாகும். 1972 ஆம் ஆண்டு ஜனநாயக சோஸலிச குடியரசின் அரசியலமைப்பில் முதலாவது மக்களின் அடிப்படை உரிமை குறித்ததான சட்டவிதிகள் உள்ளடக்கப்பட்டன. இது பலன்தரக் கூடியதான போதிய தௌவு இருக்கவில்லை. ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்படும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தெளிவான ஒழுங்கு விதிகள் இருக்கவில்லை. 

ஆனாலும் 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பில் மக்களின் அடிப்படை உரிமை குறித்ததான தெளிவான சட்டவிதிகள் உள்வாங்கப்பட்டன. இதனடிப்படையில் ஒருவரின் அடிப்படை உரிமை மறுக்கப்படும் பட்சத்தில் அவர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யலாம். ஆனாலும் உயர் நீதிமன்றத்திற்கு போவதற்கு வசதிவாய்ப்புகளுடன் செலவிட நிதியும் இருக்க வேண்டும். எமக்கு ஒரு திறந்த உண்மையானாலும் அது இலகுவானதாக இருக்கவில்லை. எமக்கு இருந்த இச்சிரமங்கள் தற்போதைய தகவல் அறியும் சட்டத்தினூடாக குறைந்துள்ளன. ஏளிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சொல்லலாம்.

பகுப்பாய்வு:      

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் 14 (அ) பிரிவின் மூலம் உத்தரவாதமளிக்கப்படும் தகவல் அறியும் உரிமையை வலுப்படுத்துவதன் மூலம் பொது நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுகளை வளர்ப்பதற்கான நோக்கத்துடன் தற்போதைய சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொது நலன்களை அடைவதற்கே அதன் நோக்கம் இருந்தது. நன்கு அறிந்த சமுதாயத்தை உருவாக்கி, மக்களுக்கு பொறுப்புணர்வு, நல்ல ஆட்சி மற்றும் ஊழல் மற்றும் லஞ்சம் ஆகியவற்றினை  மூலம் நீக்கல் போன்றன அடையப்பட வேண்டும், புள்ளிவிவரங்கள் பொது ஆர்வமுள்ள விடயங்களைக் காட்டிலும் தனிப்பட்ட நலனுக்காக தகவலறியும் உரிமைச் சட்டம் அதிகமானதாக பயன்படுத்தப்படுகின்றது. 

இந்த போக்கு மாற்றப்பட வேண்டும். நடைமுறையில், தகவல் அறியூம் உரிமை முறையீடுகளில் 50 சதவிகிதத்திற்கும் மேலானவை தனிப்பட்ட இயல்புடன் தொடர்புபட்டவையாகும். கிட்டத்தட்ட 27 சதவிகிதம் மனித வள முகாமைத்துவத்துடனான நியமனங்கள், இடமாற்றங்கள், வேலைகள் தொடர்புடையவை ,மற்றும் 20 சதவிகிதம் நிலம் மற்றும் சொத்து தொடர்பானவை. தகவலறியும் உரிமை என்பது முழுமையான சுதந்திர உரிமையல்ல. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்கள் பற்றிய தகவல்களை மட்டுமே இதன் மூலம் அறிய முடியும். தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்கள், தனிப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தத்தக்கூடி விடயங்கள், வர்த்தக நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட பிரத்தியேகத் தகவல்கள் போன்றவற்றை இந்தத் தகவல் அறியும் உரிமையின் கீழ் அறிய முடியாது. 

நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்குத் தேவையான பல சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நிர்வாக நடவடிக்கைகளுக்கான சட்டங்களும் பல்வேறு தேவைகளுக்குமான சட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. ஆயினும் இந்தச் சட்டங்கள் குறித்த விபரங்களைப் பொது மக்கள் அறிந்திருப்பதில்லை. இதனால் பல சட்டங்கள் இருந்தும், அவற்றால் பொதுமக்களுக்குப் பயன் ஏற்படாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

பல தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சட்டங்களில் வழி செய்யப்பட்டுள்ள போதிலும், அந்தச் சட்டங்கள் பற்றிய விபரங்களை அறியாமல் தெளிவற்றிருப்பதனால், பொதுமக்கள் நன்மையடைவதில்லை. சில வேளைகளில் அவர்கள் பாதிப்படைகின்றார்கள். தகவல் அறியும் சட்டம் என்பது மிக முக்கியமான சட்டமாகும். இது முழுக்க முழுக்க பொதுமக்களின் நன்மை கருதி, அவர்கள் பயனடைவதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள சட்டமாகும். தகவல்களை அறிந்து கொள்கின்ற உரிமை இந்தச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்படும் போது, அதிகாரிகள் அரச திணைக்களங்கள் சிலவேளைகளில் சிரமங்களுக்கும் கஸ்டங்களுக்கும் உள்ளாகலாம். ஆனால், இதனால் பொதுமக்கள் ஜனநாயக ரீதியாகவும் பெரிதும் பயனடைகின்றார்கள். அதுமட்டுமன்றி, அதிகாரிகள் வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்கு, ஊழல்கள் மோசடிகளைத் தடுப்பதற்கும், இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழி வகுத்திருக்கின்றது.

அதேவேளை தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்து பின்னர் தாயகம் திரும்பியுள்ள தமிழ்மக்கள், வடபகுதி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் எழுந்துள்ள காணி உரிமைப் பிரச்சினை தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நிலைப்பாடு, இராணுவம் கைப்பற்றி வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான தகவல்களை அறியும் உரிமை தொடர்பிலான நிலைப்பாடு, இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்டும் வேறு பல வழிகளில் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் பற்றிய புள்ளிவிபரத் தகவல்களைத் தெரிந்து கொள்வதில் இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நிலைப்பாடு என்பது தெளிவில்லாமல் போய் விட்டது. தேசிய பாதுகாப்பு என்ற போர்வைக்குள் இராணுவம், பொலிஸ் மற்றும் பிரதான அமைச்சுக்கள் சிலவற்றின் விபரங்களை ஊடகவியலாளர்கள் உட்பட யாரும் பெறமுடியாது. 

அத்துடன், காணாமல் போனோர், கடத்தப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை உறவினர்கள், நண்பர்கள் பொலிஸ் நிலையங்களில் அல்லது இராணுவ முகாம்களில் சுநத்திரமாக பெறக்கூடிய ஏற்பாடுகளும் இந்தச் சட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. சமூகவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாகுவது, காயப்படுவது, உயிரிழப்பது போன்ற தகவல்களை உறவினர்கள் அல்லது நண்பர்கள் பெறமுடியுமா என்பது பற்றியும் சரியாக குறிப்பிடப்படவில்லை.

ஆகவே, 17ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஏற்பட்ட நிலைமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஏனெனில், தகவல்களைப் பெறுவதற்கு சாதாரண பொதுமக்களுக்கு சட்ட உரிமை வழங்கப்படுவதை அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள் என்பது கண்கூடு. அரச நிறுவனங்கள், திணைக்களங்களில் பாதிக்கப்படும் மக்கள் ஒம்புட்ஸ்மன் எனப்படும் குறைகேள் அதிகாரியிடம் நேரடியாக முறையிட்டு உதவிகளை பெறமுடியும். 1994ஆம் ஆண்டு இந்தச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் தொடர்பான அறிவு பொதுமக்களிடம் இருக்கின்றதா? ஒம்புட்ஸ்மன் அலுவலகம் எங்கே அமைந்துள்ளது என யாருக்குமே தெரியாது. அது தொடர்பான விழிப்புணர்வை அரசாங்கம் செய்வதும் இல்லை. இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் எவ்வளவு தூரம் சாத்தியமாகும்? என்று பார்ப்போம்.

உசாத்துணை பட்டியல்.

“தகவல்; உரிமைச் சட்டம்-19 ஆம் சீர்திருத்தம்”, 2016)

இலங்கை தகவல் உhpமைக்கான ஆணைக்குழு”, (Right to information commision of Srilanka), web: http://www.rticommission.lk/web/index.php?lang=ta.

BBC News: “,இலங்கையில் தகவல் அறியூம் உரிமை சட்டம் இன்றிலிருந்து அமுல், Web:https://www.bbc.com/tamil/sri-lanka-38855191(3 February 2017).

RTI News: “தகவல் அறியூம் உரிமைச்சட்டம் காணாமல் போனோரைக் கண்டுபிடிக்குமா?”, Web:https://tamil.rti.gov.lk/media-wall/news/141-2017-02-16-11-21-05, (07 February 2017).

இலங்கை பாராளுமன்றம், தகவலுக்கான உரிமை, web:https://www.parliament.lk/ta/get-involved/right-to-information.

இணைப்பு:தகவல் உரிமை சட்டம், பாராளுமன்ற சட்டம். 

English:

https://drive.google.com/file/d/1XdZU8e4lPIMA9S7qAFFJDyPQ1Emh3n4j/view?usp=drivesdk

Tamil:

https://drive.google.com/file/d/1Xm81DhCJ3wWNxfe666NVp3FNNYQuaeYI/view?usp=drivesdk

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் உள்ளுராட்சி நிறுவனங்களின் பொறுப்புக்கள்-அறிக்கை 

https://drive.google.com/file/d/1XapBup_bb0pTHSdJKubpX8SUBL9WS0dq/view?usp=drivesdk

தகவல் பெறுவதற்கான விண்ணப்பம். 

https://drive.google.com/file/d/1XfY6aLNFXPREL50eM6IAD8IXfZF0zJht/view?usp=drivesdk 

தொகுப்பு:

சி.விதுர்ஷன்.

அரசியல் விஞ்ஞானத்துறை (நான்காம் வருடம்).

கலைப்பிரிவு 

பேராதனை பல்கலைக்கழகம்.



Comments

  1. சமூகத்திற்கு தேவையான பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோல்புறூக்-கமரன் அரசியல் சீர்திருத்தம் (1833-1910).

மனித உரிமையின் வரலாற்று வளர்ச்சி ஒரு தொகுப்பு

மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம்:1924-1931